நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் Nicolaus Copernicus

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , , , , , , , , ,

 கோப்பர் நிக்கஸ்நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ்  (பிறப்பு  19 பிப்ரவரி 1473   இறப்பு  24 மே 1523 ) கோப்பர்நிக்கஸ் பிறந்த இடம், போலந்திலுள்ள டாருன் நகரம்.  அவருக்கு பெற்றோர் வைத்த பெயர், மிகாலை காப்பெர்நிக். அவர் புகழ்பெற்ற புத்தகங்களை எழுத ஆரம்பித்த சமயத்தில், நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ் என்ற லத்தீன் பெயரை தனக்கு வைத்துக்கொண்டார். அவருடைய அப்பா டாருன் நகரில் வியாபாரம் செய்தார். அவருக்கு நான்கு பிள்ளைகள்; நிக்கோலஸ்தான் கடைசி பிள்ளை. 11-வது வயதில் நிக்கோலஸ், அப்பாவை இழந்தார். நிக்கோலஸின் தாய்மாமன் லூகாஸ் வாக்ஸன்ரோடு என்பவர் நிக்கோலஸையும் மற்ற மூன்று பிள்ளைகளையும் வளர்த்தார். சிறந்த கல்விபெற நிக்கோலஸுக்கு உதவிய அவர், மதகுரு ஆகும்படியும் அவரை ஊக்குவித்தார்.

நிக்கோலஸ் முதலில் தனது சொந்த ஊரில் படிக்கத் தொடங்கினார்; பிறகு அருகேயிருந்த கெல்ம்நாவில் படிப்பைத் தொடர்ந்தார். அங்கு அவர் லத்தீன் மொழியைக் கற்றுக்கொண்டு மிகப் பழமையான எழுத்தாளர்களின் புத்தகங்களை ஆராய்ச்சி செய்தார். 18-வது வயதில் போலந்தின் அப்போதைய தலைநகருக்கு, அதாவது கிராகெளவிற்கு சென்றார். அங்குள்ள யுனிவர்சிட்டியில் சேர்ந்து வானியலில் தனக்கிருந்த அறிவுப் பசியைத் தீர்க்கும் பொருட்டு அதை பயின்றார். கிராகெளவில் படிப்பை முடித்த பிறகு பால்டிக் கடல் பகுதியிலிருந்த ஃபிரம்பர்க் நகரத்திற்கு வரும்படியாக நிக்கோலஸை அவருடைய மாமா அழைத்தார்; அந்த சமயத்தில் அவருடைய மாமா, வார்ம்யா என்ற பகுதியின் தலைமைக் குருவாக ஆகிவிட்டிருந்தார். நிக்கோலஸும் சர்ச்சில் ஒரு விசேஷ பதவியை ஏற்க வேண்டுமென்று அவர் விரும்பினார்.

என்றாலும் 23 வயதான நிக்கோலஸ் தன் அறிவுப் பசியைத் தீர்க்க விரும்பினார். எனவே அவருடைய மாமாவிடம் மன்றாடி, கிறிஸ்தவ சமயச்சட்டம், மருத்துவம், கணிதம் ஆகியவற்றைத் தொடர்ந்து கற்க அனுமதி பெற்றார். போலோக்னா, படூவா ஆகிய இத்தாலிய பல்கலைக்கழகங்களில் படிப்பைத் தொடர்ந்தார். அங்கு அவர் டொமேனிக்கோ மாரீயா நொவாரா என்ற வானியல் நிபுணருடனும் பியெட்ரோ பொம்பொனாட்ஸி என்ற தத்துவ வல்லுநருடனும் நெருங்கிப் பழகினார். பொம்பொனாட்ஸியின் போதனைகள், “இடைக்கால கருத்துக்களிலிருந்து [விடுபட] அந்த இளம் வானவியலாளருக்கு உதவின” என்பதாக ஸ்டாநிஸ்வாஃப் பஸாஸ்ட்கிவிக் என்ற சரித்திராசிரியர் கூறினார்.

கோப்பர்நிக்கஸ் ஓய்வு நேரங்களில் பழங்கால வானியல் நிபுணர்களுடைய புத்தகங்களைப் படித்து ஆராய்ந்தார். அந்த மும்முரமான ஆராய்ச்சியின்போது, லத்தீன் மொழி புத்தகங்களில் போதுமான தகவல்கள் இல்லாததை உணர்ந்தார். எனவே மூலவாக்கியங்களைப் படிப்பதற்காக கிரேக்க மொழியைக் கற்றார். பட்டப் படிப்பு முடிவடையும் சமயத்தில், அவர் கிறிஸ்தவ சமயச்சட்டத்தில் டாக்டர் பட்டம் பெற்றுவிட்டார், அதோடு கணித வல்லுநராகவும், மருத்துவராகவும்கூட ஆகிவிட்டார். மேலும், கிரேக்க மொழியில் புலமை பெற்றிருந்ததால் கிரேக்கிலிருந்து நேரடியாக போலிஷ் மொழிக்கு ஒரு கட்டுரையை மொழிபெயர்த்தார். அவ்வாறு மொழிபெயர்த்த முதல் நபர் இவரே.

