கொட்டும் மழையிலும் கொசு பறக்கும் புதிர்

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , ,

ஜார்ஜிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆய்வாளராக பணிபுரியும் டேவிட் ஹு, மழைநாள் ஒன்றில் அவரது இரண்டு வயது குழந்தையை மடியில் கிடத்தி முன் அறையில் விளையாட்டு காட்டிகொண்டிருந்தார். அப்போது ஜிவ் என தோட்டத்திலிருந்து ஜன்னல் வழியே பறந்து வந்தது ஒரு கொசு; சுரீர் என கடித்து குழந்தையை. வீல் வீல் என கதறியது குழந்தை. திகைத்தார் ஹு. திகைப்புக்கு காரணம் கொசுக்கடி அல்ல; மழைத்துளிகள் சட சடவென பொழிந்து கொண்டிருக்கும் போது கூட அதன் ஊடே கொசு எப்படி பறந்து வந்தது எனபது தான் அவரது எண்ணம்.

தனது மகவை கடித்த கொசுவை அடித்து கொன்றரோ இல்லையோ கொட்டும் மழையிலும் கொசு எப்படி பறக்கிறது என்று வியந்தார் ஹு. அமைதியாக ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது வோல்வோ பஸ் வந்து நம்மீது மோதுகிறது என கொள்வோம்? என்ன நடக்கும்? குறைந்தபட்சம் பத்து இருபது இடங்களில் எலும்பு முறிவு, மேலும் சில மாதங்களேனும் மருத்துவமனையில் கிடக்க வேண்டிவரும் அல்லவா? ஆனால் கொசுவைவிட சுமார் ஐம்பது மடங்கு கனம் பொருந்திய மழை துளிகளால்  சிறு கொசு பாதிக்க படாமால் இருபது ஏன் என  சிந்தித்தார் டேவிட் ஹு.

இன்று நேற்று அல்ல சுமார் 17.5 கோடி ஆண்டுகளாக கொசு இந்த உலகில் உலா வருகிறது. அதாவது நம்மை மட்டுமல்ல டைனசுராஸ்களை கூட கொசு கடித்து பார்த்துள்ளது. குளிர் நடுங்கும் துந்தர முதல் வெயில் காயும் பாலை வரை எங்கும் கொசு உள்ளது; உலகில் சுமார் 3000 வகை கொசுக்கள் உள்ளன. கடித்து இரத்தம் உறிஞ்சுவதர்க்கு ஏதேனும் விலங்கு மற்றும் சற்றே ஈரப்பதம்; சற்றே வெப்ப நிலை; அது மட்டும் போதும் கொசு உயிர் வாழும். மழையோ வெயிலோ கொசுக்கடியிலிருந்து நாம் தப்ப முடியாது.

சடசடவென விழும் மழை துளி நமக்கு வெறும் தூசு; ஆனால் கொசுவைவிட ஐம்பது மடங்கு எடை உள்ள மழைத்துளி கொசு மீது விழுந்தாலும் ஒன்றும் ஆவதில்லை; ஏன் என்று ஆராய விழைந்தார் ஹு. குண்டு மழைக்குள் ஊடே நழுவி போர் விமானம் லாவகமாக பறந்து செல்வது போல கொசு மழை துளிகளின் ஊடே நளினமாக பறந்து செல்கிறது என்பது இதுவரை பொதுவே இருந்த கருத்து. இந்த கருத்து வெறும் முன் அனுமானம் தான்; ஆய்வுகளின் அடிப்படையில் எழுந்த கருத்து அல்ல. எனவே தாமே ஆராய புகுந்தார் ஹு.

அவரது ஆய்வுக்கருவி கண்ணாடியால்ஆன செயற்கை மழை பெட்டி. பெட்டியின் மேலே தண்ணீர் ஊற்றி வைக்க தொட்டி போன்ற அமைப்பு இருக்கும். அதன் கிழே சல்லடை போன்ற அமைப்பு. தொட்டியில் நீர் ஊற்றினால் சல்லடை வழி கசிந்து மழை துளி போல பெட்டிக்குள் கிழே விழும். பெட்டிக்குள் கொசுவை அடைத்து தமது செயற்கை மழையை துவக்கினார் ஹு.

நொடிக்கு ஆயிரம் புகைப்படம் எடுக்கும் நவீன உயர் வீடியோ கருவி மூலம் படம் எடுத்தார் ஹு. தமது மழை பெட்டியில் அடைபட்ட கொசு துளிகளுக்கு நடுவே இப்படி அப்படி  அனாயாசம்  திரும்பி பறந்து லாவகமாக என்பது தான் அவர் எதிர்பார்ப்பு.

