மேகங்கள் பல விதம்

BY IN Article NO COMMENTS YET , , , , , , ,

Cloud atlasநீங்கள் அவ்வப்போது வானைக் கவனித்து வந்தால் பல விதமான மேகங்கள் தென்படும். மேகங்களில் பல வகைகள் உண்டு. அவை அமைந்திருக்கின்ற உயரம், தோன்றும் விதம், அவற்றின் அமைப்பு என பல அம்சங்களைப் பொருத்து நிபுணர்கள் அவற்றை வகைப்படுத்தியுள்ளனர்.

ஏன் மேகங்கள் வெண்மையாக இருக்கின்றன?

மேகங்களில் காற்றும் தண்ணீரும்தான் கலந்திருக்கின்றன. இந்த இரண்டுமே எந்த ஒளியையும் கிரகிக்கும் தன்மை கொண்டவை அல்ல. மாறாக, ஒளியை அப்படியே ஊடுருவச் செய்யும் கண்ணாடி போன்றவை. இருந்தும் மேகங்கள் பால் போன்ற வெண்மை நிறத்தில் இருப்பது, ஓர் ஆச்சரியமான அறிவியல் உண்மை.

மேகங்களில் தண்ணீர் மிகச் சிறிய துளிகளாகப் பரவி இருக்கிறது. மேகங்களுக்குள் ஒளி மிக அதிகத் தொலைவு ஊடுருவிச் செல்லும். அப்படிச் செல்லும்போது, ஏதாவது ஒரு நீர்த்துளியால், ஒளிச்சிதறல் ஏற்படும். இதனால் ஒளியின் பயணத் திசை சிறிதளவு மாறும். அடர்த்தியான மேகங்களில் ஒளியின் ஒவ்வொரு துகளும் பல நீர்த்துளிகள் மீது மோதக்கூடும். ஒளித்துகள்கள் இப்படி ஒவ்வொரு சுற்று மோதி வந்த பின்னர், அந்த ஒளி மேகத்துக்கு வெளியே பல்வேறு திசைகளில் கடத்தப்படும். அப்படிக் கடத்தப்படும்போது, அது உள்ளே நுழைந்த பகுதி வழியாகவே பெரும்பாலும் வெளியேறும்.

இந்த நிகழ்வின் அடிப்படையில், ஒரு மேகத்தின் நிறம் என்பது அனைத்து நிறங்களின் கலவையாகவே இருக்கும். பகல் நேரத்தில் மேகங்கள் பெரும்பாலும் வெள்ளை நிறத்திலேயே தோற்றம் தருகின்றன. சூரிய ஒளியில் இருந்து வரும் ஒளி, வானத்தின் வெளிர் நீல நிறத்துடன் சேர்ந்தால் கிடைப்பது அந்த நிறமே. அதேநேரம் மாலை நேரங்களிலும், அதிக வெளிச்சத்தை உமிழும் நகரங்களுக்கு மேலேயும் வெள்ளை மேகங்களை அதிகம் பார்க்க முடியாது.

மேகங்களுக்கு பெயர் வைத்தல்

இப்போது ஒருவர் தான் கூறுகின்ற மேகத்தை அந்த அட்லஸில் தனி வகை மேகமாகக் குறிப்பிட வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரி வருகிறார். அவர் பெயர் காவின் பிரிடோர் பின்னி என்பதாகும் (Gavin Pretor Pinney). அவர் குறிப்பிடுகின்ற மேகம் ஒன்றும் உலகில் இதுவரை வானில் காணப்படாத மேகம் அல்ல. ஏற்கெனவே அறியப்பட்டது தான்.

ஆனால் அதைத் தனி வகையாகக் குறிப்பிட வேண்டும் என்பது தான் அவரது கோரிக்கையாகும். அந்த மேகத்தின் பெயர் அண்டுலாடஸ் அஸ்பெராட்டஸ் என்பதாகும் (Undulatus Asperatus). இது அவராக வைத்த பெயர். கொந்தளிக்கும் மேகம் என்பது அதன் அர்த்தம்.

