Our Blog / Pondicherry Science Forum

இந்திய அரசின் புதிய கல்விக்கொள்கை – சில முக்கியக் குறிப்புகள் – நா.முத்துநிலவன்

BY IN Article NO COMMENTS YET , , , ,

இந்திய அரசு, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் இணையப் பக்கத்தில் ‘வரைவு தேசிய கல்விக்கொள்கை – சில உள்ளீடுகள்’ என்றொரு அறிக்கையினை வெளியிட்டு, (தமிழில் 99பக்கம்) இதுபற்றிய மக்கள் கருத்தைக் கேட்டுள்ளது. http://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/nep/tamil.pdf
இதைப்படித்து முடித்ததும், நான் பள்ளிக்கூடம் போன பருவத்தில்,
‘கத்தரிக்கா எங்களுக்கு டண்டணக்கு டண்டணக்கு
கைலாசம் உங்களுக்கு டண்டணக்கு டண்டணக்கு
வாழைக்கா எங்களுக்கு டண்டணக்கு டண்டணக்கு
வைகுந்தம் உங்களுக்கு டண்டணக்கு டண்டணக்கு’
– என்று துக்க வீடுகளில் பறை இசைக் கலைஞர்கள் பாடக் கேட்டது நினைவிலாடியது.

மோடி அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள ‘தேசிய’ கல்விக் கொள்கையின்படி பாடுவதானால், வெகுசிலர் மிகப்பலரைப் பார்த்து,
‘ஐ.டி.ஐ உங்களுக்கு டண்டணக்கு டண்டணக்கு
ஐ.ஐ.டி. எங்களுக்கு டண்டணக்கு டண்டணக்கு’
-என்று பாடுவதாகவே படுகிறது!

அதாவது, இந்தப் புதிய கல்விக்கொள்கை – இந்தத் திட்டத்தில் உள்ளபடியே- செயல்பாட்டுக்கு வந்தால் மேல்தட்டு வர்க்கத்தவர்க்கு மட்டுமே இனி உயர்கல்வி கிடைக்கும்; உயர்கல்வி இனி, ஏழைக்கு எட்டாக்கனியாகவே போய்விடும்!

கல்வி எதற்காக?

கல்வி அறிவுக்கானது என்பதை மாற்றி, மதி்ப்பெண்ணுக்கானது என்றும், கல்வி முன்னேற்றத்துக்கானது என்பதை மாற்றி, வேலைவாய்ப்புக்கானது என்றும், கல்வி சமூகமாற்றத்துக்கானது என்பதை மாற்றி, வணிகத்துக்கே என்றும் ஆக்கப்பட்டுள்ள கொடுமையான இன்றைய சூழலில் இந்தப் புதிய தேசியக் கல்விக்கொள்கை ‘குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதையாக’வே தோன்றுகிறது.

கல்வியை சேவையாகக் கருதிய காலம் மலையேறிவிட்டது. இப்போது, ‘கல்வி வள்ளல்’ என்றால் நிச்சயமாக கல்வி வணிகர் என்பதே பொருள்!
அண்ணாமலையார், பச்சையப்பர், அழகப்பர் இன்ன பிற சான்றோரும், கிறித்துவ மிஷினரியினரும் கல்வியை மக்கள் சேவையாகவும் மக்களோடு தொடர்புகொள்ளும் அறவழியாகவும் பார்த்த காலம் இப்போது இல்லையே!
கவிஞர் தங்கம் மூர்த்தி சொல்வது போல,
‘வயல்களை அழித்து
கல்லூரி கட்டினான்,
நல்ல அறுவடை’ – என்பதுதானே இன்றைய நிதர்சனமான உண்மை?

படித்தவர்கள் பாடம் நடத்துவதும், படிக்காதவர்கள் பள்ளிக்கூடமே நடத்துவதுமான கேலிக்கூத்துக்குப் பெயர் சேவையென்று சொல்வது எவ்வளவு பெரிய நகைமுரண்? இதை மாற்றவேண்டியது கல்வியாளர் மற்றும் சமூக ஆர்வலர்க்கும் முக்கியமாக அரசுக்கும் முதற்கடமையாகும். ஆனால், இந்தப் புதிய தேசியக் கல்விக்கொள்கை வரைவுத்திட்டத்தில் இது கல்வியை அரசிடமிருந்து நகர்த்தி, தனியாரிடம் தாராளமாக உலகமய நோக்கில் கொண்டுசெல்லவே உதவுமென்பதில் சந்தேகமில்லை!

கல்வி தருவது அரசின் கடமையில்லையா?

