காற்றிலிருந்து நீரை கறக்கும் நமீபிய வண்டு

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , ,

பகிரதன் ஒற்றைக்காலில் நின்று தவம் புரிந்து கங்கையை சிவபெருமணர் தலையிலிருந்து பூமிக்கு கொண்டுவந்தரோ இல்லையோ, சிரசானம் செய்து பாலைவன காற்றிலிருந்து நீரை கறக்கிறது நமீபிய வண்டு.

ஆப்பிரிக்காவில் உள்ள நபீமியா பாலைவனம். உலகின் மிகு உலர் பகுதி. இங்கு சராசரி வெப்ப நிலைமை சுமார் 60 டிகிரி. ஒப்பிடுக்காக பார்த்தல் தமிழகத்தில் அதிக பட்ச வெப்ப நிலை இதுவரை 45ஐ தாண்டியதில்லை. மிகுகடுமையான வெயில்; சூரியன் சுட்டெரிக்கும் இந்த பாலையிலும் வாழ்கிறது உயிர். நமீபிய வண்டு.

சுமார் காலாண நாணயம் அளவே உள்ள இந்த சிறு வண்டு இன்று உலகம் முழுவதும் உள்ள ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடுகு சிறுத்தல்லும் காரம் குறையாது என்பது போல மிகு சிறிய உயிர் என்றாலும் இது அறிவியல் விந்தை காட்டுகிறது. இந்த வண்டை அறைவது வழி, பாலை போன்ற ஈரபசை அற்ற மழை குறைவான பகுதியில் குடிநீர் அறுவடை செய்வது முதல் அதி நூண்ணிய அதிநவீன நானோ பரிசோதனை கருவி வடிவமைப்பது உட்பட பற்பல தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திடும் என எதிபார்க்கப்படுகிறது.

ஆண்டுக்கு வெறும் 44 மில்லிலிட்டர் மழை தான் இங்கு பொழிகிறது. எனவே ஈரப்பசை அறவே  அற்ற வறண்ட பாலை பகுதி. உயிர் வாழ, அதுவும் குறிப்பாக விலங்கு மாறும் பூச்சிகளுக்கு நீர் அவசியம். மிகு வரண்ட பாலையில் நீரை எப்படி பெருகிறது இந்த வண்டு. ஒரு சில நாட்கள் வீசும் ஊதல் காற்றில் மிதந்து வரும் நீர் திவலைகளை பிடித்து பருகி இங்கு உயிர்வாழும் நமீபிய வண்டு உயிர் வாழ்கிறது.

வறண்ட பாலையில் வாழும், ஸ்டெனோகரா (stenocara) எனப்பட்ட இந்த வண்டு எப்படி உள்ளபடியே நீரை சேகரிக்கிறது என்பதை ஆராய புகுந்தார் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தை சார்ந்த விலங்கியல் ஆய்வாளர் அன்டுருவ் பார்கர்.

இந்த பாலையில் தினமும் ஊதல் காற்று வீசாது. மாதத்தில் சுமார் ஆறே ஆறு நாட்கள் தான் வீசும். அதுவும் அதிகாலை சுமார் அரைமணி நேரம் தான் வீசும். ஊதல் காற்று வீசும் நாள் அன்று இந்த வண்டு பாலை மணலில் தலை குப்புற நிற்பதை கண்டார் இவர். தலையை தரையிலும் காலை மேலே உயர்டிபிடித்து செய்யும் சிரசாசனம் போல இந்த வண்டு வினோத நிலையில் கிடந்ததது. கிட்டே சென்று நுணுக்கமாக பார்த்தபோது அதன் பிட்டத்தில் நீர் திவலைகள் காணப்பட்டன. பிட்டத்தில் (பிருஷடத்தில்) உருவான நீர் திவலைகள் உருண்டோடி வண்டின் வாயை அடைந்தது. வியந்தார் பார்கர்.

