அறிவியல் இயக்க வரலாறு People’s science movement

BY IN Article, PSF NO COMMENTS YET , , , , , , , , , , , , , ,

PSF logoஅறிமுகம்

புதுவை அறிவியல் இயக்கம் துவங்கி 32வது ஆண்டை நெருங்கிறது. துவங்கிய காலம் முதல் இன்றுவரை பல்வேறு சாதனைகளை புதுவையில் செய்துள்ளது. புதுவை அறிவியல் இயக்கம் புதுவையில் தவிர்க்க முடியாத இயக்கமாக உருவாகியுள்ளது.  கல்வி, சுகாதாரம், அறிவியல் வெளியீடு, வளர்ச்சி, அறிவியல் பிரச்சாரம் போன்ற பணிகளில் பல முன்னுதாரனங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் அறிந்துள்ள இயக்கமாக புதுவை அறிவியல் இயக்கம் உள்ளது.

புதுவை அறிவியல் இயக்கத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் மகத்தான இயக்கத்தின் வரலாற்றைத் தெரிந்து கொள்வதும், புரிந்து கொள்வதும் மிக அவசியமாகிறது. கடந்தகால வரலாறு என்பது தற்போது நாம் பெருமை பேசுவதற்காக அல்ல. கடந்த கால அனுபவங்களில் இருந்து பல புதிய வழிமுறைகளை உருவாக்க முடியும். அறிவியல் இயக்கம் என்றால் என்ன? அறிவியலை வளர செய்யவா? ஆயின் இங்கு பலரும் தொழில்முறை அறிவியல் அறிவியலறிஞர்களல்லவே அறிவியல் பிரச்சாரம் எதற்கு?  இக்கேள்விக்கு விடைகாண எக்காலக் கட்டத்தில் அறிவியல் பிரச்சாரம் துவங்கியது, நோக்கம் இலக்கு முதலியவற்றில் காலப்போக்கில் ஏற்பட்ட மாறுதல்கள் என்ன, என்பது பற்றி கூர்ந்து நோக்கி அலசி ஆராய்வதன் தெளிவாக்கிக் கொள்ளலாம். இயக்கதின் திசை போக்கினைக் கணிக்க வரலாற்று பாதையைப் புரிந்து கொள்வது அவசியம்.

மக்கள் அறிவியல் இயக்கம் என்பது இந்திய நாட்டிற்கு ஒரு புதிய வடிவம். இந்த வடிவம் உருவாவதற்கு முன்பே அறிவியலையும், அறிவியல் பிரச்சாரத்தையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் சில மாநிலங்களில் இருந்து வந்திருக்கிறது.

அறிவியல் பரப்பும் பணியின் தேவை

 அறிவியல் தொழில்நுட்பம் பன்மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. நாளுக்குநாள்,நிமிடத்திற்கு நிமிடம் பாய்ச்சல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும் மக்களில் பெரும் பகுதியினர் வறுமையினாலும்,நோயினாலும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.அறிவியல் தொழில் நுட்ப அறிவு ஒரு சாரருக்கு மட்டுமே பயன்பட்டு வருகிறது. அனைவருக்கும் தரமான வாழ்க்கையை உத்திரவாதப்படுத்த அறிவியல் அறிவையும், அறிவியல் தொழில் நுட்ப அறிவையும் பயன்படுத்தவில்லை.

அறிவியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இயற்கை வள ஆதாரங்களை சுய நலநோக்கோடு ஒரு பகுதியினர் பயன்படுத்தி பெரும் செல்வம் சேர்த்து வருகிறார்கள். அது மனித இனத்தின் பெரும் பகுதியினருக்கு தீங்கு விளைப்பதாகவும் அமைகிறது.இதைத் தவிர்க்க அறிவியலை பரப்ப வேண்டியுள்ளது.