‘நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே’ என்று, ஆளும் அரசன் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை வரையறுத்தது மன்னர் காலப் புறநானூறு.
இப்போதும், ‘அரசின் கடமை, தமது மக்களுக்கு இலவசமான தரமான கட்டாயக் கல்வியைத் தருவது’ என்பதை நமது அரசியல் சட்டம் வலியுறுத்துகிறது. அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி வந்த மத்திய-மாநில அரசுகள் இப்போது வரும் இந்தப் புதிய கல்விக்கொள்கையின் வழியாக முற்றிலும் கல்விப்பணியிலிருந்து ஒதுங்கிக்கொண்டு, ‘புதிய கல்லூரிகளை அரசு தொடங்காது’ (அதாவது அனைத்தும் தனியாரிடமே ஒப்படைக்கப்படும்) என்பது, இந்திய எதிர்காலத்தையே இருட்டாக்கிவிடாதா?

‘கள்ளுக்கடையை அரசே ஏற்று,
கல்விக் கடையைத் தனியாரிடம் விட்டதில்
முதல் மோசம் போவது இந்த நர்சரிப் பூக்கள்தான்’
-என்பது, நான் 1980களில் எழுதி செம்மலரில் வெளிவந்த கவிதை! இப்போது இது மேலும் மோசமாகிவருவது வெட்கமும் அச்சமும் தருவதாக உள்ளதே!

‘இந்திய பல்கலைக்கழகங்களுடன் வெளிநாட்டு கல்லூரிகள் இணைந்து செயல்படலாம், கல்வி உள்கட்டமைப்புக்குச் செய்யப்படும் செலவினங்களுக்கு தனியாருக்கு வரிச்சலுகை தரப்படும், புதிய கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படாது’ என்பதான அம்சங்கள் புதிய கல்விக் கொள்கை அறிக்கையின் உள்ளீட்டில் உள்ளன. இதனால் என்ன நேரும்?

கல்வி முற்றிலும் தனியார்மயமாகும்! தாராளமயமாகும்!! உலகமயமாகும்!!!

சுருங்கச் சொன்னால், ‘காசு இருப்பவன் கல்லூரி நடத்தலாம், மேலும் காசு பார்க்கலாம் இல்லாதவர் உடல் உழைப்பு சார்ந்த வேலையில் அடிமைத் தொழில் செய்யப் போகலாம்’ என்பதுதானே? இதற்கா புதிய கல்வித்திட்டம்?
‘சாதிவெறி மதவெறி மற்றும் உள்ளூர் வெறிகள் தனி’ என்னும் கவிஞர் வல்லம் தாஜூபாலின் கவிதையைப் படிக்கும் போதெல்லாம், உள்ளூர் விவகாரங்களை எப்படி இவர்கள் உலக விவகாரங்களோடு தொடர்புபடுத்துகிறார்கள் என்று வியப்பதுண்டு!

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் உயர்ந்த கோட்பாட்டை, சாதாரண மக்களை விட உலகவியாபாரிகளே அதிகம் முழங்குவதும் இப்படித்தான்! ‘உலகத் தரத்திலான கல்வி’ என்னும் தனியார் கல்விநிறுவன முழக்கங்கள் விளம்பரப் புத்தியில் எழும் வியாபார உத்தியே! இவை ஏழைகளைக் கல்வியிலிருந்து தள்ளிவைக்கும் மந்திரப் பத்தியே, என்பதை நாம் எப்போது புரிந்துகொள்ளப் போகிறோம்? கல்வியை உள்ளூரில் உலகத் தரத்தில் இலவசமாகத் தருவதற்கான திட்டமல்லவா இன்றைய தேவை? இதை அரசே செய்ய முன்வருவதல்லவா முதற்கடமை? அரசே தனது கடமையிலிருந்து நழுவலாமா? அதற்குப் புதிய கல்விக்கொள்கை தேவையா?

படிப்பில் வெற்றி தோல்வி என்பதென்ன?

