ரோமன் ஸ்டாக்கேர் -Roman Stocker

BY IN News- செய்திகள் NO COMMENTS YET , ,

பாலை குடிக்கும் பூனை என்பது நமக்கு எல்லோருக்கும் தெரிந்த விசயம் தான். நமது வீட்டில் வைத்திருந்த பாலை பூனை குடித்து விட்டால் நமக்கு எரிச்சல் தான் வரும். ஆனால் பாலை குடிக்கும் பூனையின் அழகில் சொக்கி வியந்தார் ரோமன் ஸ்டாக்கேர் (Roman Stocker) எனும் உயிரி இயற்ப்பியல்லாளர்.

எம்.ஐ.டி ஆய்வு நிருவனந்தில் பணியாற்றும் இவர் தனது எட்டு வயது கட்டா-கட்டா என பெயரிடப்பட்ட பூனை பாலை குடிப்பதை கண்டு வியந்தார். பூனை எப்படி பாலை பருகுகிறது என சிந்தித்தார்.

நாம் பாலை பருகுவது குவளையில். குவளையில் இடப்படும் பாலை வாயின்  அருகில் கொண்டு சென்று வாயில் ஊற்றி அருந்தி குடிக்கிறோம். நாய், பூனை போன்ற விலங்குகள் அவ்வாறு அருந்தி குடிக்க முடியாது, ஆயினும் அவை நீர் முதற்கொண்டு பல்வேறு திரவங்களை அருந்துகின்றன.

பாலை குடிக்கும் நாய் தனது நாக்கை ஆங்கில எழுத்து J போல வளைக்கிறது. வளைந்த நாக்கு கரண்டி போல இருக்கும். கரண்டியை வைத்து பாத்திரத்திலிருந்து நீர் பால் முதலியவற்றை எடுக்க முடியும் அல்லவா; அதுபோல நாய் பாலை வளைந்த நாக்கு வழி எடுக்கிறது. தனது வாய்க்குள் நாக்கை உள்ளிழுத்து கொண்டு பாலை பருகுகிறது.

நாய் நீர் குடிக்கும் போது அதன் முகம் முழுவதும் பால் வழியும். நாய் மட்டுமல்ல அருகில் உள்ளவர் மீதும் பட்டு தெறிக்கும். கரண்டி போல நாக்கு இருந்தாலும் நாக்கை உள்ளிழுக்கும் போது நாக்கின் வடிவம் மாறும்; நாக்கிலிருந்து திரவம் வழியும்; நீர் சிதறும் சிந்தும்.

பூனை பாலை குடிக்கும் போது சிந்தாது; சிதறாது. இந்த பூனையும் பால் குடிக்குமா என்பது போல முகத்தில் பால் குடித்த எந்த தடயமும் இராது. இதுவரை பூனையும் நாய் போலவே நாக்கை ஜே வடிவில் மடித்து கரண்டி போல் செய்து பால் பருகுகிறது என்றே கருதி இருந்தனர். ஒருவேளை நாயை விட மிக நேர்த்தியாக பாலை பருகுகிறது என்று கருதினர்.

தனது பூனை பால் குடிப்பதை கண்டு வியந்த ஸ்டாக்கேர் மெய்பட பூனை பாலை குடிப்பது எப்படி என்பதை ஆராய விழைந்தார். தனது கூட்டளிகள் நீர்ம இயல் ஆய்வாளர் சங்குவான் ஜங், இயற்பியல் ஆய்வாளர் பெட்ரோ ரேயிஸ் முதலியோருடன் சேர்ந்து கூட்டு ஆய்வு செயதார்.

நொடிக்கு ஆயிரமாயிரம் புகைப்படம் எடுக்கும் வீடியோ கேமரா வழி இந்த ஆய்வு செய்யப்பட்டது. பூனை பாலை குடிப்பதை வீடியோ எடுத்து பார்த்தவர்களுக்கு வியப்பு.

நாய் போல பூனையும் தனது நாக்கை மடித்து ஜே வடிவில் செய்தது. கரண்டி போல் ஆக்கியது. ஆனால் பூனையின் நாக்கு நன்கு பாலில் அமிழ்ந்து பாலை முகக்கவில்லை. நாக்கின் அடிப்பாகம் மட்டுமே பாலில் பட்டது. ஆயினும் மகுடி கண்ட பாம்பு போல பால் நாக்கின் வழி பூனையின் வாயில் சென்றது. பூவியின் ஈர்ப்பு சக்திக்கு எதிராக பால் நாக்கின் வழி மேலே சென்ற செயல் இந்த ஆய்வாளர்களை சிந்திக்க தூண்டியது.

