பெரிய யானையை கதிகலங்க வைக்கும் சிறிய எறும்பு

BY IN News- செய்திகள் 1 COMMENT , , , ,

“உருவு கண்டு எள்ளாமை வேண்டும்” என்ற வள்ளுவனின் வாய்மொழி.  டோட் பால்மர் மற்றும் அவரது மாணவர் சாகப் கோஹீன் ஆப்பிரிக்காவில் தமது ஆய்வினை செய்துவரும்போது இந்த கருத்து உள்ளபடியே மெய் தான் என்பதை கண்டுகொண்டனர்.

 இருவரும் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கென்யா என்ற நாட்டின் காட்டுப் பகுதியில் ஆய்வு செய்து வந்தனர். கென்யாவின் உயர்நிலப் பகுதியில் உள்ள சுழல் தன்மை சிறப்பானது. சவன்னாஹ் காடு என இந்த சுழல் பகுதியை அழைக்கப் படுகிறது. இங்கு நெடிய விரிந்த இலை குடை உடைய மரங்கள் அடர்ந்த காடு இருக்காது. மரங்கள் ஒன்றன அருகே ஒன்று என அடர்ந்து அமையாது. இடைவெளி விட்டு விட்டு மரங்கள் அமைவதால், மரத்தின் மேல்கட்டு குடையின் நிழல் நிலம் எங்கும் படியது. எனவே சூரிய ஒளி தடையின்றி நிலத்தின் மீது படியும். எனவே இந்த சவன்னாஹ் பகுதியில் அடர்ந்த புல்வெளி பரவியிருக்கும். ஆளுயர புல் இங்கு வளரும். வேறுவகையில் கூறினால், சவன்னாஹ் என்பது அடிப்படையில் புல்வெளி பகுதியை தான்.

புல்வெளி படர்ந்த பகுதியை என்பதால், புல், செடி மற்றும் புதர்களை உணவாக கொள்ளும் பூச்சிகள், வண்டுகள், விலங்கினங்கள் போன்ற தாவர உண்ணிகள் இங்கு மிகுதியாக இருக்கும். மேய்ச்சல்லில் ஈடுபடும் விளங்குகளான வரிக்குதிரை  ஒட்டகச்சிவிங்கி, யானை முதலியவையும் இந்த காட்டுப்பகுதியில் இருக்கும்.

இந்த சவன்னாஹ்வின் ராஜா யானை தான். பெரிய உருவமுடைய இந்த விலங்கு புல், புதர், செடி, மரம் என எல்லா பசுமை தாவரங்களையும் உண்ணும்.

 பால்மரும் அவரது மாணவர் சாகப் கோஹீனும் கென்யாவின் காடுகளில் இந்த சிறப்பு சுற்றுசுழலில் விலங்குகளின் நடத்தை குறித்து ஆய்வு செய்துவந்தனர். அவர்கள் ஆய்வு செய்ய கென்யா வந்த சமயம் தற்செயலாக வறட்சி ஆண்டாக போனது. நாலு நாள் சாப்பிடாதவன் அள்ளி அள்ளி போட்டு கொள்வதை போல பசி மிகுந்த யானை கண்ட தாவரங்களை எல்லாம் மேய்ந்தது. தான் இலை தழைகளை உண்ணுவது மட்டுமல்ல பசியின் தூண்டுததலால் மதம் பிடித்த மாதிரி தாவரங்களை ஆத்திரத்தோடு பிடுங்கி எறிந்தது. எல்லா தாவரங்களையும் துவம்சம் செய்தாலும், யானை ஆப்பிரிக்காவில் விசேஷமான விஸ்லிங் மரம் என்ற மரத்தை மட்டும் கிடவே நெருங்கவில்லை என்பதை இவர்கள் கண்டனர். புலி பசித்தாலும் புல்லை திங்காது என்பது போல பசியில் வாடினாலும் யானை இந்த விஸ்லிங் மரத்தை மட்டும் அண்டவே இல்லை. வியந்தனர் ஆய்வாளர்கள். ஏன் என அவர்கள் அறிய ஆர்வம் கொண்டு இந்த விஸ்லிங் மரத்தை ஆராய்ந்து பார்த்தனர்.

