பாவேந்தர் பாரதிதாசன்

BY IN Scientist - அறிஞர்கள் NO COMMENTS YET , ,

Bharathidasanபுரட்சி மிகுந்த தனது எழுத்துகள் மூலம் தமிழக மக்களிடம் என்று நிலைத்திருக்கும் ’பாவேந்தர்’ பாரதிதாசன் பிறந்த தினம் இன்று.

மகாகவி பாரதியின் கவிதா மண்டலத்தில் தோன்றிய முதல்கவிஞரான பாரதிதாசன் தனக்கென்று ஒரு கவிஞர் பரம்பரையையே உருவாக்கினார்.

புதுச்சேரியில் (1891) பிறந்த பாரதிதாசனின் இயற்பெயர் கனக சுப்புரத்தினம். 10 வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றிருந்த அவர் பாரதியார் மீது கொண்ட பற்றால், தன் பெயரை பாரதிதாசன் என்று மாற்றி கொண்டார்.

தேச சேவகன், புதுவைக் கலைமகன், தேசோபகாரி, தேசபக்தன், ஆனந்தபோதினி, சுதேசிமித்திரன், புதுவை முரசு, குயில் உள்ளிட்ட பல இதழ்களின் ஆசிரியராகப் பணிபுரிந்தார். திரைப்படத் துறையில் 1937-ல் பிரவேசித்த பாரதிதாசன் கதை, திரைக்கதை, வசனம், பாடல், படத் தயாரிப்பு என அனைத்து தளங்களிலும் முத்திரை பதித்தவர்.

அவர் இயற்றிய ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’, ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?’ போன்ற பல பாடல்கள் காலத்தால் அழியாதவை.

‘எங்கெங்கு காணினும் சக்தியடா! ஏழுகடல் அவள் வண்ணமடா!’ என்றெல்லாம் ஆரம்பத்தில் ஆன்மிகத்தில் ஈடுபாடுகொண்டு கவிதைகளை உருவாக்கினார். பின்னர் முற்றிலுமாக அதிலிருந்து விலகி முழுக்கமுழுக்கச் சமூகச் சிந்தனை கவிதைகளை இயற்றத் தொடங்கினார். பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின்மீது அளப்பரிய ஈடுபாடுகொண்டார். அதன் தாக்கத்தில் ”இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி இருக்கிறது என்பானும் இருக்கின் றானே!” என்று பாடத் தொடங்கினார்.

பெரியார் ஈ.வெ.ரா. அவர்களைப் பற்றி பாரதிதாசன் தீட்டிய பாடல் புகழ்மிக்கது. ”தொண்டு செய்து பழுத்த பழம், தூய தாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும் அவர்தாம் பெரியார் யார்? அவர்தாம் பெரியார்” என்ற பாடல் இன்றுவரை பகுத்தறிவு மேடைகளில் முழங்கப்பட்டு வருகிறது.

பால்ய விவாகமும் அதைத் தொடர்ந்து பெண்கள் விதவையாவதும் இயல்பாக நடைபெற்று வந்த காலம் ஒன்றிருந்தது. அப்போது விதவை மறுமணமே பாவமாகக் கருதப்பட்டது. பெண்கள் காலம்முழுவதும் வெள்ளையுடை அணிந்து விதவை என்ற முத்திரைக் குத்தப்பட்டு வாழ்க்கை பாழாக்கப்படுவதைக் கண்டு மனமிரங்கிய பாரதிதாசன் ”கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரில் பழுத்த பலா” என்று எழுதிய கவிதை சமூக எழுச்சியை உருவாக்கத் துணைபுரிந்தது.

பல்வேறு புனைப்பெயர்களில் பாடல், கட்டுரை, நாடகம், கவிதை தொகுப்பு, கதைகளை பாரதிதாசன் எழுதிவந்தார். ‘இலக்கியக் கோலங்கள்’, ‘இளைஞர் இலக்கியம்’, ‘குடும்ப விளக்கு’, ‘பாண்டியன் பரிசு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘குமரகுருபரர்’ போன்றவை இவரது முக்கியப் படைப்புகள் ஆகும்.

புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினராக 1954-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1969-ல் இவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்துக்கு ‘சாகித்ய அகாடமி’ விருது கிடைத்தது. 1990-ல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கியது.

புரட்சிக் கவிஞர், பாவேந்தர் என்று கொண்டாடப்படுபவரும், 20-ம் நூற்றாண்டின் இணையற்ற படைப்பாளிகளில் ஒருவருமாக பாரதிதாசன் அறியப்படுகிறார்.

So, what do you think ?