அறிவியல் பரப்புதல்

 முதலாளித்துவ, நிலபிரபுத்துவ கட்டமைப்பில் இருந்து இந்தியா விடுபடவில்லை. இந்த கட்டமைப்பில்  மதத்திற்கு, மொழிக்கு, ஜாதிக்கு, பழமையான தத்துவங்களுக்கு, மூடப்பழக்கவழக்கத்திற்கு பங்குண்டு, இந்த சமுதாயம் இவைகளைப் போற்றி பாதுகாப்பதோடு வளர்க்கவும் செய்கின்றன. இவைகளை உடைத்தெரிவதற்கு அறிவியல் பார்வை, அறிவியல் கண்ணோட்டம், அறிவியல் மனப்பான்மை கொண்ட மக்களை உருவாக்க வேண்டும்.

அறிவியலை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் மக்களுக்கு எதிரான கருத்துக்களை எதிர்த்த போராட்டம்

 அறிவியலும் தொழில்  நுட்ப வளர்ச்சி என்பதும் ஏதோ சூனியத்தில் இருந்து உருவானது அல்ல. அவைகள் சமூகத்திற்குல் இருந்து உருவானவைகளே, நமது சமூக அமைப்பு ஏற்றத் தாழ்வுள்ள சமூகம். அறிவியலும், தொழில் நுட்பமும் வசதி படைத்தவர்களுக்கு சேவை செய்யக் கூடியதாக இருந்து வருகிறது. சமுதாயத்தில் பெரும்பான்மையான மக்களுக்கு எதுவும் கிடைக்காத சூழல் இருந்து வருகிறது. இவ்வாறு அறிவியல் தொழில் நுட்பங்கள் மறுக்கப்பட்டுவரும் மக்களுக்கு தேவையானவற்றைப் பெற்றுத்தர வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதிப்பு, மக்கள் ஆரோக்கியம் ,கல்வி மறுப்பு, வனபாதுகாப்பு என்ற பெயரில் மலைவாசிகளை அப்புறப்படுத்துதல், தண்ணீர் பாதுகாப்பு, அத்தியாவசியமற்ற மருந்துகள், தொழிற்சாலைக்கழிவுகள், அறிவியலை இரானுவமயமாக்கல், உலக அமைதி போன்ற பல்வேறு மக்கள் விரோத செயல்களிலிருந்து விடுபட நாம் பல செயல்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது.

அறிவியல் சமூகப் மாற்றத்திற்கே

 அறிவியல் சார்ந்த வேலைகளையும், நிகழ்சிகளையும் செய்வதன் மூலம் சமூகப் புரட்சிக்கான களத்தை தயார் செய்யமுடியும். இந்த களத்தில் சமூக உணர்வுகொண்ட எந்தவொரு அமைப்பும்,தனி மனிதனும் தங்களை இணைத்துக்கொள்ள வாய்ப்புண்டு. இந்த மேடை மதம்,இனம்,மொழி,ஜாதி போன்றவைகளுக்கு அப்பாற்பட்டது.

மாற்றுத் திட்டங்களை உருவாக்குதல்

அரசினால் உருவாக்கப்படும் திட்டங்களில் உள்ள குறைபாடுகளை நீக்க மாற்றுத் திட்டங்களை குறைந்த நிதி மூலதனத்தில் உருவாக்குவது,அப்படிப்பட்ட திட்டங்களை கேட்பதற்கு மக்களை கருத்து ரீதியாக தயார் செய்வது ,மாற்றுத்திட்டங்களை மக்களுக்கு லாபமாக்கி வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது. இத்திட்டங்களுக்காக விஞ்ஞானிகளை ஒருங்கிணைத்து மாற்றுகொள்கைகளையும்,வழிமுறைகளையும் உருவாக்குவது போன்ற பல்வேறு பணிகளிலும் ஈடுபடுவது.மக்கள் விரோத, அறிவியல் பிரச்சாரங்களுக்கு எதிராக செயல்படுவதும் நடந்துவருகிறது.

அறிவியல் தொழில்நுட்ப தற்சார்புக்கான போராட்டம்

 அறிவியலை மக்கள் நலனுக்குப் புறம்பாகபயன்படுத்தி லாபம் சம்பாதிப்பது, குறிப்பாக மருந்து, சுற்றுச்சூழல் விஷயத்தில் அரசின் நிலைப்பாடுகளை பரிசீலிப்பது, பன்னாட்டுக் கம்பெனிகளின் தொழில்கள் இந்தியாவின் சுயசார்பிற்கும், தொழில் வளர்ச்சிக்கும் தடையாயிருப்பதை எதிர்ப்பது, இதற்காக மக்களை அணி திரட்டவும், இயக்கங்கள் நடத்தவும் அறிவியல் பிரச்சாரம் தேவையாக இருக்கிறது.