காற்று சற்றே ஊதல் தன்மை கொண்டதாக தான் இருந்தது. அனால் இந்த காற்றில் பரவும் நீர் துமிகள் மிக மிக சிறியவை. வெறும் 15-20 மைக்ரான் அளவு தான். ஒரு மைக்ரான் என்பது ஒரு மீட்டரை பத்து லட்சம் பகுதியாக பிரித்தால் வருவது. இவ்வளவு நுணுக்கமான நீர் துமிகள் காற்றில் அடித்து செல்லப்படும். புவி ஈர்ப்பு சக்தி இந்த துமியை கீழே இழுப்பதை விட வீசும் காற்று செலுத்தும் விசை அதிகமாக இருக்கும். எனவே இந்த நுணுக்கமான நீர் துமிகள் தரையில் விழாது. மழையாக பொழியாது. என் அதிகாலை பணிதுளியாக கூட நிலத்தில் பரவாது. இந்த நுண் நீர் துமிகள் வண்டின் மேல் பட்டாலும் வண்டின் மீது படராது. அப்படியே துளி நீர் வண்டின் மீது படர்ந்தாலும் காற்றில் அடித்து செல்லப்படவேண்டும் என பார்கர் கணிதம் செய்தார். இங்கு வீசும் காற்று மணிக்கு சுமார் 20 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். வெகு வேகமாக அடிக்கும் காற்று இந்த துமியை எடுத்து சென்றிடும். எனவே இயல்பில் நீர் வண்டின் மீது படர்ந்து திவலையாக உருவாகமுடியது.

இதன் தொடர்ச்சியாக வண்டின் பிட்டத்தில் எதோ சிறப்பு அமைப்பு இருக்க வேண்டும் என்ற யூகத்திற்கு வந்தார் பார்கர். வண்டை கவனமாக நுண்நோக்கியால் ஆராய்ந்தார். வண்டின் பிட்டம் சிறப்பான அமைப்பை கொண்டிருந்தது.

வண்டின் பிட்டம் மழு மழு வென பார்வைக்கு தெரிந்தாலும், நுண்நோக்கியில் பரு பருவாக நுண் அமைப்புகள் தென்பட்டன. வேர்க்குரு வந்தது போல பிட்டம் முழுமையும் மலை போன்ற போட்டு அமைப்பு தென்பட்டது. இவைகளுக்கு இடையே அணில் முதுகில் உள்ள கோடு போல பிட்டதிலிருந்து வண்டின் தலை வரை நுணுக்கமான வடிகால் போன்ற அமைப்பும் தென்பட்டது.

இந்த பகுதியின் அமைப்பை மேலும் வேதியில் சோதனைகள் கொண்டு பரிசோதித்த போது பருக்களின் மலை முகடுகளுக்கும் பருக்களை சுற்றி இரண்டு பருக்களுக்கு இடையே மலை பள்ளத்தாக்கு மற்றும் வடிகால் போன்ற பகுதிக்கும் பெரும் வேறுபாடு உள்ளது புலப்பட்டது.

பருக்களின் மலை முகடுகள் நீரை கவரும் தன்மை கொண்டதாக இருந்தன. சில வேதிபொருட்கள் நீரை விரும்பி கவரும். இவை நீர் விரும்பி (hydrophilic) பொருட்கள் என அழைக்க படுகின்றன. எடுத்துக்காட்டாக நைலான் நீர் விரும்பி.

நீர்விரும்பி பொருள் பூச்சு கொண்ட பருவின் மலை முகடு காற்றில் மிதந்துவரும் மிக நுண்ணிய நீர் துமியை கவர்ந்து இழுக்கும். முதலில் வெறும் 15-20 மைக்ரான் அளவே உள்ள துமி பொட்டில் சிறை படும். மேலும் மேலும் துமிகள் நீர்விரும்பி பூச்சினால் கவரப்பட்டு சேரும். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல, துமிகள் சேர சேர நீர் திரண்டு நீர் திவலையாக மாறும். சுமார் 10-12 துமிகள் சேர்ந்தால் போதும் நீர் திவலை உருண்டு ஓட வேண்டிய பருமன் பெற்றுவிடும். இவ்வளவு பெரும் நீர் திவலையை காற்று ஏந்தி செல்ல முடியாது.

