புதுவை அறிவியல் இயக்கத்தின் 30 ஆண்டு சாதனைகள்

BY IN PSF NO COMMENTS YET , , , ,

30 YEARS LOGO

30 YEARS LOGO

     1985ல் தொடங்கப்பட்டு இந்தியாவின் முன்னணி அறிவியல் பரப்பும் நிறுவனங்களுள் ஒன்று.

     மனிதன் மகத்தானவன், நீ எப்படித் தோன்றினாய், நம் முகவரி போன்ற நழுவுப் படக்காட்சிகள். 1985ல் ஹாலி வால்மீன், பூமிக்கு அருகில் வந்ததை மையமாகக் கொண்டு நழுவுப்படக்காட்சிகள், தொலை நோக்கிகள், அறிவியல் நூல்கள், கண்காட்சிகள், ஹாலி வால்மீன், வானியல், அறிவியல் பற்றிய சொற்பொழிவுகள், வீதி, பள்ளி தோறும் நடத்தப்பட்டன.

   1986 செப்டம்பர் 1 முதல் 14 வரை த.நா.அ. இயக்கமும் பு. அ. இயக்கமும் கேரள சாத்திர சாகித்ய பரிசத்துடன் இணைந்து கன்னியாகுமரி முதல் சென்னைவரை. 30 க்கு மேற்பட்ட இடங்களில் அறிவியல் கலைப்பயணம் முதன்முதலாய் நீண்ட அறிவியல் கலை நிகழ்ச்சிகள் நடத்தின.  அப்போது, அந்நிகழ்ச்சிகளை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆச்சரியமாய், ஆர்வமாய் பார்த்துப் பயனடைந்தனர். அதே வேளை 1. ஹாலியிலே வானுலா, 2. இயற்கை, சமூகம், விஞ்ஞானம் 3. அணுவின் கட்டமைப்பு ஆகிய நூல்களும் வேறு சில அறிவியல் நூல்களும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் விற்றுத்தீர்த்தன. அன்றை நிலையில் சாதாரண ஏழைக் கிராமமக்களிடையே விற்றது ஓர் அரிய பெரிய சாதனையாகும்.

     1987 பிப்ரவரி மாதம் 1. அணுசக்தி, 2. வானவியல், 3. அறிவியல் வரலாறு ஆகிய தலைப்புகளில் ஒளிவில்லைக் காட்சி நழுவுப் படங்கள் (Film strips) தயாரிக்கப்பட்டன. பொதுமக்கள் பேரார்வமாய்க் கேட்டு, உரையாடி அந்த நள்ளிரவை, வாழ்நாளில் மறக்க முடியாத நல்ல இரவாய் ஆக்கினர். அதனால், அறிவியல் ஆர்வலர்களின் ஆர்வம் அதிகமானது. நாள் தோறும் இரவில், அறிவியல் நழுவப் படச்சாதனங்களுடன் ஊர் ஊராய் உற்சாகமாய்,  ஊக்கமாய்  நடத்தப்பட்டது.

  1987 இல் தமிழில் வரும் குழந்தைகள் அறிவியல் மாத இதழாம் துளிரைப் புதுவையில் தொடங்கியது. தற்போது இது சென்னையிலிருந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் இணைந்து  கொண்டுவரப்படுகிறது .

   1987ல் அகில இந்திய ‘குழந்தைகள் அறிவியல் திருவிழா’ புதுச்சேரி ஜீவானந்தம் மேனிலைப்பள்ளியில் 7 நாட்கள் நடைபெற்றது. அதில் ஒவ்வொரு புதுவை மாணவரும் இரண்டு வேறு மாநில சிறுவர்களுடன் வீடுகளில் இருந்து பள்ளிக்கு வந்து அறிவியல் கற்பதன் மூலம், அறிவியல் உணர்வும் ஒருமைப்பாட்டு உணர்வும் பெற்றனர்.  அன்று தொடங்கி, இன்றுவரை வெவ்வேறு பகுதி, மாநில, பண்பாட்டுக் குழந்தைகள் புதுவைக் குழந்தைகளின் வீடுகளில் தங்குவதோடு பல அறிவியல் செயல்பாடுகளிலும் ஈடுபடும் குழந்தைகள் அறிவியல் திருவிழாவை தொடர்ச்சியாக நடத்தி வருவதுடன் இது போன்று வெளி மாநிலங்களில் நடக்கும்போது புதுவைக் குழந்தைகளை அழைத்துச் சென்று பங்கேற்கச் செய்து வருகிறது.

