ஆதிகால மனித குரல் – குகை ஓவியம்.

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , ,

ஆதிகால மனிதனின் தொல் எச்சங்களில் ஒன்று குகை ஓவியம் ஆகும். கற்கால மனிதன் வரைந்தவை இவை. மலை, மலை இடுக்கு, பாறை கூறை முதலியவற்றில் ஆதிகால மனிதன் தனது ஓவியங்களை வரைந்தான். இந்த ஓவியங்கள் அந்தகால நடப்புகளை நமக்கு சுட்டிக்காட்டி நிற்கிறது. ஆதிகால மனிதனின் வாழ்வை நமக்கு உணர்த்துகிறது,  மலைகுகைகள் தாம் கற்கால மனிதனின் உறைவிடமாக திகழ்ந்தது. குகைகள் சுற்றும் முற்றும் உள்ள பகுதியை விட சற்றே உயரமாக அமைந்தது. இதனால் மனிதன் கொடிய விலங்குகளிடமிருந்து தன்னை பாதுகாத்து கொள்ள முடிந்தது. உயரமான மலையில் விலங்குகள் பின்புறமாக மனிதனை தாக்குவது கடினம். மலை அடிவாரத்தில் எப்படியும் நீர் தேக்கம் இருக்கும். மழை நீர் தேங்கிய குட்டை, நீர் ஓடும ஓடை, ஆறு என நீர் வரத்து இருக்கும். நீர் பருக விலங்குகள் வரும். அப்போது விலங்குகளை வேட்டை ஆடுவது எளிது. குகை, பாறை கூரை முதலிய மழை மற்றும் வெயில் முதலியவற்றிலிருந்து பாதுகாப்பு தரும். எனவே தான் கற்கால மனிதர்கள் மலைக்குகைகளில் வாழ்ந்தார்கள்.

 இன்றும் ஆதிவாசி மக்கள் தமது வீட்டில் ஓவியம் வரைந்து அழகு படுத்துவது வழமை. ஒருகால் அவ்வாறுதான் ஆதிகால மனிதன் தனது குடியிருப்பான மலைக்குகைகளில் ஓவியம் தீட்டினானோ என்னோவோ. மனிதகுல தாயகமான ஆப்பிரிக்காவில் தான் இதுவரை தொன்மையான குகைஓவியம் கிடைத்துள்ளது. தென் ஆப்பிரிகவில், கேப்டவுன் அருகே பலம்போஸ் (Blombos) குகைகளில் இந்த குகைஓவியம் கண்டுபிடிக்கபட்டுள்ளது. சுமார் எழு லட்சம் வருடம் பழைமை வாய்ந்தவை இந்த ஓவியங்கள். உள்ளபடியே இவை வெறும் கிறுக்கல் கோடுகள் தாம். சித்திர ஓவியங்கள் இல்லை.

கற்கால குகைஓவியம் 

இன்று உலகின் பல பகுதிகளில் குகைஓவியம் கண்டுபிடிக்கபட்டுள்ளது. கற்கால ஓவியங்களில் மனித சித்திரம் மிக அரிதாகவே காணப்படுகிறது. விலங்குகள், கோடுகள், பாங்கு கொண்ட கோடுகள் முதலிய தாம் மிகுந்து நிற்கின்றன. அந்தகால நிகழ்வுகள் ஓவியங்களில் பதியப்பட்டுள்ளன. வேட்டையாடுதல், விலங்குகளை பழக்குதல், விலங்குகள் இடம்பெயர்தல், போர், விவசாயம் முதலிய செயல்கள் ஓவியங்களில் காணப்படுகிறது. மனிதர்கள் கூட்டாக விலங்குகளை, குறிப்பாக பெரும் ஊருவு கொண்ட விலங்குகளை வேட்டை ஆடுவது சித்தரிக்கப் பட்டிருக்கிறது. யானை, காட்டு எருமை, மான் போன்ற மிருகங்கள் வேட்டையாடுவது சித்திரத்தில் உள்ளது. காட்டு எருமை முதலிய தத்ருபமாக சித்தரிக்கபட்டுள்ளது. எக்ஸ்ரே படம் போல சில சித்திரங்களில் விலங்குகளின் உள்பாகம் வரையப்பட்டுள்ளது. மிருகங்களை வேட்டையாடிய மனிதன் அதன் பொருட்டு தான் அறிந்த விலங்கு இயல் பாலபாடம் என இதனை எடுத்துக்கொள்ளலாம்.

