சுயபிரக்ஞை கண்டறிய உதவும் கண்ணாடி தேர்வு

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , ,

உயிர்களை ஓரறிவு, ஈரறிவு, மூன்றறிவு, நான்கறிவு, ஐந்தறிவு, ஆறறிவு என்று  வகுக்கும் நாம் மனிதனுக்கு மட்டும் ஆறறிவு திறன் அதாவது சுயபிரக்ஞை என்ற திறன் உள்ளதாக கற்பிதம் செய்துகொள்கிறோம். பிறக்கும் போதே இந்த தன்னுணர்வு உள்ளதா ? இல்லை பின்னர் உருவாகும்  திறனா ?

1972ல் நடத்தப்பட ஒரு ஆய்வு உள்ளபடியே சுமார் 20-24 மாத வயது பிறகே நமக்கு தன்னுணர்வு முழுமையாக வளர்சியுருகிறது என சுட்டுகிறது. 1972ல் வடக்கு கரோலினா பல்கலைகழகத்தை சார்ந்த பெஹுலாஹ் அம்ஸ்டர்டாம் என்பார் நடத்திய ஆய்வு இதனை சுட்டியது. சுமார் ஆறிலிருந்து இருபத்திநான்கு மாத வயதுடைய குழந்தைகளை ஆய்வுக்கு உட்படுத்த்தினார் இவர். குழந்தையின் முகத்தில் மூக்கு நுனியில் பேனாவால் கறை ஏற்படுத்தினார். இந்த குழந்தைகளை தாய் கைகளில் தூக்கி “செல்லமே. இது யார் தெரியுதா?” என கண்ணாடி முன் பிடித்து கேட்க குழந்தையின் நடவடிக்கையை ஆய்வள்ளர்கள் உற்றுநோக்கினர்.

மொத்தம் 88 குழந்தைகளிடம் இந்த சோதனை நடத்தப்பட்டாலும் 16 குழந்தைகளின் தரவுகள் தாம் பயனுள்ளதாக இருந்தது. குழந்தைகள் குழந்தைகள் தானே; சில கண்ணாடியை பார்க்கமாட்டேன் என சேட்டை பிடித்தது, சில அம்மா முகத்தை பார்ப்பதில் கவனம் செலுத்தியது. 16 குழந்தைகள் கண்ணாடியை பார்த்து தான் பிம்பத்தை கண்டு எதிர்வினை புரிந்தன. இந்த 16 குழந்தைகளின் எதிர்வினையை தொகுத்து பார்த்த போது, முக்கியமாக முன்று விதமான எதிர்வினை புலப்பட்டது.

கைகுழந்தயால் கண்ணாடியில் காணும் தான் பிம்பத்தை தான் என உணரமுடியாது

கைகுழந்தயால் கண்ணாடியில் காணும் தான் பிம்பத்தை தான் என உணரமுடியாது

சுமார் 6-12 மாத வயது குழந்தைகள் கண்ணாடியில் காணும் உருவம் வேறு ஒரு குழந்தை என்பதுபோல நடந்து கொண்டது. கண்ணாடியில் தெரியும் பிம்ப குழந்தையை பர்ர்த்து சிரிப்பது; காய் நீட்டி விளையாடுவது, தொட முயற்சிப்பது, மழலை மொழியில் அந்த ‘குழந்தையுடன்’ பேச முயற்சிப்பது என செயல் புரிந்தது. கண்ணாடியில் தெரியும் உருவம் தான் தான் என உணர்ந்ததுக்கான எந்த வித அறிகுறியும் இல்லை. கண்ணாடியில் தான் பிம்பத்தை பார்த்து வியந்தது. முழுமையாக தான் என அறிய மாட்டது. தன்னை போல வேறு சிறு குழந்தை என கருதி அதனை தொட முயற்சித்தது; கண்ணாடியில் தான் கை கொண்டு அந்த குழந்தையை தொட முயற்சித்தது. தனது முகம் தான் கண்ணாடியில் தெரிகிறது என்றோ; தனது முகத்தில் எதோ கறை உள்ளது என்றோ அந்த குழந்தைகள் இனம் காணவில்லை.

16 மாதத்திற்கும் குறைவான வயது வளர்ச்சி உடைய குழந்தை கண்ணாடியில் தெரியும் உருவம் வேறு ஒரு குழந்தை என கருதுவது போல நடவடிக்கைகள் அமைந்திருக்கும்.