இந்த மரத்திற்கு விஸ்லிங் மரம் என்ற பெயர் வந்ததே சுவையான செய்தி. இந்த புதர் மரத்தில் ரோஜா முள் போல முற்கள் இருக்கும். இந்த முள்ளின் அடிப்பாகம் வெங்காயம் போல சிமிழ் வடிவில் இருக்கும். முள் மெலிந்து இருக்காது. தடித்து துளையுடைய கழி போல இருக்கும். காற்று வீசும் போது தடித்த துளையுடைய முள் அமைப்பில் பாயும் போது சீட்டி அடிப்பது போன்ற விசில் சப்தம் கேட்கும். இதனாலே தான் இந்த மரத்தை அந்த பகுதி வாழ் மக்கள் ‘சீட்டி அடிக்கும் மரம்’ என்ற பொருள் தரும் பெயரில் அழைத்தனர். இதனை ஆங்கிலத்தில் விஸ்லிங் மரம் என அழைப்பர்.

 இந்த முள் போன்ற அமைப்பு இந்த புதர் மரத்தை மேய வரும் விலங்குகளுக்கு தடை. முள் உள்ளதால் எல்லா விலங்குகளாலும்  இந்த மரத்தை மேய முயலாது. விலங்குகளுக்கு தடையாக இருக்கலாம்; அனால் இதே முள் அமைப்பு தான் எறும்புகளுக்கு இருப்பிடம்; வாழ்விடம். தடித்த துளையுடைய முற்களை கென்யா போன்ற கிழக்கு ஆப்ரிக்கா பகுதியில் குறிப்பிட எறும்பு இனம் தனது வாழ்விடமாக கொண்டு வாழ்கிறது எனக்கண்டனர்.

இந்த மரத்தில் எறும்புகள் மிகுதியாக வாழ்கிறது என்பதை பால்மரும் அவரது மாணவர் கோஹீனும் கண்டனர். எறும்பு மிகுந்த இந்த மரத்தை யானை உண்ண முயன்றால், எறும்பு படை யானையின் துதிக்கையில் புகுந்து யானைக்கு சேதாரம் விளைவிக்கிறது என்பதையும் கண்டனர். இந்த புல்வெளி சவன்னாஹ் பகுதியில் வாழும் எறும்புகள் ஏனைய தாவரத்தினை யானை துவம்சம் செய்யும் போது சினம் கொள்வதில்லை; யானையை தாக்குவதில்லை. அனால், விஸ்லிங் மரத்தை தொடல் போதும், ஜிவ் என்று எறும்புகள் கிளம்பி யானையை தாக்க துவங்குகின்றன.

 கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல, வெறும் இரண்டு மில்லி கிராம் மட்டுமே உடைய எறும்புகள், அதை விட பல கோடி மடங்கு பெரிய யானையை எதிர்க்கிறது. ஏன் தெரியுமா? விஸ்லிங் மரம் எறும்புக்கு இருப்பிடம் மட்டும் தரவில்லை. முள் அமைப்பின் அடியில் உள்ள வெங்காயம் போன்ற உறுப்பில் சர்கரை சத்து உள்ள பூத்தேனை இந்த மரம் உமிழ்கிறது. இந்த பூத்தேன் எறும்புகளுக்கு உணவு. உண்ண உணவு, இருக்க இருப்பிடம் தந்த விஸ்லிங் மரத்திற்கு பாதுகாப்பு எறும்பு. உருவில் பெரியது யானை என்றாலும் சிறிய எறும்பு அதற்கு சம எதிரி. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.