அறிவியல் பரப்புதலின் வரலாறு

 1.தனிநபர்கள்

மனித உழைப்பும், அறிவும் இணைந்தே வளர்ந்து வந்துள்ளன. தனிமனிதன் தன் அனுபவத்தைச் சுற்றியுள்ளவர்களோடு பகிர்ந்து கொள்வது, வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலிருந்தே தொடர்ந்து வருவதாகும்.

இந்தியாவில் சமண, பௌத்த, பூர்வமீமாம்சம், சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிகம், உலகாயதம், அசீவகம் ஆகிய தத்துவ பிரிவுகளும், பல்வேறு தனிநபர்களும்  பல்வேறு காலக்கட்டத்தில் அறிவியல் பரப்புமும் பணியை செய்துவந்தாலும் கடந்த 17ம் நூற்றாண்டில் அறிவியலைப் பொதுமக்களிடையே பரப்பும் நடைமுறை தோன்றியது. பாரடே போன்றோர் அறிவியல் உரைகளை நிகழ்த்தினர். எளிய நடையில் தாய்மொழியில் அறிவியல் கட்டுரைகளை வெளியிட்டனர். ஐரோப்பாவில் இருந்து அரேபியா, இந்தியா போன்ற பகுதிகளுக்கு வணிகத்திற்காக பலர் சென்றபோது புத்தகங்கள் கருத்துக்கள், கருவிகள் வந்தன. அரேபியாவில் மத ஒடுக்கு முறைக்கு பயந்து ஓடி வந்தபோதும் பல அரிய புத்தகங்கள் வந்துள்ளன.

2.அரசு சார் துறைகள்

 வேளாண்மைத்துறையில் உற்பத்தியைப் பெருக்கவும், உற்பத்திப் பொருட்களை பாதுகாத்து பயன்படுத்தவும் தேவையான நுட்பங்கள் மக்களிடம் பரப்பப்பட்டன.மக்கள் நலவாழ்விற்கு தேவையான சுகாதாரம், நோய்கள் பரவாமல் தடுத்தல், குடும்ப நலம், சூழல் பாதுகாப்பு, எரிபொருள் பயன்பாடு போன்றவற்றில் அரசு துறைகள் மக்களிடம் பிரச்சாரமாக எடுத்துச்சென்றன.

3.தன்னார்வக் குழுக்கள்

 இங்கிலாந்தில் 1645முதல் அறிவியல் அறிஞர்கள் வாராந்திரக் கூட்டங்களின் மூலம் அறிவியல் கருத்துக்களைப் பரப்பத் தொடங்கினர். இந்த நடைமுறையே 1660ல் இலண்டன் இராயல் சொசைட்டி உருவாகக் காரணமாக இருந்தது. புகழ்பெற்ற அறிஞர்கள் பலர் இதன் தலைவராக இருந்துள்ளனர். இயற்கை பற்றிய அறிவை வளர்ப்பதும்,அறிவியல் கருத்துக்களின் மீதி விவாதம் நடத்துவதும் இதன் நோக்கங்களாக இருந்தன.

1840 இல் தொடங்கப்பட்ட அமெரிக்க எதிர்கால உழவர்களுக்கான சங்கத்தில் 14 வயது முதல் 21 வயது வரை உள்ள வேளாண்மை பயிலும் மாணவர்கள், பண்ணைச் சிறுவர்கள் மூன்று லட்சத்து எண்பதாயிரம் பேர் உறுப் பினர்களாக இருந்துள்ளனர்.

20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் அறிவியல் கருத்துக்களைப் பரப்புவதில் மட்டுமின்றி, அழிவுக்காக அறிவியல் பயன்படுத்துவதைத் தடுக்கவும் குரல் கொடுக்கும் இயக்கங்கள் தோன்றின. இவற்றில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான இயக்கங்களும், அணு ஆயுதங்களுக்கு எதிரான இயக்கங்களும் அனைத்து நாடுகளிலும் தோன்றினாலும், சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும்,பொருளாதார அமைப்புகளுக்கும் உள்ள தொடர்புகளைப் புரிந்துகொண்டு செயல்படவில்லை.