16 மாதத்திற்கும் குறைவான வயது வளர்ச்சி உடைய குழந்தை கண்ணாடியில் தெரியும் உருவம் வேறு ஒரு குழந்தை என கருதுவது போல நடவடிக்கைகள் அமைந்திருக்கும்.

 13-20 மாத குழந்தைகள் செய்த எதிர்விளைவு வித்தியாசமாக இருந்தது. சில கண்ணாடியில் புலப்படும் பிம்பத்தை கண்டு வியந்து திகைத்து நின்றன; சில குழந்தைகள் தாம் தம் முகத்தில் எதோ கறை என உணர்ந்து நீக்க முயற்சிசெய்தன. ஆனால் பெரும்பாலான குழந்தைகள் பிம்பத்தை பார்த்து எரிச்சல் போக்கு கொண்டன; பிம்பத்தை நோகிய பாராமுகம் என்ற போக்கு தென்பட்டது. பெரும்பாலானவை கண்ணாடியை தொட முயற்சித்தன. பிம்பத்தில் உள்ளது நானா என்ற ஊகம்; நம்மை போல நம்மை மாதிரியே கை ஆட்டுவது போன்ற பாசாங்கு செயல்கள் பிம்ப உருவமும் செய்கின்றது என்ற எரிச்சலா? வேறு குழந்தையை கண்டு பொறாமையா? எதுவாகிலும், 13-20 மாத குழந்தைகளின் நடவடிக்கை 6-12 மாத வயது குழந்தைகளிடமிருந்து  வித்தியாசமாக இருந்ததது என்பது மட்டும் நிச்சயம்.

20-24 மாத குழந்தைகள் எளிதில் பிம்பம் தாம் தான் என இனம் கண்டுகொள்வதுடன் கண்ணாடி பிம்பத்தை பயன்படுத்தவும் முயன்றன. தனது முகத்தில் மூக்கில் உள்ள கறையை அம்மாவுக்கு சுட்டிக்காட்டின; கண்ணாடி பிம்ப துணை கொண்டு கறையை நீக்க முயற்சித்தன, கறையை நீக்குவது மட்டுமல்ல, தனது முடியை நேர் செய்வது உட்பட பல தான் உணர்வு செயல்களில் ஈடுபட்டன. கண்ணாடி கொண்டு தமது முகத்தை அழகு பார்த்தன. சந்தேகத்திற்கு இடமின்றி கண்ணாடியில் தெரியும் பிம்பம் தான் தான் என இவை உணர்ந்துவிட்டன என்பது உறுதி.

இந்த ஆய்வு சுட்டியது கொண்டு, மனிதனுக்கு பிறக்கும் போதே முழுமையான சுயபிரக்ஞை இருப்பதில்லை; கைக்குழந்தையாக உள்ளபோது குழந்தை ‘தான்’ என பகுத்து அறிவது குறைவு. பசி போன்ற பல உணர்வுகள் பிறக்கும் குழந்தைக்கும் இருந்தாலும் சுயபிரக்ஞை போன்ற உயர் சிந்தனை திறன் காலப்போக்கில் வளர்சியுருகிறது. குழந்தையின் மன வளர்ச்சியின் பாகமாக பிரக்ஞை வளர்கிறது என உளவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பெஹுலாஹ் அம்ஸ்டர்டாம் நடத்திய ஆய்வுக்கு பிறகு, பலர் இந்த ஆய்வை செய்து பார்த்தனர். மேலும் துல்லியமாக 1979ல் மிசேல் லூயிஸ் என்பாரும் ப்ரூக்ஸ் குன் என்பாரும் (Michael Lewis and Jeanne Brooks-Gunn)சேர்ந்து ஒரு பரிசோதனை நடத்தினர். இவை எல்லாம் பொதுவாக பெஹுலாஹ் அம்ஸ்டர்டாம் சோதனை முடிவுகளை உறுதிபடுத்தின.

பிறக்கும் மனித குழந்தைக்கு தன்னுணர்வு இல்லை; காலபோக்கில் தன்னுணர்வு வளர்கிறது என்பது இந்த ஆய்வில் விளங்கினாலும், விலங்குகளுக்கு தன்னுணர்வு உண்டா என்ற கேள்வி தொக்கி நின்றது.

சிறுவர் இலக்கியம் மற்றும் மாஜிக்கல் ரியலிசம் எனப்படும் வகை சார்ந்த மந்திர புனைவு இலக்கியத்தில் விலங்குகளுக்கு தன்னுணர்வு கற்பிதம் செய்யப்படுகிறது. இந்த இலக்கியங்களில் விலங்குகள் தன்னை உணரும், பகுத்தறிவோடு செயல்படும். பூனை பேசும், புலி திட்டமிடும். தன் உணர்வு திறன் மனிதனிடம் மட்டும் உள்ள சிறப்பு இயல்பா அல்லது வேறு விலங்குகளிடமும் காணப்படுகிறதா?

