த.வி.வெங்கடேஸ்வரனின் சிறப்பு பேட்டி

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , , , , , , ,

TVVஎண்ணற்ற அறிவியல் நூல்களைத் தமிழில் எழுதியுள்ள த.வி.வெங்கடேஸ்வரன் தற்சமயம் டெல்லியில் மத்திய அரசின் தேசிய அறிவியல் பிரச்சார மையத்தின் முதுநிலை விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார்.  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றி தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் அறிவியல் பார்வையைக் கொண்டு சென்றவர்.

பிள்ளையார் பால் குடிக்கிறார் என்கிற வதந்தியைக் கட்டுடைத்து பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி அறிவியல் பூர்வமாக அதை விளக்கியவர். அறிவியல் கேள்வி பதில்கள், மனித குலத்தின் தோற்றம் உள்ளிட்ட பல பொருள் குறித்த நூல்களை வெளியிட்டுள்ளார். பல்துறை அறிஞராக இந்தியா முழுவதும் சென்று அறிவியல் பணி ஆற்றி வருகிறார். 

1. நிகோபர் தீவின் பழங்குடி மக்கள் நிலவின் ஒவ்வொரு பிறைக்கும் பெயர் வைத்துள்ளதோடு – மிகச் சரியாக முழுநிலவுக்குப் பின் ஒன்பதாம் நாள் முதல் பதினான்காம் நாள் வரை கடலில் மீன் வரத்து குறைவாகவே இருக்கும் எனவும் ஒரு புராதன வானியல் உண்மையைக் கடைபிடிப்பது வியப்பாக உள்ளது. அவ்விதமான சாதாரண மக்களின் வானியல் அறிவு ஓட்டம் தனியாகத் தொகுக்கப்படும் அளவிற்கு செறிவாக உள்ளது என நம்புகிறீர்களா? அல்லது இது மூடநம்பிக்கையா?

அல்தூசர் எனும் சமூக விஞ்ஞானி உலகப்பார்வை மற்றும் அறிவியலுக்கு உள்ள வேறுபாட்டை விளக்குகிறார். இரண்டும் நமது வாழ்வு பட்டறிவு அனுபவம் சார்ந்து தான் உருவாகிறது. சாதாரண உலகப்பார்வை விமர்சனமின்றி உருவாகிறது ஆனால் விமர்சனப் பார்வையில் அறிவியல் உருவாகிறது என விளக்கம் தருகிறார் அவர். நிக்கோபர் பழங்குடி மக்களின் கருத்துகளும் அவர்களது வாழ்கை அனுபவதிலிருந்து தான் உருவாகிறது,. அந்தக் காலத்தில் சில நாட்களில் கடல் பகுதியில் மீன் குறைவதை அவர்கள் பட்டறிவில் அறிந்து அந்த உலகப்பார்வையை உருவாக்கி இருப்பார்கள். நவீன அறிவியல் பார்வையில் நிலவுக்கும் கடல் நீர் ஓட்டத்திற்கும் உள்ள தொடர்பு முதலியவற்றை நாம் அறிந்து எதனால் மீன் வரத்து குறைகிறது எனவும் அறிந்து கொள்ளமுடிகிறது. வெறும் அனுபவம் சார்ந்த உலகப்பார்வை என்பதால் நிக்கோபர் பழங்குடி மக்களின் கருத்து அனுபவ அறிவின் வெளிச்சத்தில் நம்பிக்கை ஏற்படும்; பாரம்பரியமாக மாறும். ஒருவேளை நிக்கோபர் பழங்குடியினர் வேறு இடத்தில இடம் பெயர்ந்தாலும் இதே வழமையை கடைபிடிப்பார்கள். எனவே புதிய நிலையில் அவர்களது நம்பிக்கை மூட நம்பிக்கையாக மாறும். ஆனால் விமர்சன அறிவியல் பார்வயில் ஏன் எப்படி என அலசி ஆராய்வதால் மூட நம்பிக்கை தவிர்க்கப்படலாம்.