ஒருசில அமைப்புகள் மட்டுமே அறிவியல் தொழில் நுட்பத்திற்கும் சமூகப் பொருளாதார அமைப்பிற்கும் உள்ள தொடர்புகளைப் புரிந்துகொண்டு செயல்பட்டன. அவற்றில் அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களுக்கான அறிவியல் குழு, சமூகத் தொடர்பிற்கான குழு, அறிவியல் துறை உழைப்பாளர் சங்கங்களின் உலக ஒருங்கிணைப்பு,ஐரோப்பாவில் செயல்பட்ட ஆதார அறிவியல் இயக்கம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

இந்தியாவில் அறிவியல் இயக்கங்கள்

 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மூடநம்பிக்கைகளிலும், இழிவான மத நம்பிக்கைகலிலும் மூழ்கிக் கிடந்த இந்தியர்களை அறிவுருத்தி அறிவியல் அணுகுமுறைகளை உள்ளவராக்கும் எண்ணத்துடன் புதிய அறிவியல் கருத்துக்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன.

  • 1912 ஆம் ஆண்டு கல்கத்தாவில் இந்தியன் சைன்ஸ் காங்கிரஸ் அசோசியேசன் தோற்றுவிக்கப்பட்டு 1914ல் முதல் மாநாடு நடைபெற்றது. மெட்ராஸ் சயிண்டிபிக் லிட்டரரி சொசைட்டி, வங்காளத்தில் பெங்கால் பாஸ்டிவிஸ்ட் சொசைட்டி, லாகூர் பாஸ்டிவிஸ்ட் சொசைட்டி போன்ற கழகங்களும் உருவாகின.
  • சில மத நிறுவனங்களும் அறிவியல் பரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தன. 19ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் சாமுவேல் பிஸ்கிரின் தமிழ் வழி அறிவியலையும் மருத்துவக் கல்வியையும் பரப்ப மேற்கொண்ட நடவடிக்கைகளும்,1920 முதல் மன்னார்குடியில் கெளமார குருகுலம் நடமாடும் நூலகம் மூலம் அறிவியல் பரப்பும் பணியில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது. மன்னார்குடியைச் சுற்றியுள்ள 95 கிராமங்களில் கல்வியறிவு, எழுத்தறிவைப் பரப்ப நூலகத்தைப் பயன்படுத்தியுள்ளது. இவ்வியக்கம் ஏராளமான அற்வியல் வெளியீடுகளையும் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • விடுதலைக்கு முன்பே இந்தியாவில் பல்வேறு அமைப்புகள் பல்வேறு மாநிலங்களில் தாய்மொழிவழி அறிவியலைப் பரப்புவதில் ஆர்வம் காட்டின. வங்க அறிவியல் அறிஞர் சத்தியேந்திரநாத் போஸ் துவங்கிய பங்கிய விஞ்ஞான பரிசத், அஸ்ஸாமில் சயின்ஸ் சொசைட்டி, ஒரிசாவில் தொடங்கப் பெற்ற விஞ்ஞான பிரச்சார் சமிதி ஆகியவற்றைக் கூறலாம்.
  • 1962 இல் கேரளாவில் கேரள சாஸ்திர சாகியத் பரிஷத் என்ற மக்கள் அறிவியல் இயக்கமும்,1964 ல் கர்நாடகாவில் பெங்களூர் அறிவியல் இயக்கமும்,1980ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலும் 1984 ஆம் ஆண்டு புதுவை அறிவியல் இயக்கமும் தோன்றின.
  • மத்திய அரசு 1976 42வது விதி பகுதி 4 51(அ) அடிப்படை உருமைச்சட்டத்தில் அறிவியல் உரிமையையும், மதச்சார்பின்மையையும் அடிப்படை உருமையாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கம்