பூனை பால் குடிக்கும் விந்தை புரிந்து கொள்ள ஒரு சிறு சோதனையை செய்து பாருங்கள். ஆள்காட்டி விரலை பாத்திரத்தில் உள்ள நீரின் உள்ளே வைத்து சட்டென்று வெகு வேகமாக வெளியே இழுங்கள். சற்றே நீர் உங்கள் விரலோடு வெளி வரும். பின்னர் புவியின் ஈர்ப்பு சக்தி காரணமாக விரலிலிருந்து நீர் வடிந்து சொட்டாக கீழே விழுவதை பாருங்கள்.

விரலோடு விரலாக ஈர்ப்பு சக்தியை மீறி நீர் மேலே உயர்ந்தது எப்படி? அதன் பின் உள்ளது இயற்பியல் தத்துவம். பரப்பு இழுவிசை மற்றும் சடத்துவம். நீர் பரப்பு இழுவிசை காரணமாக விரலோடு ஒட்டுகிறது. விரலை ஈரம் செய்கிறது. விரலோடு ஒட்டிய நீர் திரள் விரலை வெளியே இழுக்கும் போது இயக்கம் பெற்று விரலோடு விரலாக வெளி வருகிறது – இது சடத்துவம். ஓடும் பஸ்சிலிருந்து கீழே இறங்கினால் சற்றே பஸ்சுடன் சற்றே முன் நோக்கி ஓடுவது போல நீர் மேலழுவதும் சடத்துவ இயக்கம் தான். ஓடும் பஸ்சின் ஓட்டம் தான் நம்மை முன் நோக்கி ஓட இயக்கம் பெற வைக்கிறது; அதே போல வேகமாக வெளியே இழுபடும் விரலின் இயக்கம் தான் நீர் துளிகளை இயக்கம் பெற வைக்கிறது.

பூனையின் நாக்கும் பாலை தொட்டு வெகு வேகமாக உள்ளிழுக்கப்படும் போது நாக்குடன் பால் வெளிவருகிறது. நொடிக்கு சுமார் 78 சென்டிமீட்டர் அதாவது மணிக்கு சுமார் மூன்று கிலோமீட்டர் வேகத்தில் பூனையின் நாக்கு உள்ளே வெளியே என பாய்கிறது என கண்டனர் ஆய்வாளர்கள். வெகு வேகமாக பாயும் நாக்கின் துணையால் பால் பூனையின் நாக்குடன் மேலே எழும்புகிறது.

வெளியே இழுபடும் விரலிலிருந்து நீர் கன நேரத்தில் ஈர்ப்பு சக்தியால் கவரப்பட்டு கீழே சொட்டுவிடும் அல்லவா? அதுபோல இந்த பாலும் ஈர்ப்பு சக்கியால் கன நேரத்தில் கிழே சொட்ட வேண்டும். இங்கு தான் பூனையின் மற்றொரு இயக்கம் செயல் படுகிறது. நாக்கு வாய்க்குள் வந்துடன் தாமதம் இன்றி மின்னல் வேகத்தில் பூனை தான் வாயை மூடிக்கொள்கிறது. ஆகவே நாக்கில் ஓட்டிவரும் பால் மறுபடி சிந்தாமல் சிதறாமல் வாயிலேயே தங்குகிறது. இதுவே பூனை பால் குடிக்கும் ரகசியம். அதுமட்டுமல்ல நாய் போல நாக்கை J வடிவில் வைத்து குடித்தல் சப்தம் மிகும். பூனை போல பாலை குடித்தல் சப்தமில்லாமல் குடித்துவிடலாம். இதுவே நாசூக்காய் சப்தமில்லாமல் சந்தடி இல்லாமல் பூனை பால் குடிக்கும் ரகசியம்.

பூனை மட்டுமல்ல பூனை இனத்தை சார்ந்த புலி சிங்கம் போன்ற விலங்குகளும் இவ்வாறு தான் நீர் அருந்துகின்றன என கண்டனர். உயிரியல் பூங்காவில் உள்ள புலி சிங்கம் முதலிய விலங்குகளை வீடியோ படமெடுத்து ஆராய்ந்து இதனை உறுதிபடுத்தினர், பெரிய நாக்கு கொண்ட புலி சிங்கம் போன்ற விலங்குகள் பூனை போல வெகு வேகத்தில் நாக்கை வாய்க்கு உள்ளும் வெளியும் செலுத்தவில்லை. அவற்றின் வேகம் சற்றே குறைவு தான். அனால் அவற்றின் நாக்கு அதிக பரப்பளவு கொண்டது, ஆகையால் அதிக நீர்மம் அவற்றின் நாக்கில் பரப்பு இழுவிசை காரணமாக பற்றி கொள்கின்றன என கண்டனர்.

So, what do you think ?