எனவே அந்தக் காலத்தில் இது மூட நம்பிக்கை அல்ல, இந்த காலத்தில் மூட நம்பிக்கை யாக மாறும் அபாயம் உள்ள பட்டறிவு என நான் கருதுகிறேன். மனித நாகரிகத்தின் துவக்க காலத்தில் சூரியன் கிழக்கே உதிக்கிறது, பூமியை சுற்றுகிறது என தாம் அனுபவித்து பார்த்ததிலிருந்து கருதியது பட்டறிவு. நவீன அறிவியல் வளர்ந்து விமர்சன ஆராய்ச்சி சாத்தியமான இந்தக் காலத்தில் இது மூட நம்பிக்கை. அறிவியலின் வழி பூமி சுற்றுகிறது, அதனால் தான் சூரியன் உதிப்பது போன்ற தோற்றம் எழுகிறது என நம்மால் அறிய முடிகிறது. இவ்வாறு தான் வரலாற்று பார்வை இயங்கியல் நோக்கில் தான் நம்பிக்கை/ மூட நம்பிக்கை மற்றும் அறிவியலுக்கு உள்ள தொடர்பை நான் பார்க்கிறேன்.

2. விண்மீன்களின் ஆய்வில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய நிறமாலைமானியைக் கண்டுபிடித்தது யார்? அந்த கண்டு பிடிப்பு எப்படி நடந்தது?

நிறமாலை மானியைக் கண்டுபிடித்தவர் இவரென்று ஒருவரைக் கூறுவது அவ்வளவு சரியாக இருக்காது என்று கருதுகிறேன். நியூட்டனின் முப்பட்டக ஆய்வில் துவங்கியது இது. அவர் கூட நிறமாலை மானியில் சில கருங்கோடுகளைக் கண்டார். மேலும் துல்லியமான முப்பெட்டகங்கள் கொண்டு பிரோன்ஹோபர் சூரிய நிறமாலையைக் கண்டார். முதலில் சூரியனின் நிறமாலை தொலைநோக்கி லென்ஸ்களின் துலியத்தை அளவிட பயன்படுத்தப்பட்டது. பின்னர் தான் இதன் முழுப் பயனை அறிய முடிந்தது. அவ்வாறு படிப்படியாக நிறமாலை ஆய்வு உருவாகியது.

3. இன்றைய விண்மீன்கள் ஆய்விலும் கியோவன்னி காஸிநியின் செக்ஸ்டண்ட்- முறையிலான இடமாற்றுத் தோற்றப் பிழை கணக்கில் எடுக்கப்படுகிறதா. காஸிநியை கத்தோலிக்க திருச்சபை நடவடிக்கை இன்றி விட்டுவைத்ததா என்ன ?

காஸினி காலத்தில் பெரும் சர்ச்சை ஒன்று இருந்தது. கெப்ளர், கலிலியோ முதலானோர் பூமி சூரியனை சுற்றுகிறது என்றனர். சூரிய மையக் கொள்கையை ஆதரித்தனர். ஆனால் மதவாதிகளோ தமது மறைநூலில் உள்ளபடி பூமி நிலையானது என்று கூறி, மறைநூல் கடவுள் வாக்கு என்று வாதம் புரிந்து சூரிய மையக் கோட்பாடை ஏற்க மறுத்தனர். கலிலியோ முதலானோர் மத அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்டனர். தண்டனை பெற்றனர். மத வாதிகள் அன்று புவிமையக் கருத்தை வலியுறுத்திவந்தனர்.

இந்த சுழலில் தான் காஸினி எது உண்மை என்பதை கண்டறிய முற்பட்டார். சூரிய மையக் கொள்கையின் அடிப்படையில் நீள்வட்டப் பாதையில் பூமி சூரியனை சுற்றி வரும்போது ஜனவரியில் சூரியனுக்கு அருகிலும் ஆறு மாதம் அடைந்த பின்னர் ஜூலையில் வெகு தொலைவிலும் இருக்கும். கெப்ளரின் இரண்டாம் விதியின் படி அருகில் உள்ள சமயத்தில் பூமி வேக வேகமாகப் பாயும். தொலைவில் உள்ளபோது மெதுவாகப் பாயும். சூரியனது நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் விழும் ஒளி புள்ளியின் நகர்ச்சியை கவனித்து கெப்ளர் முன்கூறியது போல தான் ஜனவரியில் வேக வேகமாகவும், ஜூலையில் மெதுவாகவும் பாய்வதைக் கண்டார். இது மதவாதிகளுக்கு மேலும் கலக்கம் தந்தது.