 1978 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் திருவனந்தபுரத்தில் கூட்டப்பட்ட மக்கள் அறிவியல் மாநாடுகளில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் செயல்படும் மக்கள் அறிவியல் இயக்கங்கள் ஒன்று கூடி கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டன.1984ஆம் ஆண்டு போபாலில் நடபெற்ற விஷ வாயு விபத்தைத் தொடர்ந்து அறிவியலைப் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தத் திட்டமிட்டன. இதனடிப்படையில்  இந்தியாவின் 5 முனைகளில் இருந்து புறப்பட்டு 1987ம் ஆண்டு அக்டோபர் 2 முதல் நவம்பர் 7 வரை  கலைப்பயணம் மேற்கொண்ட கலைக்குழுக்கள் போபாலில் நடைபெற்ற அகில இந்திய மக்கள் அறிவியல் விழாவில் சந்தித்தன. இந்தியா முழுவதும் கலைப்பயணத்தை முடித்துவிட்டு 1988ம் ஆண்டு கேரளாவில் கண்ணூர் என்ற இடத்தில் இந்தியாவில் செயல்பட்டுவந்த 26 அறிவியல் கழகங்கள் கூடி அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கத்தின் அங்கத்தினர்களாக KSSP, PSF, TNSF, KRVP, Excavya, DSF, PBVM, JW ஆகிய அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.

1989 ம் ஆண்டு கேரளா எர்ணாகுளம் மாவட்டத்தில் இந்தியாவிலேயே அனைவருக்கும் எழுத்தறிவு இயக்கத்தை 100% வெற்றிபெற வைத்து முன்மாதிரியை KSSP உருவாக்கியது வரலாற்றில் மிக முக்கியமான பதிவு ஆகும்.

1990ம் ஆண்டு பன்னாட்டு படிப்பறிவு ஆண்டை முன்னிட்டு முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கேரளா திகழ்ந்தது.

அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கத்தின் வழிகாட்டுதல்களோடு ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கான நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இந்நிறுவனங்கள் மிக முக்கியமான பங்களிப்பைச் செய்து வருகின்றன. கேராளாவில் IRTC, புதுடில்லியில் CTD, பாண்டிச்சேரியில் CERD, ஹரியானாவில்CSTSD, தமிழ்நாட்டில் CESTADS, மத்தியப் பிரதேசத்தில் MPVS, ஹிமாச்சல் பிரதேசத்தில் STD, மேற்கு வங்காளத்தில் FOCETஆகிய அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

கேரள சாஸ்திர சாகித்திய பரிஷத்

 கேரள மாநிலத்தில் 1962 முதல் செயல்பட்டுவந்த கேரள சாஸ்திர சாகித்திய பரிஷத் என்ற அமைப்பு 1980ஆம் ஆண்டில் கேரளாவில் அமைதிப்பள்ளத்தாக்குப்பகுதியில் அணை கட்டுவதற்கான அரசு திட்டத்திற்கு எதிராக மக்கள் கருத்தைத் திரட்ட பல்வேறு மக்கள் சந்திப்பு இயக்கங்களை நடத்தியது.அப்பகுதியில் அணை கட்டப்பட்டால் ஏற்படும் சூழல் பாதிப்பு,மாக்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்,இயற்கை அழிவுகள் ஆகியவற்றை விளக்கி இயக்கங்கள் நடைபெற்றது. இதன் விளைவாக மக்கள் எதிர்ப்பு கருத்துக்களின் அடிப்படையில் அமைதிப் பள்ளத்தாக்கு அணைத் திட்டத்தை அரசு கைவிட்டது. KSSP என்ற மக்கள் அறிவியல் இயக்க அமைப்பு நமக்கெல்லாம் முன்னோடியான அமைப்பாக திகழ்ந்து வருகிறது.