சூரிய மையக் கொள்கை

கோப்பர்நிக்கஸ் கோள்களைப் பற்றிய ஆராய்ச்சியாளர். தான் சேகரித்த பல தகவல்களையும், தனக்கு முன்னர் பலர் சேகரித்திருந்த தகவல்களையும் வைத்து 2000 ஆண்டுகளாக மக்கள் நம்பிக் கொண்டிருந்த புவிமையக் கொள்கையை மாற்றி சூரிய மையக் கொள்கையை எடுத்து வைத்தார். மேலும், அறிவியலில் சேகரித்திருக்கும் தகவல்களை வைத்து முடிவுக்கு வரலாம் என்ற வழிமுறையையும் கொண்டு வந்தார். அதற்கு முன்பு வரை யாராவது ஒருவரின் எண்ணத்தில் தோன்றுவதாகத் தான் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. இவரோ பல தகவல்களை வைத்து இப்படித் தான் இருக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தார். இப்போது பல கண்டுபிடிப்புகள் இந்த வழிமுறையின் மூலம் நிகழ்த்தப்படுகின்றன. எனவே அந்த வகையிலும் இவர் முன் நிற்கின்றார்.
கோப்பர்நிக்கஸ் இதைக் கண்டறிந்தது எவ்வாறு?
1499ல் இத்தாலியில் தனது பல்கலைப் படிப்பை முடித்த நிக்கஸ் போலந்தில் இருக்கும் ஒரு கத்தோலிக்கத் தேவாலயத்தில் பாதிரியாராகப் பணியாற்ற ஆரம்பித்தார். அவருக்கு தேவாலயக் கோபுரத்தின் மேல் பகுதியில் அறை இருந்தது. அங்கிருந்து தனது வானியல் ஆராய்ச்சியை ஆரம்பித்தார் நிக்கஸ்.
அவரது காலத்தில் 1500 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்க விஞ்ஞானி ஃப்டோளெமி உருவாக்கிய புவிமையக் கொள்கை நடைமுறையில் இருந்தது. அதாவது புவி நிலையாக நிற்பதாகவும், சூரியனிலிருந்து மற்ற கோள்கள் யாவும் புவியை ஒரு வட்டப் பாதையில் சுற்றி வருவதாகவும் நம்பப்பட்டது. நட்சத்திரங்கள் யாவும் ஒரு மிகப் பெரிய கோள இடத்தின் வெளிப்புறத்தில் நிலையாக நிற்பனவையாகவும் கருதப்பட்டன.
ஆனால், நாளாக நாளாக ஃப்டோளெமியின் வட்டப்பாதை விளக்கங்கள் சரியாக இல்லை. காரணம் அவர் குறித்த பாதையில் கோள்கள் தென்படாமல் விலகித் தெரிந்தன. அடுத்து வந்தவர்கள் அனைவரும் அவரைப் பின்பற்றியே வட்டப்பாதையை நீள் வட்டப் பாதையாக மாற்றிப் பார்த்தனர். அப்போதும் தவறு ஏற்பட ஆரம்பித்தது. நீள் வட்டங்களுக்குள் நீள் வட்டங்கள் என்று முயற்சி செய்தனர். அப்போதும் சிறிய அளவில் தவறுகள் ஏற்பட்டன.
20 ஆண்டுகளாகத் தினமும் கோள்கள் இருக்கும் இடத்தினைக் குறித்து வைத்து அதனுடன் ஃப்டோளெமி மற்றும் மற்றவர்களின் கணிப்பையும் வைத்துச் சரிபார்த்த நிக்கஸ் இரண்டும் கொஞ்சமும் ஒத்துப் போகாததைப் பார்த்து அயர்ச்சியுற்றார்.
சரி, ஒவ்வொரு நகரும் கோளிலிருந்து இன்னொரு நகரும் கோள் எவ்வாறு பார்வைக்குத் தெரியும் என்று கணித்துப் பார்த்தார். அவை சரியாக நீள் வட்டங்களில் நகர்வது கண்டு ஆச்சரியமுற்றார். அப்படியானால் புவியும் ஒரு நகரும் கோளாக இருந்தால் என்னாகும்? என்று யோசனை தோன்றியது. இவ்வாறு அவர் முடிவுக்கு வரக் காரணம், ஒவ்வொரு கோளும் ஆண்டு முழுதும் வெவ்வேறு இடத்திலேயே தோன்றின. அது அவருக்குக் குழப்பமளித்தது. புவி மையமானதாக நகராததாக இருந்து கோள்கள் வட்டப்பாதையில் சுற்றி வந்தால் கோள்கள் மீண்டும் இருந்த இடத்திற்கே வரவேண்டுமே! அவ்வாறு வரவே இல்லையே! எனவே தான் புவியும் நகர்கின்றதோ என்று அவருக்குத் தோன்றியது.
அவரது 20 ஆண்டு கால ஆராய்ச்சியில் சூரியன் மட்டுமே தனது அளவு மாறாமல் தெரிகின்றது என்றும் மற்ற கோள்கள் சிறியதாகவும் பின்னர் பெரியதாகவும் தோன்றுகின்றன என்றும் அறிந்தார். ஆக, சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான தூரம் மாறுவதில்லை என்று உணர்ந்தார்.
ஆக, பூமி நகர்கின்றது என்பது ஒரு முடிவு. சூரியனுக்கும் பூமிக்கும் தூரம் மாறவில்லை என்பது ஒரு முடிவு. இரண்டையும் சேர்த்து வைத்துப் பார்த்தார். சூரியனை நடுவே கொண்டு பூமி சுற்றினால் மட்டுமே இது சாத்தியம் என்ற முடிவுக்கு வந்தார். அவரது கண்டுபிடிப்பை மையமாகக் கொண்டு அளந்து பார்த்தார்.
என்ன ஒரு அதிசயம்! சூரியனை மையமாகக் கொண்டு கோள்கள் யாவும் ஒரே வட்டப்பாதையில் சுழன்று வந்தன. நாளை இந்தக் கோள் இங்கே தான் தெரிய வேண்டும் என்று அவரால் எளிதாக யூகிக்க முடிந்தது. என்ன ஒரு அதிசயக் கண்டுபிடிப்பு?
ஆனால், சோகம் என்னவென்றால், ஏற்கனவே இருப்பதை மறுத்துச் சொன்னால் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அவரது ஆராய்ச்சிக்குறிப்புகளைப் பதுக்கியே வைத்திருந்தார். 1543ல் அவரது கண்டுபிடிப்புகள் அவரது வாழ்நாளுக்குப் பிறகே வெளிவந்தன. அதன் பின்னரும் 60 ஆண்டுகளாகப் பல சர்ச்சைகள் நிகழ்ந்தன.
கெப்ளரும், கலிலியோவும் பல சோதனைகள் மூலம் சூரியமையக் கொள்கையினை நிரூபித்து கோப்பர்நிக்கஸின் கண்டுபிடிப்பு சரியானதென்று உறுதி செய்த பின்னரே அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