4. ஒளிஆண்டு முறைப்படி விண்மீன் தொலைவை அளப்பது வில்ஹெல்ம் பேஸ்செல் காலத்திலிருந்தே உள்ள நிகழ்வா? சிக்னி 61 தான் முதலில் துல்லியமாய் தொலைவு அளக்கப்பட்ட நட்சத்திரமா?

இடமாற்றுப் பிழை யுக்தியைப் பயன்படுத்தி விண்மீன்களின் தொலைவை அளக்க பிரெட்ரிக் வில்ஹெல்ம் பேஸ்செல் எனும் வானவியலாளர் முதன் முதலில் முற்பட்டார். இதற்க்கு சிக்னி 61 எனும் விண்மீனைத் தேர்வு செய்தார் இவர். இவரைத் தவிர தாமஸ் ஹென்டர்சன், பிரெட்ரிக் ஸ்ட்ருவே எனப் பலரும் வேறு விண்மீன்களின் தொலைவை அளக்க முயன்று கொண்டிருந்தனர். தாம் முந்திக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தில் முனைப்புடன் செயல்பட்டார் பேஸ்செல். இவர் 1835லிருந்து சிக்னி 61 எனும் விண்மீனின் நிலையைத் துல்லியமாக உற்று நோக்கினார். பூமி சூரியனை சுற்றிவரும் போது பல்வேறு நிலைகளில் இந்த விண்மீனின் நிலைகளை கவனமாக குறித்துக் கொண்டார். இந்த விண்மீன் அருகில் உள்ள இரண்டு மிகு தொலைவு பின்புல விண்மீன்களை வைத்து இந்த விண்மீனின் நிலையை வான் கோளத்தில் குறித்தார். இந்த நிலைகளில் உள்ள இடமாற்று தோற்றப் பிழையை கணித்தார். அதிலிருந்து அக்டோபர் 1838இல் இந்த விண்மீனின் இடமற்று தோற்றப் பிழை கோணம் 0.3136 வளைவினாடி (ணீக்ஷீநீsமீநீஷீஸீபீ) என்று கணித்தார். இதன் தொடர்ச்சியாக இந்த விண்மீன் 660,000 வான் அலகு தொலைவில் உள்ளது – அதாவது 96 ட்ரில்லியன் கிலோமீட்டர் தொலைவு. 96,000,000,000,000 கிலோமீட்டர். நவீன அலகில் 10.4 ஒளியாண்டு தொலைவு என விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்தனர். சூரியனுக்குப் பிறகு தொலைவு கண்டுபிடிக்கப் பட்ட முதல் விண்மீன் சிக்னி 61 தான். இதை இன்று பேஸ்செல் விண்மீன் என்று அழைக்கின்றனர்.
பரல்க்ஸ் எனும் இடமாற்று தோற்றப் பிழை அளந்து தொலைவைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. 1900 வரை சுமார் அறுபது விண்மீன்களின் பரலக்ஸ் கோணத்தை தான் கண்டுபிடிக்க முடிந்தது.

எல்லா விண்மீன்களின் தொலைவையும் இவ்வாறு அளக்கமுடியாது. சுமார் 500 ஒளி ஆண்டிற்கு உட்பட்ட விண்மீன்களை மட்டுமே மேற்கூறிய முறையில் அளக்க முடியும். அதற்கும் மேல் வெகு தொலைவில் உள்ள விண்மீன்களின் தொலைவை அளக்க வேறு வழி தேட வேண்டும்.

5. நாம் எல்லோரும் விண்மீன் தூசு என பிரபல வானவியல் அறிஞர் கார்ல் சாகன் கூறுவது குறித்து உங்கள் கருத்து என்ன?