“புத்திசாலி முயலும் முட்டாள் சிங்கமும்” பஞ்சதந்திர கதை சிறு வயதில் படித்த ஞாபகம் உள்ளதா? கிணற்று நீரில் சிங்கத்தின் பிம்பத்தை காட்டி அதோபார் உனக்கு எதிரி என்று முயல் கூற, முட்டாள் சிங்கம் கோபத்துடன் உறுமிக்கொண்டு பிளரிக்கொண்டு கிணற்று நீரில் பாய்ந்து மாண்ட கதை நாம் எல்லோரும் அறிந்தததுதான். கதையில் சிங்கம் நீரில் காணும் தான் பிம்பம் தான் தான் என உணரவில்லை. அதாவது 3-16 மாத குழந்தை போல தான் வளர்ந்த சிங்கத்திற்கும் தன்னுணர்வு என கதை கற்பிதம் செய்கிறது. இது வெறும் கற்பிதம இல்லை உள்ளபடியே சிங்கம் முதற்கொண்ட விலங்குகள் தம்மை கண்ணாடி பிம்பத்தில் அறிந்து கொள்ளும் திறன் வாய்ந்தவையா?

திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் கூண்டுக்குள் இருந்த சிங்கத்தை பார்த்து “நீ விலங்குகளுக்கு ராஜா; நான் கவிகளில் அரசன்; வா இருவரும் சிந்திப்போம்” எனக் கூறி சிங்கத்துடன் கை குலுக்க சிங்க கூண்டுக்குள் புக முயன்றாராம் பாரதி. பாரதி போல சிங்கத்திடம் நேரே சென்று சோதனை நடத்தவில்லை என்றாலும், உயிரியல் அறிஞர் சார்ல்ஸ் டார்வின் லண்டன் உயிரியல் காட்சி சாலையில் இருந்த ஓராங்குட்டானிடம் முகம் பார்க்கும் கை கண்ணாடியை கொடுத்தார்- சோதனை செயதார். கண்ணாடியை பெற்ற ஓரங்குடன் தான் பிம்பத்தை பார்த்து ஒழுங்கு காண்பித்தது. உதட்டை பிதுக்கி பார்த்தது. தனது முகம் முதல் உடற்ப்பகுதிகளை கண்ணாடி கொண்டு ஆராய்ந்து பார்த்தது. ஓரங்குடன் போன்ற மனித குரங்குகள்  பரிணாமத்தில் மனிதனுக்கு அடுத்த படி நிலை. பரிணாம பார்வையில் நமது நெருங்கிய உறவினர்கள். எனவே மனித குரங்கு வகை விலங்குகளுக்கு மனிதன் போன்ற ஒருசில உயர் மூளை திறன்கள் இருக்க வேண்டும் என டார்வின் கொண்ட கருத்திற்கு இது உறுதி செய்ததது.

மிசேல் லூயிஸ்  மற்றும் ப்ரூக்ஸ் குன் ஆகியோரது ஆய்வினை ஒட்டி, கண்ணாடி பரிசோதன (mirror test) என்ற ஒரு முறையை உருவாக்கினர் உளவியல் அறிஞர்கள். முளை பாதிப்பு கொண்ட நோயாளிகள், விபத்தில் சிக்கியோர் முதலியோரின் தன்னுணர்வு நிலையை அறிய இந்த “கண்ணாடி பரிசோதனை” உளவியல் மருத்துவர்களால் கைகொள்ளப்படுகிறது. இதே பரிசோதனை முறையை சற்றே மாற்றி விலங்குகள் இடையே சுயபிரக்ஞை உள்ளதா என அறிய முற்பட்டனர் விலங்கு ஆய்வாளர்கள்.