 விஸ்லிங் மரத்தை கண்டு யானை முகம் சுளிக்கிறது; இந்த மரத்தை தவிர்க்கிறது என்பது உறுதிப்பட்டது. ஆயினும், எறும்பு உள்ள மரம் என்பதை யானை எப்படி தெரிந்து கொள்கிறது என்பதை அறிய முற்பட்டனர். விஸ்லிங் மரத்தை கண்டு சூடு கண்ட பூனை போல, யானைக்கு அச்சமா? இல்லை உள்ளபடியே எறும்பு உள்ளதை உணர்ந்து யானை விஸ்லிங் மரத்தை விட்டு விலகுகிறத? இதை விளங்கிக்கொள்ள முயன்றனர். காடு யானையிடம் பரிசோதனை செய்யமுடியாது அல்லவா? எனவே கென்யா பகுதியில் காட்டிலிருந்து பிடித்து வரப்பட்டு வளர்ப்பு மிருகமாக உள்ள யானைகளிடம் இந்த பரிசோதனையை நடத்தினர். பரிசோதனைக்காக, விஸ்லிங் மரத்திலிருந்து ஆய்வாளர்கள் கவனமாக எல்லா எறும்பையும்  அகற்றினர். எறும்பு இல்லாத விஸ்லிங் மரத்தை யானை எந்த தயக்கமும் இன்றி புசித்தது. அத போல யானை பொதுவே விரும்பி உண்ணும் ப்ளாக்தார்ன் எனும் புதரில் வேண்டுமென்று எறும்பை புகுத்தினர். எறும்பு உள்ள புதரை. தனக்கு விருப்பமான உணவு என்றாலும், யானை தொடவில்லை. எறும்பு உள்ள விஸ்லிங் மரத்தை யானை தவிர்த்து.

எனவே எறும்பு உள்ளது என்பதை தனது மோப்ப சக்தியில் அறிந்து கொள்கிறது என்று தெளிவடைந்தனர். தனது மோப்ப சக்தியால் பொதுவே விஸ்லிங் மரத்தில் எறும்பு உள்ளது என்பதை அறிந்த யானை அந்த மரத்தை  திண்டுவதில்லை என்பதை கண்டுனர்ந்தனர். எறும்பின் வாசத்தை மோப்ப சக்தியில் உணர்ந்து யானை செயல்படுகிறது என்பது ஆய்வில் உறுதிப்பட்டது.

 யானை மற்றும் மனிதர்களுக்கிடையில் சிக்கலும் மோதலும் இன்று உலகம் முழுவதும் பரவலாகிவருகிறது. மனித மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக காடுகள், அல்லது காட்டை ஒட்டி உள்ள பகுதிகள் விளை நிலமாகியுள்ளன. தமது இயல்பு வாழ்விடம் பறிபோன நிலையில் காட்டை ஒட்டிய விளைநிலத்தில் யானை புகுந்து பயிரை நாசம் செய்வது இன்று அதிகரித்துள்ளது. தமது விளைநிலம் மற்றும் பயிர் நாசமடைந்த நிலையில் அப்பகுதி வாழ் மக்கள் கோபம் கொண்டு யானையை தொந்திரவு செய்வது முதற்கொண்டு கொலை கூட செய்துவிடுகின்றனர். இதன் தொடர்ச்சியாக யானை இனம் பெரும் அழிவை சந்திக்கிறது.

பால்மர் அவரது மாணவர் கோஹீனின் ஆய்வு எறும்பு போன்ற வாசம் தரும் ரசாயனத்தை பயிரின் மீது தூவி விட்டால், எறும்பு இருக்கிறது என்ற மயக்கத்தில் பயிரை தீண்டாது யானை சென்று விடும் என சுட்டுகிறது. ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல ஒரு சேர யானை பாதுகாப்பு, விளைநில பாதுக்கப்பு என்பதை இதன் வழி அடையாளம். எனவே இதன் தொடர்ச்சியாக எறும்பு வாசம் தரும் ரசாயன பொருளை கண்டுபிடிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர் விஞ்ஞானிகள்.

One Comment

So, what do you think ?