பல நூற்றாண்டுகள் இக்குகைக்களில் வாழ்ந்த மனிதன், தனது சமுக மாற்றத்திற்கேற்ப அவன் தீட்டிய ஓவியங்களின் விசயமும் மாறியது. எனவே காலபோக்கில் மாறிய ஓவியங்களின் செய்தி சமுக மாற்றத்தின் சாட்சியாக அமைகிறது. ஆதிகால ஓவியங்களில் வேட்டையாடுதல் அதுவும் கூட்டாக வேடியாடுவது காணப்படுகிறது. காட்டு காய் கனி சேகரித்தல் காணப்படுகிறது. இடைக்கால ஓவியங்களில் விவசாயம், நாய் முதலிய வளர்ப்பு மிருகங்கள் காணப்படுகிறது. பிற்கால ஒவியங்களில் தான் போர், குதிரை மீது அமர்ந்த போர்வீரன், மனிதன் மனிதனை கொல்வது போன்ற சித்திரங்கள் உள்ளன. இந்த ஓவியங்களிளிருந்து கற்கால நாகரிகம் வளர்ந்த போக்கினை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. வேட்டை சமுகம் விவசாய சமுகம மாறியது, பின்னர் விவசாயம் வளர வளர நாடு நகரம் என வளர்ச்சி ஏற்பட்டு தனி உடமை சமுகம் ஏற்பட்டது என்ற போக்கு விளங்குகிறது.

ஆதிகால ஓவியங்களில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் மட்டுமே காணப்படுகிறது. இரும்பு ஆக்சைடு பொருட்கள் சிவப்பு நிறமி ஆக பயன் தந்தது. சிலவகை களிமண் வெண்மை நிறமியாக பயன் தந்தது. இப்பொருட்கள் எளிதில் ஆதிகால மனிதனுக்கு நிலப்பரப்பின் மேலே கிடைத்தது. மனிதன் கல் ஆயுதம் செய்து நிலத்தை தோண்டியபோது அவர்களுக்கு நிலக்கரி போன்ற வேறு பொருட்களும் கிடைத்தன. எனவே இடைக்கால ஓவியங்களில் கருப்பு போன்ற நிறங்கள் பயன் படுத்தப்பட்டது. கற்காலத்திற்கு பின் வளர்ந்த உலோக காலதில் உலோகங்கள் பயன்பாடு அதிகரித்தது. செம்பு முதலிய துரு பிடிக்கும்போது நீல நிறம் கொண்ட காப்பர் ஆக்சைடு பொருட்கள் உருவாகும். இவை கொண்டு பிற்கால ஓவியங்களில் நீல நிறம் தீட்டப்பட்டது.

கலாச்சாரம் உருவான பின்னரே நவீன மனிதன் பிறப்பு எடுத்தான் என்பது மானுட ஆய்வாளர் கருத்து. குகை ஓவியங்கள் தாம் நம்மக்கு கிடைத்துள்ள தொன்மையான கலாச்சார எச்சம். கோடுகள் கிறுக்குதல், ஓவியம் தீட்டல் முதலிய மனிதன் தன்னை மிருகங்களிடமிருந்து வித்தியாசப்படுத்தி கொண்டதை சுட்டுகிறது.

ஏன் மனிதன் குகை ஓவியங்கள் வரைந்தான்?

சில ஆய்வாளர்கள் ஓவியங்களை அந்தகால சடங்கு என மதிப்பிடு செய்கின்றனர். ஓவியங்களில் சுமார் 15% விலங்குகள் காயம் பட்ட நிலையில்காணப்படுகிறது உற்றுநோக்க வேண்டிய விஷயம். வேட்டையாடுவது என்பது எளிதள்ள. உயிர் கொடுத்து தான் வேட்டை ஆடவேண்டும். எனவே வேட்டை ஆடுவதற்கு முன்பு தன்னது வேட்டை வெற்றி அடைய வேண்டும் என விரும்பி அந்தகால பூசாரி செய்த மந்திர சடங்கு தான் இந்த ஓவியங்கள் என இவர்கள் புரிந்துகொள்கின்றனர், இந்தகால கோவில்கள் போல அந்தகால குகைகள். படையல் செய்கையே ஓவியங்கள் என இவர்கள் கருதுகின்றனர்.