பரிசோதனை செய்து எடுத்த படத்தை வேகம் குறைத்து போட்டு பார்த்தவருக்கு ஆச்சரியம். கொசு ஒன்றும் சாமார்த்தியத்தோடு நீர் துளிகளின் நடுவே  நளினமாக பறந்து செல்லவில்லை. நொடிக்கு ஒரு மீட்டர் என்ற வேகத்தில் தான் கொசு பறந்து செல்கிறது என்பதை அவரால் வீடியோவிலிருந்து கணிக்க முடிந்தது. ஆனால் மழை துளியோ நொடிக்கு ஐந்து முதல் ஒன்பது மீட்டர் பாய்ந்தது. எனவே என்னதான் திறமை கொண்ட கொசுவாக இருந்ததலும் அவற்றால் மழைத்துளி தான் தலை நோக்கி வருவதை உணர்ந்து, அந்த கணத்தில் முடிவெடுத்து, மழைதுளியிளிருந்து தப்ப லாவகமாக அப்படி இப்படி பறந்து செல்ல இல்லது என்பது விளங்கியது. எனவே இதுவரை இருந்த கற்பிதம் சரியாக இருக்காது என்பது உறுதிபட்டது.

உள்ளபடியே வீடியோ படத்தில் மழை துளி கொசுக்கள் மீது மோதுவது தெளிவாக பதிவாகியிருந்தது. சரியாக கொசுவின் மேல் மழைத்துளி வந்து விழும் போது கொசுவை விட ஐம்பது மடங்கு அதிக எடை கொண்ட நீர் துளியால் கொசு நசுங்கி விட வில்லை. மாறாக நீர் துளியின் வடிவம் தான் சிதைந்து. நீர்த்துளி கொசுவின் மீது வழிந்து உருண்டு சென்று விடுவது படத்தில் தெளிவாக புலப்பட்டது. மோதலின் விளைவாக கொசு சற்றே பக்கவாட்டில் தள்ளப்பட்டது; அதன் தொடர்ச்சியாக கொசு பறக்கும் போதே சற்றே உருண்டது. ஆயினும் மைக்ரோ நொடியில் தான் நிலையை அடைந்து மறுபடி கொசுவால் பறக்க முடிந்தது வீடியோ படத்தில் தெளிவாக வெளிபட்டது.

இதனை மேலும் விளங்கி கொள்ள கொசுவுக்கு பதில் கொசு அளவு உடைய  சிறிய தக்கைபந்துகள் செய்து அதனை சோதனை பெட்டியில் போட்டனர்; தக்கையின் அளவும் எடையும் சராசரி கொசுவுக்கு நிகர் என அமைத்தனர்,  பின்னர் செயற்கை மழை செய்தனர். கிழே விழுகின்ற தக்கை துண்டுகள் மீது மழை துளி விழும். அவ்வாறு விழும் துளியினால் தக்கையில் எவ்வித பாதிப்பு ஏற்படுகிறது எனபதை கணக்கு செய்தனர். வெறும் இரண்டு சதவிகிதம் மட்டுமே மழை துளியின் வேக கதியில் மோதலின் பிறகு வேகஇழப்பீடு ஏற்படுகிறது எனபதை சோதனையில் கண்டுபிடித்தனர். எனவேதான் மழைதுளியுடன் மோதலுக்கு பிறகும் கொசுவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவது இல்லை என்பது விளங்கியது.

தீடிர் என ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது ஆற்றின் இருமாங்கும் உள்ள மரம் செடி புதர் முதலியவை வேரோடு பிடுங்கப்பட்டு அடித்து செல்லப்படும். ஆனால் நாணல் புதர், புல் முதலியவை பாதிக்கப்படாது. அதே போல் சிறு கொசு அதனை விட ஐம்பது மடங்கு பெரிய நீர் துளியால் பாதிக்கப்படுவது இல்லை.

ஒப்பிட்டில் குறைவான நிறை; குறைவான வேக கதி கொண்டுள்ள கொசுவுக்கு குறைவான ஜடத்துவம் உள்ளது. குறைவான ஜடத்துவம் உள்ள கொசுவின் மீது மழை துளி மோதும் போது குறைவான ஆற்றலே செலவாகிறது. எனவே கொசுவுக்கு பாதிப்பு இல்லை. நீர் துளியும் இந்த சிறு கொசுவின் மீது மோதும் போது நீர் துளி சிதறுவது இல்லை. அதன் உருவம் மட்டும் சற்றே மாறி, கொசுவின் உடல் மீது உருண்டு விழுந்து விடுகிறது. எனவே விழும் நீர் துளியின் விசையில் மிக குறைந்து அளவே கொசுவுக்கு செல்கிறது. அதனால் மோதலின் விளைவாக கொசுவுக்கு அதன் இயக்கத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பது விளங்கியது.

ஆனால் சிலந்தி விட்டில் பூச்சி போன்ற சற்றே பெரிய பூச்சிகளின் ஜடத்துவம் சற்றே அதிகம்; எனவே மழை துளி வந்து அதன் மீது மோதினால் அவை பாதிப்பு அடையும். எனவே பொதுவே மழையில் அவை இலைக்கு கிழே அல்லது கல்லுக்கு அடியில் பதுங்கிவிடும். ஆயினும் தனது குறைந்த ஜடத்துவம் காரணமாக கொட்டும் மழையிலும் கொசு மட்டும் ஜிவ் என பறந்து வந்து நம்மை கடிக்க முடிகிறது,.

கட்டுரையாளர்: த.வி.வெங்கடேஷ்வரன்

So, what do you think ?