 விலங்கால் தான் பிம்பத்தை தான் தான் என அறிந்துகொள்வது என்பது உயர் சிந்தனையின் வெளிப்பாடு ஆகும். கண்ணாடியில் தெரிவது கண்ணடிக்கு பின்புறமோ அல்லது கண்ணாடிக்குள்ளோ உள்ள விலங்கு அல்ல, உள்ளபடியே தனது பிம்பம் தான் என்ற சிந்தனை திறன் வேண்டும்.  கண்ணாடி பிம்பத்தில் விலங்கின் உடல் பகுதியை மட்டுமல்ல விலங்கு உள்ள சூழலின் பிரதிபலிப்பும் பிம்பமாக புலப்படும். இதை பகுத்து அறிந்து, நான் உள்ள பகுதிதான் கண்ணாடியில் தெரிகிறது என உணரவேண்டும். தன் உடலசைவுகள் தாம் கண்ணாடியில் தெரியும் பிம்பத்தின் அசைவுகள் என தொடர்புபடுத்தி பார்க்கவேண்டும். தன்னிலை அறிந்து தன்னுணர்வு பெற்றால்தான் பிம்பத்தை தான் என உணர முடியும், கண்ணாடி தேர்வில் தேற முடியும் என்கின்றனர் உளவியல் வல்லுனர்கள்.

இந்த சோதனையின் முதற் கட்டத்தில் விலங்கை மயக்கமுற செய்வர். மயங்கிய விலங்கின் முகத்தில் எதாவது நிற வர்ணம் கொண்டு கறை ஏற்படுத்துவர். விழித்தெழும் விலங்கின் கூண்டில் முகம் பார்க்கும் கண்ணாடி பொருத்தப்படிருக்கும். அந்த கண்ணாடியில் தன் பிம்பத்தை அந்த விலங்கால் காண முடியும். தமது முகம் மற்றும் உடலினை கண்ணாடியில் காணும்போது எந்ததெந்த விலங்கு எத்தகைய எதிர் வினை புரிகிறது என்பதை வீடியோ கருவி மூலம் படம் எடுப்பார். பின்னர் இந்த எதிர் வினை செயல்களை பகுத்து ஆராய்ந்து முடிவு எட்டுவர். சுயபிரக்ஞை உள்ள விலங்குகள் தமது முகத்தில் கறை உள்ளது என அறிந்து அதனை ஆராய்ந்து பார்க்க முயலும். தனது கைகளால் கறை உள்ள பகுதியை தொட்டு பார்க்கும். கறையை துடைத்து நீக்க முயற்சிக்கும். கண்ணாடியில் தனது முகத்தை வைத்து ஒழுங்கு காட்டி சோதனை செய்யும். தனது உடலின் பாகங்களை குறிப்பாக பால் உறுப்புகளை பரிசோதிக்கும். தனது உடலை துருவி துருவி ஆராய்ந்து பார்க்கும்.

தான் என்ற சுயபிரக்ஞை இருந்தால் தான் தனது முகத்தில் வித்தியாசமான என்றும் இல்லாத கறை உள்ளது என்பதை அறியமுடியும். கையை அசைக்கும் போது அதற்க்கு ஏற்றார் போல பிம்பமும் அசைகிறது என்பதை பகுத்து அறிந்தால் தான் கண்ணாடியில் காண்பது தான் தான் என உணரமுடியும். எனவே சுயபிரக்ஞை உள்ள விலங்கு மட்டும் தான் கண்ணாடி கண்ணாடி பரிசோதனையில் வெற்றி கொள்ள முடியும்.

சுயபிரக்ஞை இல்ல விலங்குகள் கண்ணாடியில் உள்ள உருவம் தான் என பகுத்து அறியாது. முட்டாள் சிங்கம் போல பிம்பம் வேறு ஒரு விலங்கு என கருதி ஒன்று அதனுடன் சண்டையிட துவங்கலாம் அல்லது நட்பு பாராட்டி விளையாட துவங்கல்லாம். தனது கறையை நீக்கவோ, தனது உடல் பாகங்களை துருவி ஆராய்ந்து பார்க்கவோ முயலாது.