நீர் திவலை உருவாவது ஒரு பகுதிதான். இந்த நீர் வண்டின் முதுகில் ஓடும் போது வண்டு நனைந்து நீர் வீணாகி போகாதா? இங்கு தான் வண்டின் அடுத்த சிறப்பு. பருக்களை சுற்றி பள்ளத்தாக்கு போல உள்ள பகுதி மெழுகு போன்ற ஒரு பொருள் பூச்சு கொண்டது. மெழுகு போன்ற பொருட்கள் நீர் விலக்கு (hydrophobic) தன்மை கொண்டவை. எனவே பருக்களின் ஊடே வடிகால் போல நீர் உருண்டோடி வண்டின் வாயை சென்று அடையும்.

பகிரதன் உள்ளபடியே கங்கையை கொண்டுவர ஒற்றைக்காலில் நின்று தபஸ் செய்தன்னோ இல்லையோ, இந்த வண்டு சிரசானம் செய்வது காற்றில் மிதந்துவரும் நுண் நீர் துமிகளை சேகரிக்க தான் என்பது தெளிவாக விளங்கியது.

விலங்கியல் நிபுணர் என்ற முறையில் பார்கர் இந்தவண்டின் செயல்பாட்டை விளக்கினார். இவரது ஆய்வை படித்த ஏனைய பொறியாளர்கள் வண்டு நமக்கு பாடம் கற்றுத்தர முடியும் என்பதை உணர்ந்தனர்.

நிலத்தின் மீது நீர் நிலைகள் அற்ற பகுதியில் கூட இந்த வண்டின் யுக்தி கொண்டு நீர் அறுவடை செய்யல்லாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். நீர் அற்ற பாலை என்றாலும் அங்கு எப்படியும் இரவில் அல்லது அதிகாலையில்  பணிகாற்று வீசும். நமீபிய வண்டு பிட்டம் போல வடிவமைக்க பட்ட டென்ட் கூடாரம் இருந்தால் காலை விழித்தெழும் போது புத்தம் புது நல் நீர் அறுவடை செய்து விடலாம். டென்ட் கூடாரத்தில் படியும் நீர் திவலைகளை சேகரித்து நீர் பெறலாம்.  வண்டின் பிட்டம் போல மிக மிக நுண்ணிய நீர் விரும்பி பொட்டுகள்; இடையே நீர் எதிர்ப்பு பூச்சு என சிறப்பு அமைப்பினை கூடார துணியில் பூசிவிட்டால் போதும்; கூடாரமே நீரை காற்றிலிருந்து அறுவடை செய்துவிடும் இல்லையா?

மிக மிக சிறிய உடல் பரிசோதனை மின்னணு சிப்; இதில் ஒரே ஒரு துளி இரத்தம். வண்டின் முதுகில் உள்ளது போன்ற மிக நுண்ணிய வடிகால்; நீருக்கு பதில் இரத்தத்தை விலக்கும் தன்மை கொண்ட சிறப்பு வேதி பூச்சு; துளி இரத்தம் வீணடயாமல் “சிபின்” பல பகுதிகளுக்கு வழிந்தோடுகிறது. அங்கு இரத்தம் விரும்பி பொருள் பூச்சு. மேலும் இரத்தத்தை பரிசோதனை செய்ய தேவையான நானோ கருவிகள். இவ்வாறு வண்டின் தொழில்நுட்பத்தை முன்மாதிரியாக கொண்டு நமது கைவிரல் நகம் அளவில் உடல் பரிசோதனை கருவிகள் தயாரிக்கலாம்.

குளிர் சாதனப்பெட்டி, குளிருட்டப்பட்ட அறை முதலியவற்றில் எவ்வளவு தான் முயன்றாலும் ஈரப்பசை புகுந்துவிடுகிறது. ஈரப்பசையினால் குளிர் சாதனப்பெட்டியில் பனி (frost) உருவாகி செயல்திறன் குறைகிறது. குளிர் சாதன பெட்டியிலிருந்து ஈரப்பசையை நமீபிய வண்டு தொழில்நுட்பம் கொண்டு உறிஞ்சி எடுத்துவிடலாமா?

பறவையை கண்டான் விமானம் படைத்தான் என்பது போல இந்த வண்டினை கொண்டு என்ன என்ன தொழில் நுட்பங்கள் வளரப்போகிறதோ? விஞ்ஞானிகளுக்கு தான் வெளிச்சம்.

So, what do you think ?