கோப்பர்நிக்கஸ் தன்னுடைய புத்தகத்தை ஆறு பகுதிகளாக பிரித்திருக்கிறார். அவருடைய புத்தகத்தின் சில முக்கியமான கருத்துக்கள் கீழே:

● எத்தனையோ “பயணிகளின்” நகர்வுகளை ‘சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் சூரியன்’ கட்டுப்படுத்துகிறது. அதில் நம்முடைய கிரகமும் ஒன்று.

● கிரகங்கள் ஒரே திசையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. அதில் பூமியும் ஒன்று. பூமி ஒரு நாளைக்கு ஒரு முறை அதன் அச்சிலேயே சுழல்கிறது. ஒரு வருடத்திற்கு ஒரு முறை சூரியனைச் சுற்றி வருகிறது.

● சூரியனை மையமாக கொண்டு சுற்றிவரும் கிரகங்களின் வரிசையில், முதலாவது புதன், இரண்டாவது வெள்ளி, அதற்கு அடுத்து வருவது பூமியும் சந்திரனும், பிறகு செவ்வாய், வியாழன், கடைசியாக சனி.

Nicolaus Copernicus was a Renaissance mathematician and astronomer who formulated a model of the universe that placed the Sun rather than the Earth at the center of the universe.
Born: February 19, 1473, Toruń, Poland
Died: May 24, 1543, Frombork, Poland
Influenced: Galileo Galilei, Isaac Newton, Giordano Bruno, Thomas Digges
Influenced by: Ptolemy, Aristotle, Aristarchus of Samos, Nasir al-Din al-Tusi, Al-Battani
Quotes
To know that we know what we know, and to know that we do not know what we do not know, that is true knowledge.
Mathematics is written for mathematicians.
For it is the duty of an astronomer to compose the history of the celestial motions through careful and expert study.

So, what do you think ?