தமிழ்நாட்டில் அறிவியல் இயக்கம்

தமிழ்நாட்டில் அறிவியல் இயக்கம் தோன்றுவதற்கும்,முழு வீச்சில் செயல்படுவதற்கும் மிகப்பெரும் உந்து சக்தியாக கேரள சாஸ்திர சாகித்திய பரிஷத் இருந்தது.கேரளாவில் அமைதிப்பள்ளத்தாக்கு பகுதில் அணை கட்டாமல் நிறுத்தப்பட்ட விசயம் தமிழ்நாட்டிலும் தாக்கத்த ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பரவுவதற்கு இதுபோன்ற அறிவியல் இயக்கத்தின் தேவை உணரப்பட்டது.அதன் அடிப்படையில் KSSPயின் முக்கிய நிர்வாகியாக இருந்த முனைவர் எம்.பி.பரமேஸ்வரன் அவர்களை சிறப்பு அழைப்பாளராக 10.2.1980 அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள நூலக அணைக்குழு கட்டிடத்தில் அமைப்புக்கூட்டம் நடத்தப்பட்டது.1981ல் அறிவியல் இயக்கம் சென்னையில் பதிவு செய்யப்பட்டது.1981ல் துவங்கப்பட்ட அறிவியல் இயக்கம் தமிழ்நாட்டில் கால்நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து செயல்பட்டுவரும் அமைப்பாகும்.

புதுச்சேரியில் அறிவியல் இயக்கங்கள்

 புதுச்சேரியில் தமிழ்வழி அறிவியல் பரப்பும் பணியை இதழ்களும், செய்தித்தாள்களும் 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தே செய்து வருகின்றன. இருப்பினும் அறிவியல் பரப்பும் பணி இயக்கமாக மாறியது இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான்.

1985ல் துவங்கப்பட்ட புதுவை அறிவியல் இயக்கம்,  பிரஞ்ச் ஆய்வு நிறுவனம்,  மத்திய மாநில அரசுகளின் அறிவியல்  தொழில்நுட்பதுறை போன்ற பல்வேறு என்ற சுற்றுச் சூழல் அமைப்பும் அறிவியல் பரப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

புதுவை அறிவியல் இயக்கம்

 நவம்பர் மாதம் 1985ல் புதுவை அறிவியல் இயக்கம் தொடங்கப்பட்ட முதல்  இந்தச் சமூகம் அப்போதைய நல்ல சூழலில் சிறப்பாய்   உடனே செழித்து வளரத் செய்தது. மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்துப் பகுதியினரையும் புதுவை அறிவியல் இயக்கம் ஈர்த்தது. 1985ல் புதுவை அறிவியல் இயக்கம் பதிவு செய்யப்பட்டு துவங்கப்பட்ட அறிவியல் இயக்கம் புதுச்சேரியில் கால்நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து செயல்பட்டுவரும் அமைப்பாகும்.

புதுவை அறிவியல் இயக்கத்தின் நோக்கங்கள் 

  • அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை சார்ந்த முக்கிய கருத்தோட்டங்கள், நிகழ்வுகள் குறித்த தகவல் சேகரித்தல்.
  • அறிவியலுக்கும் சமுதாயத்திற்கும் இடையேயான தொடர்பு, இயற்கைக்கும் சமுதாயத்திற்கும் இடையேயான தொடர்பு போன்றவற்ரில் தெளிவு பெறும் முயற்சிகள் மேற்கொள்ளுதல், இவை மூலம் அறிவியல் கொள்கை,தொழில்நுட்பம் தேர்வு முதலியவை பற்றி ஆய்வு செய்தல்.
  • அறிவியல், தொழில் நுட்பம் பற்றிய செய்திகள், கருத்துக்களை சுவைப்படவும் எளிதாகவும் மக்களிடையே பரப்பி, அறிவியல் ரீதியான சிந்தனைக்கு வழிகோலுதல், முக்கியமாகத் புதுச்சேரியில், அதிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே இத்தகைய மனப்பாங்கை உருவாக்குதல்.
  • புதுச்சேரியில் அறிவியல் கல்வி பற்றிய ஆக்கப்பூர்வமான விமர்சனம் மற்றும் மேம்பாட்டிற்கான செயல்பாடுகளில் ஈடுபடுதல்.
  • இந்தியாவிலும், மற்ற நாடுகளிலும் உள்ள பல்வேறு இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு கருத்து / அனுபவ பரிமாற்றங்கள் செய்தல்.