பல்வேறு மேகங்களுக்கும் லத்தின மொழியில் பெயர் வைப்பது தான் வழக்கம். ஆகவே பிரிடோர் பின்னி லத்தீன மொழி தெரிந்த ஒருவரின் உதவியுடன் அந்த மேகத்துக்கு அப்பெயரை வைத்தார். பின்னி வானிலை நிபுணர் அல்ல. அவர் ஓர் எழுத்தாளர். கிராபிக் டிசைனர். ஒரு சமயம் அவர் மேகங்களை கவனிக்கலானார்.

நீங்கள் வானை நோக்கினால் மேகங்கள் ஆலமரம் மாதிரி, காளை மாடு மாதிரி, சிங்கம் மாதிரி எல்லாம் சிறிது நேரம் தோற்றமளிக்கும். அவர் இப்படியாக பல வித உருவங்களிலான மேகங்களின் புகைப்படங்களை சேகரிக்கலானார். விரைவிலேயே உலகில் அவர் போலவே பலரும் மேகங்களின் உருவங்களைப் படம் எடுத்து அவருக்கு அனுப்பலாயினர். அவர் அமைத்த மேக ரசிகர் சங்கத்தில் இன்று உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர்.

மேகங்களின் விசித்திர உருவங்கள் மீது பின்னி ஆர்வம் காட்டியதுடன் நில்லாமல் ஒரு படி மேலே போய் மேகங்களின் வகைகள் மீதும் கவனம் செலுத்தனார். அந்த வகையில் தான் அவர் அண்டுலாட்டஸ் அஸ்பெராட்டஸ் மேகத்தை ஆராயலானார். பலரும் அவருக்கு அந்த வகை மேகத்தின் படங்களை அனுப்பினர். இது சாதாரண அண்டுலாட்டஸ் மேகம் போன்றது அல்ல என்று அவருக்குத் தோன்றியது. ஆகவே தான் சர்வதேச வானிலை சங்கத்துக்கு இது பற்றி எழுதினார்.

பின்னியில் ஆசை

உலகில் மேகங்களை வகைப்படுத்துவதில் சர்வதேச வானிலை அமைப்பு தான் அதிகாரம் பெற்றது. அந்த சங்கம் ஐ. நா. அமைப்பின் ஓர் அங்கமாகும். அது நீண்டகாலமாக மேகங்களை வகைப்படுத்தி அவற்றின் படங்கள் அடங்கிய அட்லஸை வெளியிட்டு வருகிறது. கடைசி பதிப்பு 1987 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. கடந்த 60 ஆண்டுகளில் அந்த அட்லஸில் புது வகை மேகம் எதுவும் சேர்க்கப்படவில்லை.

பின்னிக்கு தாம் கூறுகின்ற மேகம் அந்த அட்லஸில் தனி வகையாக இடம் பெற வேண்டும் என்று ஆசை. பின்னியின் முயற்சியால் இங்கிலாந்தில் ஒரு பல்கலைக்கழக மாணவர் அந்த குறிப்பிட்ட மேகம் பற்றி ஆராய்ச்சி நடத்தி ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

என்ன லாபம்?

மேகங்களின் அட்லஸின் அடுத்த பதிப்பு விரைவில் தயாரிக்கப்படலாம். அதில் பின்னி கூறுகின்ற மேகம் இடம் பெற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த அட்ல்ஸ் தயாரிப்பு தொடர்பான அதிகாரி ஒருவர் கூறுகையில் பின்னி தெரிவித்துள்ள மேகம் ஒரு வேளை இடம் பெறலாம் என்றார்.

ஆனால் இது பற்றி உறுதியாக எதுவும் கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரு வேளை அட்லஸில் அந்த மேகம் சேர்க்கப்படுமானால் அதற்கு பின்னி வைத்த பெயருக்குப் பதில் வேறு (லத்தீன) பெயர் வைக்கப்படலாம் என்றும் அவர் சொன்னார்.

அட்லஸில் அது இடம் பெற்றால் போதும். நீங்கள் என்ன பெயர் வைத்தாலும் சரி என்கிறார் பின்னி. அட்லஸில் அந்த மேகம் இடம் பெறுவதால் பின்னிக்கு என்ன லாபம்? ஒரு லாபமும் இல்லை. தான் குறிப்பிட்ட மேகம் தனி அந்தஸ்து பெற்று விட்டது என்ற திருப்தி தான்.

So, what do you think ?