விக்கிரம் அம்பாலால் சாராபாய்

BY IN Scientist - அறிஞர்கள் 1 COMMENT ,

vikram                         

விக்கிரம் அம்பாலால் சாராபாய் (Vikram Ambalal Sarabhai, ஆகஸ்ட் 12, 1919 – டிசம்பர் 30, 1971) இந்திய இயற்பியலாளர். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வளமான குடும்பத்தில் (1919) பிறந்தவர். சுதந்திரப் போராட்டங் களில் பங்கேற்ற குடும்பம் என்பதால் காந்தி, நேரு, தாகூர் உள்ளிட்ட தலைவர்கள் அடிக்கடி இவர்களது வீட்டுக்கு வருவார்கள்.

அறிவியல், கணிதம் இவரது விருப்பப் பாடங்கள். மெட்ரிக் தேறிய பிறகு, மேற்படிப்புக்காக 1939-ல் இங்கிலாந்து சென்றார். கேம்பிரிட்ஜ் செயின்ட் ஜான் கல்லூரியில் இயற்கை அறிவியல் பயின்றார்.

இரண்டாம் உலகப்போர் மூண்டதால் நாடு திரும்பி, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் சேர்ந்தார். சி.வி.ராமனின் வழிகாட்டுதலில் காஸ்மிக் கதிர்களின் விளைவுகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். போர் முடிந்ததும், இங்கிலாந்தில் படிப்பைத் தொடர்ந்தார். முனைவர் பட்டம் பெற்ற பிறகு, நாடு திரும்பினார்.

அறிவியலில் இந்தியா முன்னேற நிறைய உழைக்க வேண்டும் என்பதை உணர்ந்தார். அதற்காக தீவிர முயற்சியில் ஈடுபட்டார். ‘ஃபிஸிக்கல் ரிசர்ச் ஆய்வுக்கூடத்தை’ (பிஆர்எல்) அகமதாபாத்தில் நிறுவி பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

அகமதாபாத் நெசவுத் தொழில் ஆராய்ச்சிக் கூடம் தொடங்கி, அதன் தலைவராக செயல்பட்டார். அகமதாபாத் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் என்ற அமைப்பை நிறுவினார். சாராபாய் கெமிக்கல்ஸ், சாராபாய் கிளாஸ், சாராபாய் இன்ஜினீயரிங் உட்பட பல தொழிற்சாலைகள் தொடங்கக் காரணமாக இருந்தார்.

நாட்டில் முறையான நிர்வாகத் துறைக் கல்வியை மேம்படுத்த, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் அமைப்பை நிறுவி அதன் தலைவராகச் செயல்பட்டார். கல்வி, சமூக மேம்பாடுகளுக்காக நேரு மேம்பாட்டு நிறுவனம் என்ற அமைப்பை நிறுவினார்.

l அணுசக்தியைப் பயன்படுத்தி, செழிப்பான கங்கை நதி வளத்தை தெற்கில் உள்ள வறட்சிப் பகுதிகளுக்குத் திருப்பி, அந்த இடங்களை வளம்பெறச் செய்ய வேண்டும் என்பதற்கான பெரிய திட்டங்களை வகுத்தார். பள்ளி மாணர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்த அகமதாபாத்தில் விக்ரம் சாராபாய் கம்யூனிட்டி அறிவியல் மையத்தை நிறுவினார்.

இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான குழு பேரவை (INCOSPAR) தொடங்கப்பட்டபோது அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். 1969-ல் இதற்கு மாற்றாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தொடங்கப்பட்டது. இந்தியாவில் முதன்முதலாக ராக்கெட்டை வடிவமைத்து, அதைச் சோதிப்பதற்கான திட்டங்களை வகுத்தார்.

செயற்கைக் கோள் ஏவும் திட்டத்தை வகுத்து, அதன் உதவியுடன் தொலைக்காட்சி மூலம் கல்வியைப் பரப்பி, 2,400 கிராமங்களில் உள்ள மக்கள் கல்வி பயில வழிசெய்தார். 1966-ல் ஹோமிபாபா இறந்ததும், அணுசக்தி துறை இயக்குநர் பதவியில் நியமிக்கப்பட்டார். வியன்னாவில் உள்ள சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, பத்மபூஷண், பத்ம விபூஷண் (மறைவுக்குப் பிறகு) ஆகிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன. தும்பா ராக்கெட் ஏவுதள நிலையத்துக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி ஆராய்ச்சி, ஆராய்ச்சிக் கல்வியின் மேம்பாட்டுக்காக கடுமையாக பாடுபட்ட விக்ரம் சாராபாய் 52-வது வயதில் (1971) மறைந்தார்.

One Comment

So, what do you think ?