தற்போது வந்துள்ள வரைவு அறிக்கையில் 5அத்தியாயங்கள் உள்ளன. முதல் 3தலைப்புகளில் கல்விக்கான தேவை கொள்கை முழக்கங்களாக உள்ளன. 4,5ஆம் அத்தியாயங்களில்தான் கல்விக்கான செயல்திட்டங்கள் சொல்லப்பட்டுள்ளன. இவற்றில்தான் நம் கவலைக்குரிய அம்சங்கள் அதிகமாக உள்ளன. இவற்றைக் கல்வியாளர்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
அத்தியாயம்4,பிரிவு எண் 3, இப்போதுள்ள எட்டாம் வகுப்பு வரை மாணவர் தோல்வி இன்றி அடுத்த வகுப்புக்குச் செல்லும் முறை மாற்றப்பட்டு ஆறாம் வகுப்பிலிருந்து தேர்ச்சி பெறுதல் கட்டாயமாக்கப்படும் என்று சொல்கிறது.
சமூகச் சூழல் காரணமாக, மாணவர் இடைநிற்றலை தடுப்பதற்காகத்தான் 8ஆம் வகுப்பு வரை தேக்கம் செய்யக் கூடாது என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது, இதனால் ‘கல்வித் தரம்’ பாதிக்கப்படுவதாகச் சொல்லி தேக்கினால் – அதாவது ஃபெயிலாக்கினால் – பெருவாரியான முதல் தலைமுறை இரண்டாம் தலைமுறையாகக் கல்வி கற்கும் குடும்பங்களின் பிள்ளைகள் பள்ளியை விட்டு நின்றுவிடுவார்களே? இது மாற்றமா ஏமாற்றமா? மாணவர்களை விரட்டுவதற்கு ஒரு கல்வித்திட்டமா?

கல்வி சமூகத்தை முன்னேற்றவா? பின்னுக்கு இழுக்கவா?

கற்றலில் ‘பலவீனமான’ மாணவர்கள் அடையாளப்படுத்தப்பட்டு அதற்கான தீர்வுவழிமுறைகள் தரப்படுமாம். இந்தத் தீர்வுக்கான வழிகள் என்ன? தெரியாது! எதுவும் சொல்லப்படவில்லை.

வீட்டுச் சூழல் (பெரும்பாலும் இது நாட்டுச் சூழலின் பாதிப்பில் வருவதுதான்) மாணவர் படிப்பில் பின்தங்கியிருந்தால், ‘நீயெல்லாம் மாடுமேய்க்கத்தான் லாயக்கு’ என்று சொல்லி அந்தப் பிஞ்சு நெஞ்சில் அவநம்பிக்கையை விதைக்கின்ற ஒரு மோசமான ஆசிரியரைப் போல, ‘உனக்குப் படிப்பு வரல, நீ இப்பவே ஏதாவது கிடைக்கிற வேலைக்குப் போயிடு’ என்று ஒரு அரசே 8,9ஆம் வகுப்புப் படிக்கும் மாணவரை விரட்டத் திட்டம் தீட்டுவது நியாயமாகுமா?

இதுபற்றி, சுப்ரணியம் குழு அறிக்கை – அதாவது இந்த கொள்கை அறிக்கை தயாரிப்பதற்காகப் போடப்பட்ட குழு அறிக்கை – என்ன சொல்கிறது என்றால் பதினோரு வயதிலிருந்து இவ்வாறு தேர்வில் தோல்வியுற நேரும் குழந்தைகள் அவரவருக்கேற்ற தொழில் பயிற்சிக்கு அனுப்பப்படுவர்.

ஆக இந்த அறிக்கை கூறுகிற வேதகாலக் கல்வி, அதாவது குலக்கல்விக்கு மக்களை திருப்புவதும் இந்நாட்டு மற்றும் பன்னாட்டு முதலாளிகளுக்கு மலிவு விலையில் வேலைக்கு சிறார்களை தயார்ப்படுத்துவதும்தான் கல்விக் கொள்கையா? என்று கேட்கும் சமூகச் செயற்பாட்டாளர் ஓவியாவின் கேள்வியில் நியாயமிருக்கிறதல்லவா?

வரைவு அறிக்கைப் பிரிவு-4.4- மாணவர் வருகை குறையும் பள்ளிகள் அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைக்கப்படுமாம். இதனால் மீண்டும் கிராமங்களில் பள்ளிகள் இல்லாத சூழலும் மாணவர்கள் பள்ளிகளுக்கு பழைய காலம் போல் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலையும் ஏற்படும். அல்லது தனியார் கைக்கு இந்தப் பிள்ளைகளை அதிக பொருட்செலவில் கொண்டுபோய் விடவேண்டிய கட்டாயம் ஏழைகளுக்கும் ஏற்படும். இதனால் மீண்டும் கல்வியில்லாத தலைமுறை உருவாகும். இது யாருக்குச் சாதகமானது என்பது முக்கியமானது.

4.5- கலைத் திட்டம் அல்லது பாடத் திட்டம் புதுப்பித்தலும் தேர்வுமுறை சீர்திருத்தங்களும். பாடத் திட்டங்களை மாற்றியமைக்கும் பொறுப்பு தேசிய பாடத் திட்டக் குழுவிடம் (NCERT) விடப்பட இருக்கிறது.

இந்தப் பாடத்திட்டக்குழுவிற்குக் கீழ் உள்ள பள்ளிகளில்தான் அறிஞர் அம்பேத்கரை அவமதிக்கும் பாடங்கள் இருந்ததையும் தமிழ்நாட்டில் நடந்த மொழிப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் பாடத்திட்டங்கள் இருந்ததையும் நாம் நினைவு படுத்திக் கொள்வது நல்லது.