ஆம். நாம் எல்லோரும் விண்மீன் தூசு தான். போலி மதங்கள் தமக்குள் சண்டை இட்டுக்கொண்டு ஆன்மிகம் புனைவு என கூறுவதை விட நமக்கும் பிரபஞ்சத்திற்கும் இடையே உள்ள உறவை நவீன வானவியல் காட்டும் காட்சி உள்ளபடியே மேலும் ஆழமானது; நுட்பமானது.
அண்டத்தைப் போன்று நமது பிண்டமும் அணுக்களால் ஆக்கப்பட்டிருக்கிறது. இந்த அணுக்களில் பெரும்பான்மை அணுக்கள் விண்மீனில் சமைக்கப்பட்டவை. விண்மீன் கருவில் நிகழும் அணுக்கரு பிணைவு வழி தான் பல்வேறு தனிம அணுக்கள் பிரபஞ்சத்தில் உருவாகின்றன. நமது உடம்பில் உள்ள ஹைட்ரஜன் அணுக்களைத் தவிர வேறு எல்லா தனிம அணுக்களும் விண்மீனில் உருவானதுதான்.வெகு காலத்திற்கு முன்பு இறந்துபோன விண்மீனின் எச்சங்களே நாம் என்பதுதான் உண்மை.

6. விண்மீன்களின் இருப்பிட மாறுதல்களில் வானை சரியாக கணிப்பதில் கிரேக்கர்களை விட இந்து மத வான்சாஸ்திரவாதிகள் அதிக துல்லியத்தை அடைந்ததாக காரல் சாகன் போன்றவர்கள் குறிப்பிடுகிறார்களே.. இந்துக் கோயில்களின் ‘நவகிரஹங்களை’ நாம் எப்படி அணுகுவது?

இந்தியப் பாரம்பரியத்தில் கூறப்படும் நவ கிரகங்களில் தொலைநோக்கி இல்லாமல் காட்சி தரும் ஐந்து கோள்கள், நிலவு, சூரியன் ஆகிய மெய் ஏழு கோள்கள் தவிர ராகு, கேது எனும் இரண்டு போலி கோள்கள் புனைவு செய்யப்பட்டுள்ளன. ஆரியபட்டர் போன்ற வானவியலாளர்களுக்கு ராகு மற்றும் கேது கோள்கள் இல்லை, இவை வானத்தில் உள்ள இரண்டு சாந்தி புள்ளிகள். பூமி சூரியனை சுற்றும் தளத்தில் நிலவின் பாதை இடைஊடும் இரண்டு புள்ளிகள் தாம். ஆனால் சோதிடம் போன்ற புனைவுகளில் இவை இரண்டு கோள்கள் என கற்பிதம் செய்யப்படுகிறது..

கிரேக்க வானவியலில் சூரியன் மற்றும் கோள்கள் முதலியவற்றின் அமைப்பு குறித்த விவாதம், பூமி நடுவில் உள்ளதா சூரியன் நடுவில் உள்ளதா என்பது போன்ற கேள்விகள் மையம். ஆனால் பாரம்பரிய இந்திய வானவியலில் பூமி, நிலவு போன்ற வான் பொருள்கள் ஒரு நேர் கோட்டில் இருந்தால் அதே அமைப்பிற்கு இந்த கோள்கள் வர எவ்வளவு காலம் பிடிக்கும் என கணிப்பது முக்கிய கேள்வியாக இருந்தது. எனவே இந்திய வானவியல் ஆய்வில் அல்ஜிப்ரா போன்ற உயர் கணிதவியல் உருவாக்கப்பட்டது.

ஆரியபட்டர் தனது நூலில் மத கருத்துகள் புராணங்கள் சோதிடம் முதலியவற்றைக் குறித்து சிறிதும் குறிப்பிடவில்லை; முற்றிலும் அறிவியல் பூர்வமாக இருக்கிறது என்பதும் இங்கு நாம் கவனிக்கத் தக்க செய்தி. நமது இந்திய அறிவியல் பாரம்பரியத்தைக் குலைப்பது சோதிடம் போன்ற செயல்கள் தாம்.

7. 10,000 விண்மீன்களைப் பட்டியலிட்ட ஸ்டிவென்ஸ் பிளெமிங் போன்ற அசாத்திய திறன் மிக்க பெண் வானியல் அறிஞர்களை வரலாறு தொடர்ந்து இருட்டடிப்பு செய்து வருவது நாம் அறிந்ததுதான். கரோலின் ஹெர்ஷல் பீட்டா லயரே ஜோஹன்னா மெக்கி முதல் ஜோசலின் பெல் வரை வானியலே பெண்மயமானது போல உள்ள நிலையில் இந்திய விஞ்ஞானிகள் குறிப்பாக பெண் விஞ்ஞானிகள் இல்லையெனும் நிலைக்கு என்ன காரணம்?