     புதுச்சேரி மக்களின் முகத்தை மாற்றிய இரண்டாவது சுதந்திர போராட்டமாக நடைபெற்ற இயக்கம்தான் கல்லாமை இருள் அகற்றிய ‘அறிவொளி இயக்கம்’ அந்த இயக்கதை 1989 செப்டம்பர் 8 ஆம் நாளான உலக எழுத்தறிவு நாளில், புதுச்சேரி அரசுடனும் N.S.S, N.Y.K, போன்ற தன்னார்வ இயக்கங்களோடும் கைகோத்து புதுவை அறிவியல் இயக்கம் தொடங்கி புதுச்சேரி மாநிலம் முழுதும் ஒன்னரை லட்சம் பேர், பதினைந்தாயிரம் தன்னார்வலர்களின் தன்னிகரில்லா இரவு-பகல் உழைப்பினால், எழுத்தறிவு பெற்றனர்.

     முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக, மக்களின் மகத்தான தியாகங்களுக்குப் பிறகு 1991 நவம்பர் 30 ஆம் நாள் அப்போதைய குடியரசுத் துணைத் தலைவர் டாக்டர் சங்கர் தயாள் சர்மா அவர்கள் ஐம்பதாயிரம் மக்கள் கரவொலியில் மாநிலம் முழுதும் இந்தியா முழுதும் – உலகம் முழுதும் எதிரொலிக்க, அறிவிக்கப்பட்ட இயக்கதை நடத்தியது. புதுவை அறிவொளி சாதனைக்கு ஐ.நா.  சபையின் UNESCO “கிங் செ ஜாங்” விருதும் கிடைத்தது. இதுவரை புதுச்சேரிக்கு என்று கிடைத்த ஒரே சர்வதேச விருது இதுதான்

    புதுச்சேரி பள்ளி கல்வியின் இன்றைக்கு வந்துள்ள பலமாற்றங்களுக்கு நாற்றாங்களாக இருந்தது புதுவை அறிவியல் இயக்கம் என்பதை யாரும் மருக்கமுடியாது. 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிளை அளித்ததோடு, கற்றலில் இனிமை, செயல்பாட்டுமுறை கல்வி, ஒரிகாமி, நாடகம், கணக்கும் இனிக்கும், எளிய அறிவியல் பரிசோதனை முறைகள், சேர்ந்து கற்போம், மக்கள் பள்ளி இயக்கம் என பல்வேறு முன்முயற்சிகளை எடுத்த அமைப்பாகும்.

    1985ல் தொடங்கி மக்களுக்கே அதிகாரம், நமதுதேசம், நம்மால் முடியும், பொதுச்சொத்து, பூமியை காப்போம், நமது கிராமம், குழந்தைகளை கொண்டாடுவோம், கொக்கரிப்பு போன்ற தலைப்புகளில் இதுவரை இருபதற்கும் மேற்பட்ட அறிவியல் கலைப்பயணங்களைத் தொடர்ந்து நடத்திவருகிறது.

  ‘அறிவியல் வெளியீடுகள்’ என்ற பெயரில் தனியாக புத்தக பதிப்பகத்தை தொடங்கி விவசாயிகளுக்காக, பெண்களுக்காக, பொது மக்களுக்காக, ஆசிரியர்களுக்காக, மாணவர்களுக்காக எனஇதுவரை 160க்கு மேற்பட்ட தலைப்புகளில்  நூல்கள் பலவற்றையும் வெளியிடுகிறது.

    1992முதல் புதுவையில் பெண்கள் அதிகாரம் பெற உண்மையாகப் பாடுபடும் சமம் மகளிர் சுயசார்பு இயக்கத்தைத் தொடங்கிப் முன்மாதிரி பெண்கள் அமைப்பாக  நடத்த உதவி வருகிறது.

    1993 இலிருந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அறிவியல் பரப்பிவரும் அரசு நிறுவனங்களும் அரசுசாரா நிறுவனங்களும் இணைந்து கூட்டாகச் செயல்பட்டு வரும் NCSTC Network கூட்டமைப்பின் உறுப்பினராகச்  இனைந்து ‘தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை’ கடந்த 22 ஆண்டுகளாக புதுவையில்  நடத்தி வருகிறது.