எடுத்துகாட்டாக முகம் பார்க்கும் கண்ணாடி முன்பு நாய் வரும் போது அதன் வினை என்ன? நாய் கண்ணாடியில் உள்ள பிம்பம் தான் தான் என அறியாது வேறு நாய் என கருதி தான் இடத்திற்கு வந்துவிட்டதாக தப்பு கணக்கு போட்டு குறைக்க துவங்கும். அதேசமயம் குழந்தை கொரில்லா தனது முகத்தில் கறை உள்ளது என கண்ணாடியில் தான் பிம்பத்தை பார்த்து அறிந்து கறையை நீக்க முயலுகிறது ஆனால் நாய் தான் பிம்பத்தை அறிவதில்லை. இதன் தொடர்ச்சியாக நாய்க்கு சுயபிரக்ஞை அறவே இல்லை எனவும் கொரில்லா குரங்கிற்கு ஓரளவு தான் உணர்வு உள்ளது எனவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இதுவரை மனிதன் தவிர கண்ணாடி பரிசோதனை தேர்வினை வெற்றி கொண்ட விலங்குகள் மனித குரங்கு வகைகளன ஓரங்குடன், கொரில்லா போநோபோஸ் சிம்பன்சி, பாட்டில் மூக்கு திமிங்கலம், ஒர்கஸ், யானை ஐரோப்பிய மக்பீஸ் எனும் பறவை முதலியவை ஆகும். பயிற்றுவிக்க பட்ட புறா தனது முகத்தில் உள்ள கரையை நீக்குகிறது; ஆனால் இயல்பில் உள்ள, பயிற்றுவிக்க படாதா புறா தேர்வில் தோல்வியை தழுவுகிறது. மக்பை எனும் பறவை தனது மூக்கில் ஓட்ட பட்டுள்ள ஸ்டிக்கரை கண்ணாடியில் கண்டு உணர்ந்து நீக்கும் திறன் வாய்ந்தது என ஆய்வுகள் நிறுவியுள்ளன.

பதினெட்டு மதத்திற்கு குறைவான வயதுடைய மனித குழந்தைகள், பூனை, நாய் சில வகை குரங்குகள் முதலியவும் தேர்வில் தோல்வி.  வியப்பான செய்தி சீ சீ என ஒதுக்கும் பன்றி ஓரளவு தன்னுரவு உடையது என கருதுகிறார்கள். நேரடியான பரிசோதனையில் தோல்வி அடைந்தாலும், பன்றிகள் வேறு ஒரு வகை கண்ணடி பரிசோதனை தேர்வில் வெற்றி கண்டுள்ளன.

முகத்தில் இடப்பட கறையை கண்ணாடி பிம்பத்தை கொண்டு விலங்கால் உணரமுடிகிறத என்பது தான் கண்ணாடி தேர்வு

முகத்தில் இடப்பட கறையை கண்ணாடி பிம்பத்தை கொண்டு விலங்கால் உணரமுடிகிறத என்பது தான் கண்ணாடி தேர்வு

இந்த பரிசோதனை முறை குறித்து சில கருத்து வேறுபாடுகளும் உள்ளது. சிலர் இந்த முறை சரியானது இல்லை என குறை சொல்கின்றனர். எடுத்துகாட்டாக சில ஆதிவாசி சிறுவர் சிறுமியரிடைய இந்த பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சிறுவர்கள், இரண்டு வயதிற்கு மேற்பட்டவர் ஆயினும் இவர்கள் தமது முக கறையை நீக்க முயல வில்லை. இதிலிருந்து இந்த ஆதிவாசி மனிதர்களுக்கு சுயபிரக்ஞை இல்லை என கூற முடியுமா என சிலர் இந்த பரிசோதனையை குறை கூறுகின்றனர். வேறு ஒரு ஆய்வில் இதே ஆதிவாசி சிறுவர்களிடம் முககறை உள்ள பொம்மையை காட்டினர். அந்த பொம்மையின் கறையை நீக்கினர், அதுபோல உங்கள் முகத்தில் உள்ள கறையை நீக்குங்கள் என குறிப்பாக கூறிய போது இதே சிறுவர்கள் கண்ணாடியின் உதவியுடன் தமது முகத்தில் உள்ள கறை பகுதியை கண்டறிந்து அகற்றினர். எனவே கண்ணாடி தேர்வில் வெற்றி பெறாவிட்டால் சுயபிரக்ஞை இல்லை என கூறமுடியாது. ஆனால் இந்த தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால் சுயபிரக்ஞை உண்டு என உறுதிபடுத்த முடியும் என்கின்றனர் உளவியல் அறிஞர்கள்.

 கண்ணாடி முன்பு நின்று “கண்ணாடியே கண்ணாடியே உலகிலேயே மிக அழகான பெண் யார் என்று கேட்டல் பதில் சொல்லுமோ சொல்லாதோ, ஆனால் சுயபிரக்ஞை உள்ளதா என்பதை குறிப்பால் உணர்த்தும் கண்ணாடி தேர்வு.அதுபோகட்டும், யானை தேர்வில் ஜெயித்தால் என்ன, பன்றி வென்றால் என்ன எங்க ‘எந்திரன்’ கண்ணாடி தேர்வில் வெற்றி பெருவானா என்பதை சொல் என்கிறான் எனது நண்பன் ஒருவன். உங்கள் யூகம் என்ன?

So, what do you think ?