மேற்கண்ட குறிக்கோள்களுக்கான செயல்பாடுகள்:

  • அறிவியல் தொழில்நுட்ப ஆர்வமுடைய அனைவரும் பங்கேற்கக் கூடிய கருத்தரங்கம், செயலரங்கம், பொதுக்கூட்டம் போன்றவை நிகழ்த்த ஒரு பரவலான அமைப்பு உருவாக்குதல்.
  • அறிவியல் கண்ணோட்டத்தைப் பலதரப்பட்ட மக்களிடையேயும்,
  • ஆசிரியர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், தொழிற்சங்க வாதிகள், மாணவர்கள், கிராமப்புற மக்கள், நிறுவனங்கள், குழுக்கள் ஆகியோரிடையே வளர்ப்பது.
  • அறிவியல் கழகங்கள், அறிவியல் சங்கங்கள் போன்றவை உருவாக்குவதற்கு ஆர்வத்தையூட்டுவது; உதவியையும் அளிப்பது.
  • அறிவியலைப் பரப்ப விரும்பும் அறிவியலாளர்கள், அறிவியல் எழுத்தாளர்கள், அறிவியல் ஆசிரியர்கள் போன்றோரிடையே தொடர்புகளை வளர்ப்பது.
  • அறிவியலுக்கும் சமுதாயத்திற்கும் இடையேயான தொடர்புகளைக் கண்டறியும் விவாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது.
  • அறிவியல்,தொழில்நுட்பப் புரட்சியின் கருத்தோட்டங்கள், நிகழ்வுகள் பற்றிய செய்திகளைத் தொகுப்பது.
  • அறிவியல் கல்வியில் உள்ள சிக்கல்கள் பற்றித் தொடர்ந்து ஆய்வுகள் செய்தல்
  • இந்தியா மற்றும் அயல்நாடுகளில் உள்ள மற்ற அறிவியல் அமைப்புகளுடன் இணைந்து கருத்துப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளுதல்.
  • அறிவியல் தொழில் நுட்பச் செய்திகளை தமிழில் எளிமையாக புரியும் வகையில் பரப்புதல்: அறிவியல் கண்ணோட்டத்திற்கு அடிப்படையான எழுத்தறிவை பரப்பும் மற்ற இயக்கங்களுடன் இணைந்து பணி செய்தல்.
  • தமிழ் மொழியில் புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள், கருத்தரங்கம், விவாத அரங்கம், கண்காட்சி, மாத இதழ் மூலமாக மக்களிடையே அறிவியல் சிந்தனையை / அறிவை வளர்த்தல்.
  • அறிவியல் துறையில் முக்கியமான கருத்துக்கள் பற்றி மாநாடுகள்,கருத்தரங்குகள் நடத்துதல்.

புதுவை அறிவியல் இயக்கத்தின் வளர்ச்சியை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

  • 1985 முதல் 1991 வரை முதல் கட்டம்
  • 1991 முதல் 2000 வரை இரண்டாவது கட்டம்
  • 2001 முதல் 2015வரை மூன்றாவது கட்டம்

முதல் கட்ட வளர்ச்சி

 1985 ம் ஆண்டு முதல் 1989  ம் ஆண்டு வரை புதுவை அறிவியல் இயக்கத்தின் முதல் கட்ட வளர்ச்சியாகக் கொள்ளலாம். அறிவியல் கல்வி, தொழில் நுட்ப வளர்ச்சி, சுற்றுச்சூழல் பிரச்சனைகள், அணுக்கொள்கை, மருந்துக்கொள்கை, போபால் விஷவாயு விபத்து ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

1986ம் ஆண்டு முதல் 1989 ம் ஆண்டு வரை புதுவை முழுவதும் அறிவியல் பரப்பும் பணியை மேற்கொண்ட காலம். நூல்கள் வெளியீடு, இதழ்கள் வெளியீடு,  ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தல், கருத்தரங்குகள் நடத்துதல் போன்ற பணிகளில் ஈடுபட்டது. இக்காலத்தில் புதுவை அறிவியல் இயக்கம் நடத்திய கலைப் பயணங்கள் புதுவையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது.

1987 நவம்பரில் ‘துளிர்’ என்ற சிறுவர்க்கான அறிவியல் மாத இதழ் இணைந்து பு.அ.இயக்கம் தயாரித்து 1987ல் துளிர் முதல் இதழ் போபாலில் வெளியிடப்பட்டது வெளியிட்டது.