   1994ல் ஒரு முக்கியமான வரலாற்று சிறப்புமிக்கது, ‘நமது இந்தியா இயக்கம்’ ஆகும். இந்தியாவில் அறிவியல் பார்வையில் தேச ஒருமைப்பாட்டை, ஒற்றுமையை வளர்க்கும் இந்த இயக்கத்தைப் புதுச்சேரி மாநிலத்தில் பு.அ. இயக்கம் பெருமிதத்தோடு நடத்தியது.

    1994ல் புதுவை அறிவியல் இயக்கத்தால் எடுக்கப்பட்ட ‘பூச்சி கொல்லி’ என்ற திரைப்படம் சாந்தோம் விருதுதையும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் பட்டது.

   1997முதல் 2007வரை புதுவை அரசுடன் இணைந்து  புதுவைப் பகுதியில் உள்ள ஏரிகளை மேம்படுத்தும் திட்டத்தில் பெரும்பங்குவகித்து ஏரியைப் பயன்படுத்துவோரை ஒருங்கிணைத்துச் சங்கம் அமைத்து அவற்றின் வழியாக ஏரிகளை மேம்படுத்தி இன்று புதுவையின் நிலத்தடிநீர் உயரக்காரணமாக இருந்தது.

    வானில் எப்பொழுதெல்லாம் அரிய ‘வான்நிகழ்வுகள்’ நடைபெறுகிறதோ அப்பொழுதெல்லாம் புதுவை மாநில மக்களை அவற்றைக் கண்டுகளிக்கச் செய்து வருகிறது. வெள்ளி நகர்வு, ஐசான் வால்நட்சத்திரம்  (Transit of Venus, ISON)  வளை சூரிய கிரகணம் உள்ளிட்ட நிகழ்வுகளை லட்சகணக்கானோரை பார்க்க வைத்த இயக்கமாகும். தற்போதும் தொடர்ச்சியாக இரவு வான்நோக்கு நிகழ்ச்சிளை நடத்திவருகிறது.

    வீட்டில் கழிவரை கட்டினால் லட்சுமி வாசம் செய்மாட்டால் என்று முதலில் கழிவரை கட்ட சொன்னபோது எதிர்த்தவர்கள் வாழ்ந்த ஊர் நமது ஊர். பொதுவெளியில் மலம் கழித்தல் பல்வேறு நோய்களின் மூல ஊற்றாக இருந்ததோடு பெண்கள் கழிப்பிடமில்லாமல் சொல்லேன்னா துயரங்களை அனுபவித்துவந்தார்கள்  அதிகாலைலேயே  காலை கடன்களை கழித்தால்தான் உண்டு, இல்லை என்றால் அடக்கி அடக்கி வைத்திருக்வேண்டியதுதான். இருள் சூழ்ந்த பிறகே மலம் கழிக்கமுடியும் மழை, புயல் காலங்களையும், பாம்பு, தேள், விசப்பூச்சிகளுக்கும் கடிப்பட்டு இறந்தவர்கள் பலர்  இதில் ஒரு உடைப்பை  ஏற்படுத்தி கலாச்சார ரீதியாக மாற்றத்தை செய்த  முழு சுகாதார பணி மகத்தானது.

    உலகில் உள்ள மூட நம்பிக்கையாளர்களும், மதவாதிகளும்,  போலி அறிவியலாளர்களும்  2000ல் உலகம் அழிந்துவிடும் என்றும் 2012ல் டிசம்பர் 27 ல் உலக அழிந்துவிடும் என்றும் பூச்சான்டி காட்டியபோதெல்லாம் அறிவியல் ஒளிபாய்ச்சி மக்களை விழிப்படைய செய்த இயக்கமாகும்.

   பாரிஸ் தெற்கு 11 பல்கலைக்கழகம் அங்குள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆய்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் நோக்கில் அறிவியல் ஆக்கப்போட்டி நடத்தி வருகிறது. இதன் பயனைப் புதுச்சேரி மாணவர்களும் பெறும் வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்குக் மட்டும் கடந்த ஒன்பது ஆண்டுகளாக இப்போட்டியை அறிவியல் இயக்கம் நடத்தி வருகிறது.