பொதுவாக பெண் சமத்துவம் எனும் கருத்து பாரம்பரிய சமூக அமைப்பு உடைந்து நவீன சமுதாயம் உருவானதன் பின்னரே உருவாகியுள்ளது. இடையில் இருந்த நிலபிரபுத்துவ அமைப்பில் பெண்களுக்கு போதிய இடம் இருக்கவில்லை. அடிமை நிலை தான் இருந்தது. இந்தியாவில் இன்று பல அறிவியல் நிறுவனங்களில் பெண்கள் உள்ளனர். போதுமான அளவு இல்லை எனினும் முன்னேற்றம் உள்ளது. மேலும் மேலும் பாரம்பரிய நிலப்பிரபுத்துவக் கருத்துகளுக்கு எதிரான கருத்துப் போராட்டங்களின் மூலம் தான் இந்த நிலை மாறும்

8. ஸ்டீபன் ஹாக்கிங் சொல்வதுபோல அயல் நட்சத்திரக் கூட்டங்களில் ஏதாவது ஒரு இடத்தில் ‘யாரோ’ அல்லது எதுவோ வாழ்வதாக கருதுகிறீர்களா?

ஹ்ம்ம்… பல இடங்களில் வானவியல் குறித்து நான் பேசும்போது எல்லாம் இந்தக் கேள்வி எழும். விண்மீன்களைச் சுற்றி வலம் வரும் புறக் கோள்களில் ஏதேனும் ஒன்றில் அயல்-உயிர் இருக்கலாம் தான். பூமியில் மட்டுமே உயிர் இருக்கும் என்பதற்கு எந்த முகாந்தரமும் இல்லை. அது போலவே இன்றைய அறிவியல் நிலையில் உள்ளபடியே வேறு புறக்கோள்களில் உயிர் உள்ளது என்று அறுதியிட்டுக் கூறவும் நம்மிடம் சான்றுகள் இல்லை. எனவே இன்று யூகம் தான் செய்ய முடியும்.

9. சுப்பிரமணியம் சந்திரசேகர் தனது ஆய்வுகளில் அடிக்கடி ‘விட்டார்த்தம்Õ’ ‘பிண்டம்’ போன்று தமிழில் எழுதுகிறார். கருந்துளைகள் குறித்த சந்திரசேகர் எல்லை வானியலில் இன்று வகிக்கும் பாத்திரமென்ன?

தமிழார்வம் கொண்டவராக இருந்தவர் சந்திரசேகர். அவரது வரையறை இன்றளவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வெள்ளை குள்ள விண்மீன்கள் ஆய்வில் இன்றளவும் இவரது ஆய்வுகள் மிக பயன் தருகின்றன.

10. நமது சூரியனின் எதிர்காலம் என்ன? அடிக்கடி ஏதோ காந்த அலை, உலக அழிவு, கோள்கள் விலகுவது அது இது என்று ‘நாசா’ வை மேற்கோள் காட்டி மிரட்டுகிறார்களே?

நவீன ஊடகம் அச்சுறுத்தல் என்ற பீதி உணர்வை அவ்வப்போது தூண்டுவதாக செயல்படுவது கவலை தருகிறது. நமது சூரியன் சுமார் ஐநூறு கோடி வருடம் இப்படியே தான் இருக்கும். அதன் பின்னர் தான் சிவப்பு ராட்சசன் என்ற விண்மீன் வகையாக மாறும். சூரியனிலிருந்து வரும் காந்த அலைகள் போன்றவை இன்று வெகு நுட்பமாக ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. இதனால் சில பாதிப்புகள் ஏற்படலாம், ஆனால் பேரிடராக இருக்காது. மின் இணைப்பு தொலை தொடர்பு முதலியவை பாதிக்கப்படலாம், அவ்வளவே. எனவே தேவையற்ற பீதி தேவையில்லை.

So, what do you think ?