அதன் பிறகே, பல பத்திரிக்கைகள் தமிழில் அறிவியல் செய்திகள் தொடர்ந்து வெளியிடத் தொடங்கின. இன்று எந்தவித விளம்பரமும் திரைப்பட ஆபாசமும் இல்லாத ஒரே அறிவியல் ஏடு – துளிர் சிகரமாய் ஒளிர்கிறது..

இரண்டாவது கட்ட வளர்ச்சி

 புதுவை அறிவொளி இயக்கம் (1989 -1991)

  • அனைத்து முன்னேற்றத்திற்கும் அறிவியல் முன்னேற்றத்திற்கும் எழுத்தறிவு அடிப்படை ஆணிவேர். இந்த நவீன உலகத்தில் எழுத்தறிவின்மை தனி ஒருவர்க்கும் இந்த மனித சமூகத்திற்கும் இழுக்கே. ஆகவே, அனைவர்க்குமான எழுத்தறிவு இயக்கத்தை வெற்றிக்காரமாக நடத்தியது.
  • புதுவை கல்விச் சூழலில் மிகப்பெரும் மாற்றத்தையும், முன்மாதிரிகளையும் இக்காலத்தில் அறிவியல் இயக்கம் உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்திலும், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியிலும் நாம் நடத்திய சிட்டுக்கள் மையம் கல்வியில் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.
  • அறிவொளி இயக்கத்தின் மூலம் கிடைத்த பெண்களை  சமம் அமைப்பு மூலம் சுயசார்பாக ஒருங்கிணைத்து வருகிறோம்.
  • 1995 முதல் 2000 ஆண்டுகளில் அறிவியல் பரப்புதலோடு எழுத்தறிவு மற்றும் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியில் கவனம் செலுத்திய காலம். புதுவை அறிவியல் இயக்கத்தின் மாவட்ட அமைப்புகள், கிளைகள், செயல்பாடுகள் பரவலாக எடுத்துச் செல்லப்பட்டது.
  • சூரிய கிரகணங்கள், வால் நட்சத்திரங்கள் பற்றிய வானியல் நிகழ்வுகளும், டோலி ஆட்டுக் குட்டி, ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோல், பிள்ளையார் பால்குடிகிரார் ஆகியவை  குறித்து விரிவாக மக்களிடையே எடுத்துச் செல்லப்பட்டது.

மூன்றாவது கட்டம்

 2001 முதல் பல்வேறு அரசுத் திட்டங்களை முன் மாதிரியாகவும், மாற்றுக் கொள்கைகளை முன் வைக்க கூடிய அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது. 2001க்குப்பின் புதுவை அறிவியல் இயக்கத்தின் செயல்பாடுகள் தொடர்ச்சியாகவும்,  பரவலாகவும், மாவட்ட, கிளைகள் அளவில் வலுவான அமைப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. முன்மாதிரி திட்டமாக செயல்படுத்திய யுனிசெப் உதவியில் நடத்திய ஆரோக்கிய இயக்கம், பிஜிவிஎஸ் அமைப்பின் உதவியில் மக்கள் பள்ளி இயக்கம், மத்திய அரசின் விஞ்ஞானத் தொழில் நுட்பத்துரையுடன் இணைந்து நடைபெற்றுவரும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு , பாரீஸ் பல்கலைகழகத்துடன் இனைந்து நடத்தப்படும் அறிவியல் உருவாக்குவோம் திட்டம். ஆகியவை குறிப்பிடத்தகுந்தது. துளிர் இல்லங்கள், நாம் நடத்திவரும் துளிர்,  அறிவியல் வெளியீடுகள், அறிவுத்தென்றல், விழுது ஆகிய இதழ்கள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

செயல் வழிக்கற்றல், சமச்சீர்க்கல்வி, பாடத்திட்டம், கல்வி உரிமைச் சட்டம், தொடர் மற்றும் கூட்டு மதிப்பீடு ஆகிய  அரசுக் கொள்கைகளில் தலையிட்டு கல்விக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

So, what do you think ?