    1992 கிராமப்புற மேம்பாட்டுக்காகவும் நிலைத்த வளர்ச்சிக்காகவும் ஆய்வுகளை மேற்கொள்ளவும் மாதிரிகளை உருவாக்கவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் இணைந்து ‘சூழலியல், ஊரக வளர்ச்சி மையம்’ (Centre for Ecology and Rural Development) ) ஏற்படுத்தப்பட்டது.  மீனவர்களுக்காக நல்லவாடு கிராம மீன்பிடி திட்டம், திருபுவனை பட்டுப் பெருக்க திட்டம், மல்பரி தோட்ட வளர்ச்சி திட்டம். தவளகுப்பம் பட்டு நூல் உற்பத்தி யைம், மண்வள பாதுகாப்பு, ஆய்வு  பயிர்ப்பாதுகாப்பு அதாவது ரசாயன மருந்துகளுக்குப்பதிலாக இயற்கை பூச்சிமருந்து பயன்பாட்டுச் செயல்பாடு. தோல் பதனிடு தொழில். கரையான்கள் வளர்த்து, மண்வளம் பாதுகாப்பு, தரிசு நில மேம்பாடு, மானாவாரி நில மேம்பாடு, ஊரனி மேம்பாடு, ஒற்றை நெல் சாகுபடி, வீட்டு காய்கறித்தோட்டம், பசும்தீவனத் திட்டம்,  நுண்ணுயிர் உரங்கள், மண்புழு உரங்கள் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு முன்மாதிரிகளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதன் முதலில் செய்த அமைப்பாகும்.

   2003 முதல் ‘அறிவியல் முரசு’ என்ற மாத இதழையும் அறிவியல் இயக்க உறுப்பினர்களுக்காகவும் சமம் பெண்களுக்காக ‘சமம் செய்தி மடலும்’ தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.

    2004முதல் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கவும் மனிதர்களையும் சுற்றுச் சூழலையும் பாதிக்காத இடுபொருள்கள் தயாரித்து வழங்கவும் களஞ்சியம் மையம் பாகூரில் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டுவருகிறது.

     2007முதல் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கக் களஞ்சியம் இயற்கை விவசாயிகள் சங்கத்தை உருவாக்கி  விவசாயிகளுக்கு உதவி வருகிறது.

    2008ல்  70 கிராமங்களில் நடமாடும் மக்கள் நூலகத்திட்டதை அமுல்படுத்தியது. கிராமங்கள்தோரும் வாசிப்பு பழக்கத்தையும் புத்தக சேகரிப்பு இயக்கத்தையும் நடத்தியது.

    2004முதல் 20 கிராமங்களில் நடைபெற்ற இரவு பாடசாலைகள் மிகமுக்கிய கல்விப்பணியை செய்தது.

     1989 முதல் பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் பெற வைக்கும் நோக்கோடு உலகளாவிய சிந்தனை உள்ளூர் அளவிலான செயல்பாடு என்ற அடிப்படையில் கிராமப்புற கல்விக்காகவும் பொது விழிப்புணர்வுக்காகவும் இந்திய நிலையில் செயல்பட்டு வரும் யறூVறீ அமைப்பின் புதுச்சேரிப் பிரிவாகப் புதுவை அறிவியல் இயக்கம் செயல்பட்டு வருவதுடன் பல பயிற்சிகளைக் கிராமப்புற மக்களுக்கு அளித்துவருகிறது.

    1985 முதல்All India People Science Network  எனும் அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பில் உறுப்பினராகச் செயல்படுவதன் வழியாகத் தேசிய நிலையில் மக்களுக்கு எதிரான செயல்திட்டங்களை எதிர்த்துக் குரல் கொடுத்து வருகிறது.

    எப்பொழுதெல்லாம் சுற்றுச் சூழலுக்கும் மக்கள் நலத்திற்கும் பெரிய தொல்லைகள் உருவாக்கப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் புதுவை அறிவியல் இயக்கம் நேரடியாகவோ மறைமுகமாகவோ தனியாகவும் பிற அமைப்புகளுடன் இணைந்தும் போராடியும் வருகிறது.

   2008ல் மேம்படுத்தப்பட்ட ஆற்றல் திறன்மிக்க புகையில்லாத விறகு அடுப்புகளை உருவாக்கி அதை மக்களிடம் பரவலாக்கியதற்காக புதுவை அரசின் விருது பெற்ற அமைப்பாகும் .