பல ஓவியங்கள் வேட்டை ஆடுவதை சித்திரமாக காட்டுகிறது. அனால் இந்த புரிதலில் சில பிரச்சினைகள் உள்ளன. பல ஓவியங்களில் வேட்டை ஆடப்படும் மிருகம் உள்ளபடியே உணவிற்க வேட்டையாடப்படும் விலங்குகள் அல்ல. அந்த மிருகங்களால் மனிதனுக்கு எவ்வித பயனும் இல்லை.

சடங்கு என்றால் ஏன் இந்த விலங்குகள் சித்திரமாக உள்ளது? 

சிலர் இந்த ஓவியங்கள் அடுத்த தலைமுறைக்கு பயிற்சி தருவதற்காக, வேட்டை ஆட்டுவது எப்படி என விளக்குவதற்காக, தீட்டப்பட்டவை என கூறுகின்றனர். மேலும் ஆதிவாசிகள் தமது வீட்டினை அழகுபடுத்த சுவரில் ஓவியம் தீட்டுவது வழமை. அதுபோல அழகு படுத்துவதற்காக தீடபட்டதே குகை ஓவியங்கள் என சிலர் கூறுகின்றனர். தமிழகத்தில் வீடு வாசலில் கோலம் இடுவது அழகு படுத்தான். கோலம் என்பது கோடுகள், பாங்கு அமைப்பு என்பதை நினைவில் கொள்க.

குகை ஓவியங்களில் கை ஓவியம் பிரசித்தி. கைகளில் சாயம் பூசி அப்படியே குகை சுவரில் பதிந்து விடுவார்கள். பொதுவாக சிவப்பு நிற சாயம் இருக்கும். எனினும், வெள்ளை முதலிய நிற கை பதிவுகளும் காணப்பட்டிருக்கின்றன. பிற்காலத்தில், கையை குகை சுவற்றில் வைத்து பின்னர் குழல் மூலம் நிற சாயத்தினை பீச்சி கை ஓவியம் பதியப்பட்டது. பல நூறு கை ஓவிய பதிவுகள் இதுவரை கண்டுபிடிக்கபட்டுள்ளது.

நவீன புலன் விசாரணை சோதனை கொண்டு இந்த கை ஓவியங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்து பார்த்தனர். கை ஒவிங்களிலிருந்து விரல் நீளம், கை அகலம், சுட்டு விரல், மோதிர விரல் முதலிய விரல்களின் பரிமாணம் என விவரங்களை சேகரிக்கலாம். இந்த விரல், கை விவரங்களிலிருந்து அந்த கை ஆண் அல்லது பெண் சார்ந்தது என்பதை அறிந்துகொள்ளலாம். விரல் விவரங்கள் நபரின் வயதை சுட்டும். இவ்வாறு சேகரிக்கப்பட்ட கை ஓவிய விவரங்களிலிருந்து கை ஓவியம் தீட்டிய நபரின் பால், வயது முதலிய விவரங்களை அனுமானிக்கலாம். இவ்வாறு ஆராய்ந்து பார்த்ததில், கை ஓவியம் தீட்டிய நபர் இரு பால் சார்ந்தவர்கள் எனவும், எல்லா வயதை சார்ந்தவர்களும் அடங்கினர் என்பதும் விளங்கியது. ஆயினும் பெரும்பாலான கை ஓவியங்கள் பதின்பருவ (டீன் ஏஜ் adolescent) பிராயத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் விஞ்ஞானிகள் குகை ஓவியம் குறித்த புதிய சிந்தனையை உருவாக்கி உள்ளனர்.
பதின்பருவ இளைஞர்கள் சுவரில் கிறுக்குவது உலகம் முழுவதும் காணப்படும் பழக்கம். சுவரில், பாலங்களின் மேல், சுரங்கபாதையில், குறிப்பாக கழிவறைகளில் பதின்பருவதினர் கிறுக்குவதும் ஓவியம் வரைவதும் வழமை. பொது இடங்களில் கிறுகுதல் சுவரெழுத்து செய்தல் என்பது நாம் காணும் நடப்பு. நடப்பு காலத்தில் மட்டுமல்ல, முற்காலத்திலும் இவ்வாறு பதின்பருவதினர் கிறுக்கல் செய்வதை வரலாற்று அறிஞர்கள் கண்டுள்ளனர். எகிப்து மற்றும் ரோம தொல் எச்சங்களில் இவ்வாறு அந்தகாலத்தில் செய்யப்பட்ட சுவரெழுத்து கிறுக்கல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக குகை ஓவியங்கள் பெரும்பாலும் பதின்பருவதினர் அன்று பொழுதுபோக செய்த கிறுக்கல்கள் தாம் என சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பீம்பேட்கா குகை ஓவியங்கள் 

இந்தியாவிலும் கற்கால குகை ஓவியங்கள் உள்ளன. தமிழகம், கர்நாடக முதலிய இடங்களில் சில குன்றுகளில் கற்கால குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆயினும் இந்திய குகை ஓவியங்களில் மிக பிரசித்தி பெற்றது மத்ய பிரதேசத்தில் உள்ள பீம்பேட்கா குகை ஓவியங்கள் ஆகும்.