ஆசிரமங்கள் வழிகாட்டுமாம்

இதில் 4 ஆவது பிரிவு, பள்ளிகள் அருகிலிருக்கும் ஆசிரமங்களிலிருந்து தங்களுக்கான வழிகாட்டுதலை பெற்றுக் கொள்ளும் என்று கூறுகிறது.
இப்பத் தெரியுதா திட்டம் எங்கிருந்து வந்ததென்று! பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டதே! சாமியார் கூட்டம் பின்னணியில் தெரிகிறதே!

‘மதச்சார்பற்ற நாட்டில் இது போலும் ஒரு கல்விக் கொள்கைத் திட்டத்தை வகுப்பதில் உள்ள தவறு உறுத்தாத அளவிற்கு இவர்கள் மனச்சாட்சி மோசமானதாக இருக்கிறது. மேலும் ஆசிரமங்கள் நாட்டில் எத்தகைய கேவலமான குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளன என்பதை மக்களறிவார்கள். தங்கள் குழந்தைகளை இந்தச் சாமியார்களிடம் ஒப்படைக்கவா மக்கள் பள்ளிக்கு அனுப்பப் போகிறார்கள்?’ என்பது சரியான கேள்விதானே? இதற்குப் பதில் என்ன?

நயவஞ்சக முயற்சி

அனைவருக்கும் சமமான ஒரே தரமான கல்வி கிடைக்காது. ‘லெவல்-ஏ, லெவல்-பி’ என்று ஒன்பது பத்தாம் வகுப்பிலேயே பிரித்து வைத்து மாணவர்களிடமே பேதத்தை உருவாக்கப் பார்க்கும் சூழ்ச்சியிது!

இட ஒதுக்கீட்டின் பயன்களை ஒரு தலை முறையினரே இன்னும் அனுபவிக்காத நிலையில், இடஒதுக்கீடு தொடரும் என்று வரைவு அறிக்கையில் எங்குமே சொல்லப்படவில்லை. இது சமூகநீதிக்கு எதிரான நயவஞ்சக முயற்சியாகும். மெல்லக் கொல்லும் விஷமாகும்!

மதிப்பெண் அடிப்படையில் மாணவர் தகுதியைக் கணிப்பது தவறாகும். ஒவ்வொரு மாணவனின் தனித்திறன் அறிந்து கற்றுக்கொடுப்பதே நல்ல கல்வி! படிப்பில் (ஏ-லெவல், பி-லெவல்) பின்தங்கிய மாணவர்கள் என்ற சொல் அவர்களின் மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும்.

தாய்மொழிக்கு முக்கியத்துவம் தராத, சமஸ்கிருதத்தைத் தேவையின்றி உயர்கல்வியில் திணிக்கின்ற இந்தக் கல்விக் கொள்கை வரைவே இவ்வளவு மோசமாக இருந்தால், நடைமுறை என்னாகும்? என்று சிந்தித்து, இவ்வரைவில் பெருத்த தேவையான மாற்றங்கள் செய்யாமல் நடைமுறைப்படுத்துவது சமூகத்தை மீண்டும் பின்னுக்கு இழுப்பதேயாகும்.

இதுபற்றிய விவாதங்களில் ஈடுபட்டு, திருத்துவதற்கான கருத்துருக்களை இந்திய மாணவர் சங்கம், அறிவியல் இயக்கம் முன்மொழிந்திருப்பதும், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை செயல்திட்டங்களை முன்னெடுத்திருப்பதும் வரவேற்புக்குரியது.

இதோடு, இக்கல்விக் கொள்கையை இப்படியே வரவிட்டால் இன்னும் சில தலைமுறைகளை அடிமைகளாக்கும் சமூகநிலை உருவாகும் என்பதை உணர்ந்து, இக்கல்விக்கொள்கையை இப்போதே மாற்றியமைப்பதற்கான போராட்டத்தில் இறங்க மத்திய மாநில அரசு ஊழியர்-ஆசிரியர் இயக்கங்களும் பெற்றோர்களும், மாணவர்களும் முன்வரவேண்டும். தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடிக்கக் கூடாது இல்லையா?

இளைதாக முள்மரம் கொல்க, களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து
(திருக்குறள்-879)

கட்டுரையாளர்: நா.முத்துநிலவன்

‘முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!’
முதலான நூல்களின் ஆசிரியர்,
34ஆண்டுகள் அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
மின்னஞ்சல் – muthunilavanpdk@gmail.com

So, what do you think ?