   2004ல் சுனாமி வந்தபோதும். 2011ல் தானே புயல் வந்தபோதும் முதலில் கலத்தில் இறங்கி பணியாற்றியதோடு நமக்கு வந்த வெளிநாட்டு நிதியை புறக்கணித்து நமது நாடு முழுவதும் உள்ள அறிவியல் இயக்கங்கள் அளித்த நிதியில் பல்வேறு நிவாரணப்பணிகளை செய்தது.

     கடந்த 29 ஆண்டுகளாக எந்த ஒரு வெளிநாட்டில் இருந்தும் எந்த ஒரு தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களிடமிருந்தும் நிதி பெறாமல் புதுச்சேரியில் செயல்பட்டுவரும் ஓரே தன்னார்வ அமைப்புதான் நமது புதுவை அறிவியல் இயக்கம்.

    உலகப் பொருளாதாரம், சமூகத்தைச் சீர்குலைக்கும் சக்திகளுக்கு எதிரான, உலகத்தைப் பாதுகாக்கும், ‘உலகச் சமூக மாமன்ற’ கிளைச் செயல்பாடுகளை புதுச்சேரியில் செய்தது.

     மத்திய மாநில அரசுகளின் மருத்துவ திட்டங்களுக்கு முன்மாதிரிகளை உருவாக்கியதோடு, அரசுகளை ஏழை எளிய மக்கள் பக்கம் திரும்பி பார்க்கவைத்தில் நமது பங்கு அளப்பரியது. அதற்காக அனைவருக்கும் சுகாதாரம் இப்போதே  என்ற கோரிக்கையோடு செயல்படும் மக்கள் நலவாழ்வு இயக்கத்தை புதுவையில் தொடங்கி 2000ல் புதுச்சேரி மாநில அளவிலான மக்கள் நலவாழ்வு சபை கூட்டியது, பிறகு 2007 இரண்டாவது மக்கள் நலவாழ்வு சபை நடத்தியது.

   மருத்துவதுறையில் நடைபெறும் கொள்ளை, அன்னிய ஏகபோக நிறுவனங்களின் செயல்பாடுகளை இந்தியாவில் தடுத்தல் ஏழைநாடுகளில் காலாவதி மருந்துகள், கலப்பட மருந்துகள், தடை செய்யப்பட்ட மருந்துகள், அதனால் வரும்நோய்கள், இறப்புகள், ஆகியன விளக்கும் நூல்கள் எழுதப்பட்டு வெளியிடப்பட்டு விற்கப்பட்டு மருத்துவ விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    குழந்தைகளுக்காக 1987முதல் துளிர் இல்லங்கள் நடத்தப்பட்டுவருகிறது. அறிவியலின் கதவுகளை குழந்தைகள் தாங்கள் வாழும் இடத்தில் இருந்தே திறக்கமுடியும் என்பதற்கான சாட்சியாக இவ்இல்லங்கள் இருக்கிறது.தற்போது 22 துளிர் இல்லங்கள் செயல்பட்டுவருகின்றன.மேலும் அறிவியல் சுற்றுலாக்கள், இகோ வாட்ச் என்ற பெயரில் கடல், எரி,குளங்கள், பார்வையிடல் அதன் பல்வேறு அறிவியல் கூறுகளை குழந்தைகள் அறிந்துகொள்ள செய்தல்.

  ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம், உலக மகளிர் தினம், உலக புத்தக தினம், உலசுற்றுச்சூழல் தினம், உலக நீர்நாள், ஹிரோசிமா, நாகசாகி தினம், குழந்தைகள் தினம் அகிய தினங்களை பல்வேறு வடிவங்களில் கொண்டாடிவருகிறது.

 இப்படி எண்ணற்ற திட்டச் செயல்பாடுகள் குறித்து பெரிய கட்டுரையாய்/ நூலாய் எழுத வேண்டிய  சாதனைகளைப் புரிந்துள்ளன இவை எல்லாம் உங்களை போன்றவர்களின் அயராத உழைப்பால் விளைந்தவை. இன்னும் எண்ணற்ற பணிகள் மக்களுக்குச் செய்ய வேண்டியுள்ளன. சமய சார்பற்ற சனநாயகப்  பொது உடைமைக் குடியரசு என்ற இந்திய அரசியல் சட்டக் குறிக்கோளை அடைய அறிவியல் இயக்கவழி தொடர்ந்து செயல்படுவோம்.

So, what do you think ?