போபால் நகரின் அருகே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் இந்த பீம்பேட்கா குன்றுகள் உள்ளன. ஐம்பது அறுபது குன்றுகள் அடங்கிய பகுதி இது. மணல்படிவ கற்கள் நிறைந்த குன்றுகள் இவை. சஹாயத்ரி மலை தொடர் சார்ந்த குன்றுகள் இவை. இக்குன்றுகளில் குகைகள் அடர்த்தியாக காணப்படுகின்றன. சுற்றும் முற்றும் அடர்ந்த காடுகள். கற்காலத்தில் இக்காட்டில் வசிக்கும் விலங்குகளை வேட்டையாட கற்கால மனிதன் இங்கு குடியேறியுள்ளான்.

1888ல் பீம்பேட்கா குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. 1957 வரை அவ்வளவாக எவரும் இது குறித்து சிந்தனை செய்யவில்லை. 1972ல் தான் முதன்முதல் அகழ்வாராய்ச்சி நிகழ்த்தப்பட்டது. பெருங்கற்காலம் சார்ந்த குகை ஓவியம் என உறுதி செய்யப்பட்டது. இன்று இந்தியாவில் 700 குகை ஓவிய எச்சங்கள் கண்டுபிடிக்கபட்டுள்ளன. இவற்றில் 250 பீம்பேட்கா பகுதியில் உள்ளது.
பீம்பேட்கா ஓவியங்கள் பெரும்பாலும் குகையின் நுழைவாயிலில் உள்ளது. எனவே காலம் தோறும் மழை வெயில் முதலியவற்றில் பட்டு சிதைந்து விட்டது. சற்றே எச்சம் தான் மிஞ்சியுள்ளது. சில குகை மற்றும் பாறை கூரையின் உள்புறமாக அமைந்த ஓவியங்கள் நன்கு பாதுகாப்பாக உள்ளது. இந்தியாவில் ஏனைய இடங்களில் உள்ளது போலவே இங்கும் சிவப்பு நிறமே மேலோங்கி உள்ளது. இரும்பு ஆக்சைடு கொண்டு சிவப்பு நிறமும், கவோலின் எனப்படும் களிமண் கொண்டு வெள்ளை நிற சாயமும் செய்துள்ளனர். பச்சை மற்றும் மஞ்சள் நிறமும் உள்ளது. இவை காப்பர் ஆக்சைடு வேதி பொருட்களிலிருந்து தயரிக்கப்பட்டவை. மாங்கனிசு மற்றும் நிலக்கரி கொண்ட நிறமி வெகு அரிதாக தான் காணப்படுகிறது. ஓவியங்கள் விரல் கொண்டுதான் பெரும்பாலும் தீட்டப்பட்டுள்ளன. சில பறவை இறகு, கழி மற்றும் எலும்பு கொண்டு தீட்டப்பட்டுள்ளன.

விலங்குகள் மெய் காட்சி போல வரையப்பட்டுள்ளது. ஆனால் மனிதர்கள் குச்சி ஓவியமாக தான் உள்ளனர். முப்பது விதமான விலங்குகள் இந்த ஓவியங்களில் உள்ளன. மான் மயில், நாய், பசு, குதிரை, எருது, எருமை போன்ற விலங்குகள் இங்கு ஓவியங்களில் காணப்படுகிறது. இந்த ஓவியங்களில் கற்பனைத்திறன் மற்றும் அழகியல் அற்புதமாக காணக்கிடைக்கிறது. தும்பிக்கை யானையை சுட்ட, நீண்ட இறகு மயிலை சுட்டி, அழகுபடுதப்பட்ட கொம்பு பெண் மானை சுட்டி என அழகியல் இந்த ஓவியங்களில் காணக்கிடைக்கிறது. கர்பிணி விலங்குகள் அவற்றின் கரூ உடன் வரையப்பட்டிருக்கிறது.

சிங்கதிடமிருந்து ஓடும் மான், வேட்டையிலிருந்து தப்பிக கூக்குரலிடும் விலங்குகள், காட்டு பன்றியி டமிருந்து தலைகால் தெரியாமல் ஓடும் மனிதர்கள், இளம் ஆண் பெண் சேர்ந்து கை கோர்த்து நடனமாடும் காட்சி,, வேனிற்காலத்தில் இடம்பெயரும் விளங்குகூட்டம் என அந்தகால இயல்பு நடப்புகள் இந்த ஓவியங்களின் பொருளாக உள்ளன. ஆதி கால ஓவியத்தில் வேட்டையாடுதல், காட்டு காய் கனி சேகரித்தல் என்பன காணப்படுகிறது. இடைக்கால ஓவியங்களில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு காணப்படுகிறது. நாய் வீட்டு விலங்காக மாறி வேட்டைக்கு உதவும் காட்சி உள்ளது. பின்னர் கத்தி, வாள் முதலிய போர் கருவிகள் காணப்படுகின்றன. இந்த பீம்பேட்கா நாகரிகம் சுமார் 20000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தவை என ஆய்வாளர்கள் மதிப்பிட்டு செய்துள்ளனர்.

அழிந்துபட்ட விலங்கு குகை சித்திரதிலே 

ஆஸ்திரேலியாவில் முன்பு வாழ்ந்த ஆஸ்திரேலியா சிங்கம் எனப்படும் தய்லகொலெ கார்நிபெக்ஸ் எனும் விலங்கு இன்று இல்லை. இந்த விலங்கு சுமார் 30000 வருடம் முன்பே அழிந்துபட்டுவிட்டது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இவற்றின் தொல் எச்ச எலும்புகள்ளே இன்று நமக்கு கிடைகிறது. ஆஸ்திரேலியா குகை ஓவியங்களில் ஓரிடத்தில் இந்த சிங்கத்தின் ஓவியம் காணப்படுகிறது சிறப்பு செய்தி ஆகும். சுமார் 40000 ஆண்டுகளுக்கு முன்னால் நவீன மனிதன் ஆஸ்திரேலியா செண்டு அடைந்தான். பின்னர் அங்கு இருந்த ஆஸ்திரேலியா சிங்கம் அவர்களுக்கு சவாலாக அமைந்திருக்கும். இதன்காரணமாக இந்த சிங்கத்தை முன்னோர்கள் வேட்டையாடி கொன்றுகுவித்து அந்த விலங்கு இனத்தையே அழித்துவிட்டார்கள்.

அல்டமரியா குகைகள் 

1879ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் தானது தோட்டத்தில் இருந்த குகைகளை ஆராய்ந்து கொண்டிருந்தார் சவுட்டோலா எனும் வரலாற்றியல் ஆய்வாளர், ஒரு குகையில் அவரது ஒன்பது வயது மகளையும் கூடிசென்றார். குகையில் காணப்படும் கற்கால கருவிகளை கண்டு களிப்படைந்தர் அவர். அப்போது தான் திடீர் என அவரது மகள் குரலெழுப்பினார். “அப்பா! காட்டு எருது… இங்கே பார்” என கூவினாள். தலையை உயர்த்தி பார்த்த சவுட்டோலா குகையின் கூரையில் வரையப்பட்டிற்றுந்த ஓவியம் காட்சிபட்டது. இதுவே முதன் முதலாக இனம் காணப்பட்ட கற்கால குகை ஓவியம். இந்த குகை ஓவியங்கள் சுமார் 25000 முதல் 35000 ஆண்டுகள் வரை பழமையானவை என ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். சுமார் பல ஆயிரம் வருடங்கள் இந்த குகையில் மனிதர்கள் வாழ்ந்துவந்தனர், இவர்கள் தீட்டிய ஓவியங்களே இங்கு காணப்படுகிறது. இங்குள்ள ஓவியங்கள் ஒருவர் மட்டுமே தீட்டிய ஓவியமல்ல. பலர் ஆயிரமாண்டுகள் ஓவியந்தின் மீது ஓவியம் வரைந்து காலப்போக்கில் உருவானவை இவை. இந்த ஓவியத்தினை கண்ட பிக்காசோ எனும் புகழ் மிக்க ஓவியர், ‘அல்டமரியாவிற்கு பிறகு எல்லாம் சீரழிவு’ என வியந்து கூறினாராம். அவ்வளவு அழகும் நேர்த்தியும் உடையது இந்த குகை ஓவியங்கள்.

So, what do you think ?